போதைப் பழக்கங்களால் சீரழிந்த ஒரு கிராமம், இன்று கால்பந்து விளையாட்டால் தலை நிமிர்ந்து நிற்கிறது
1997-காலகட்டங்களில் ஒரு நடுத்தரக் குடும்பத்து மாணவனுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பிற்கு வாய்ப்புக் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் குரு மங்கள் தாஸ் சோனிக்கு எளிதாக அந்த வாய்ப்பு கைகூடியது. தங்கள் கிராமத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தன் மகனுக்குக் கிடைத்துள்ளதை எண்ணி குருமங்கள் தாசின் குடும்பமே ஆனந்தத்தில் மிதந்தது. ஆனால் அவரின் சிந்தனைகளோ தன் சொந்தக் கிராமமான ரூர்கா கலானைச் சுற்றியே இருந்தது.
1997-காலகட்டங்களில் ஒரு நடுத்தரக் குடும்பத்து மாணவனுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பிற்கு வாய்ப்புக் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் குரு மங்கள் தாஸ் சோனிக்கு எளிதாக அந்த வாய்ப்பு கைகூடியது. தங்கள் கிராமத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தன் மகனுக்குக் கிடைத்துள்ளதை எண்ணி குருமங்கள் தாசின் குடும்பமே ஆனந்தத்தில் மிதந்தது. ஆனால் அவரின் சிந்தனைகளோ தன் சொந்தக் கிராமமான ரூர்கா கலானைச் சுற்றியே இருந்தது.
பஞ்சாபின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரூர்கா கலான் கிராமம் 60 சதவிகித தலித் மக்களைக் கொண்டது. விவசாயம் மட்டுமே அடிப்படைத் தொழில் என்பதால் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருந்தாலும் ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களையும் உருவாக்கிய பெருமை உடையது. ஆனால் மங்கள் தாசின் காலத்தில் அந்தக் கிராமத்தின் இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருந்தனர். இயற்கையிலேயே கால்பந்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த மங்கள் தாஸ், தனது கிராமத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர கால்பந்து மட்டுமே ஒரே வழி என முடிவெடுத்தார். இதற்காக தனக்குக் கிடைத்த மேல்படிப்பு வாய்ப்பையும் உதறித் தள்ளினார்.
மங்கள் தாஸின் குடும்பத்தினரும் இவரின் முடிவுக்கு பச்சைக் கொடி காட்ட, ரூர்கா கலான் கிராமத்தின் இளைஞர்களுக்கு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கால்பந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். அன்று அவர் எடுத்து வைத்த முதல் அடி, இன்று பஞ்சாபில் கால்பந்து என்றாலே ரூர்கா கலான் கிராமத்தை நோக்கிக் கைகாட்டும்படி மாறியுள்ளது.
இன்று பஞ்சாபின் கால்பந்து விளையாட்டின் அடையாளமாக கூறப்படுவது ரூர்கா கலான் கிராமத்தில் குரு மங்கள் தாசால் உருவாக்கப்பட்ட Youth Football Club (YFC) என்ற அமைப்பு. இந்த அமைப்பு அளித்த பயிற்சியால் இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாநில, தேசிய வீரரைப் பார்க்க முடியும். தற்போது வரை YFC அமைப்பைச் சேர்ந்த 100 கால்பந்து வீரர்கள் பஞ்சாப் அணிக்காக தேசியப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு வயதிற்குட்பட்ட பிரிவுகளில் இந்திய சீனியர் அணிக்காக விளையாடியவர்களின் எண்ணிக்கை 15 பேர். 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட, பள்ளி, பல்கலைக்கழக அணிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
1998-இல் கால்பந்துப் பயிற்சி மட்டும் அளித்து வந்த குரு மங்கள் தாசால் தனது பயிற்சி மையத்தை, பல தடைகளைத் தாண்டி 2001-ஆம் ஆண்டுதான் Youth Football Club (YFC) என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவாக்க முடிந்தது. இதற்கு இடைபட்ட பயணம் YFC-க்கு அவ்வளவு எளிதாக இல்லை.
எடுத்த உடனே யாரும் பயிற்சிக்கு வந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கால்பந்து விளையாட்டின் முக்கியத்துவம் என்ன? விளையாட்டினால் நம் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என எடுத்துச் சொன்னோம். இதன் பலனாக மாணவர்களும் வரத் தொடங்கினர். முதலில் வாரம் ஒருமுறை காலியான இடங்களில் விளையாடுவோம். மாணவர்கள் ஆர்வத்துடனும், ஆக்ரோஷத்துடனும் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தபோது, கண்டிப்பாக ஒரு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மைதானம் அமைக்க வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை தெரிவித்த நான்கு நாட்களில் கிராம மக்களே மைதானத்தை அமைத்துத் தந்தனர். இன்று எல்லா வசதிகளையும் உடைய உயர்தர மைதானமாக அது திகழ்கிறது" என்கிறார் மங்கள்தாஸ்.
பயிற்சி பெறும் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான விளையாட்டு உபகரணங்கள், சத்தான உணவு ஆகியவை இலவசமாக அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. பொருளாதாரம் மங்கள் தாசை நெருக்கினாலும், தன்னுடைய முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். YFC மாணவர்கள் கால்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்று அதில் கிடைக்கும் பரிசுப் பணத்திலும், சைக்கிள் ஸ்டாண்டுகள் நடத்தியும், லாஹ்ரி எனப்படும் பஞ்சாப் திருவிழாக்களில் பாங்ரா நடனம் ஆடியும் தங்களுக்கான பணத்தேவையைப் பூர்த்தி செய்தனர்.
எந்த நோக்கத்திற்காக குரு மங்கள் தாஸ் YFC-யைத் தொடங்கினாரோ, அந்த நோக்கமும் சில வருடங்களில் சாத்தியப்பட்டது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடந்த இளைஞர்கள், கால்பந்து விளையாடத் தொடங்கினர். ஏழ்மையான குடும்பத்திலிருந்து கால்பந்து விளையாட வந்திருக்கும் இளைஞர்களுக்கு மங்கள் தாசின் வீடே விளையாட்டு விடுதியாக மாறியது. உணவு உட்பட அடிப்படை வசதிகள் அவரின் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன. இதனால் கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் YFC-க்குப் பயிற்சி பெற வந்தனர். படிப்பு அரசுப்பள்ளியில், பயிற்சி YFC-இல், உணவு, இருப்பிடம் மங்கள் தாசின் வீட்டில் என அனைத்தும் இலவசமாக வீரர்களுக்குக் கிடைத்தன. அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் செல்லவில்லை எனச் சொன்னபோது என் வீட்டில் ஒரு சின்ன எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை. இன்று வரை சம்பளம் என என் குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை. அவர்களும் கேட்டதில்லை. இன்று வரை எனது முயற்சிகள் அனைத்திற்கும் பக்கப் பலமாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர். இப்போதும் வருடந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நிதியை YFC-க்காக அளித்து வருகின்றனர்" என நெகிழ்கிறார் குரு மங்கள் தாஸ்.
YFC மூலம் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களில் பலர் பல்வேறு இடங்களுக்கு கால்பந்துப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றி தங்களால் முடிந்த நிதியை YFC-க்கு அளித்தனர். ஆனாலும் போதுமான நிதி என்பது கனவாகவே இருந்தது.
2008-ஆம் ஆண்டு YFC-க்கு நல்ல ஆண்டாகத் தொடங்கியது. இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட குருமங்கள் தாஸ், அங்குள்ள தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு YFC-க்காக நிதி திரட்டத் தொடங்கினார். கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து கிளப்களில் இருந்தும் நிதி கிடைக்கத் தொடங்கியது.
கிடைத்த நிதியை திட்டமிட்டு செலவழித்து YFC-யை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். 40 வீரர்கள் தங்கிப் பயிற்சி எடுக்க விடுதி, நவீன வசதிகளையும் உடைய ஜிம், 12 கிராமங்களில் கால்பந்துப் பயிற்சி அளிக்கும் கால்பந்து பயிற்சி மையங்கள், வருடந்தோறும் 2,000 குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்கள், 84 பெண்களுக்கு கால்பந்துப் பயிற்சி, 100 கபடி வீரர்களுக்கு உதவி எனத் தற்போது YFC-யின் சேவை கிளை பரப்பியுள்ளது.
10 வயதில் YFC உடன் தொடங்கிய உறவு இன்று வரை தொடர்கிறது. ரூர்கா கலான்தான் என் சொந்தக் கிராமம். வீட்டில் வருமானம் என்பது மிகவும் குறைவுதான். நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்துதான் கால்பந்தின் மேல் எனக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வம் கூடிய விரைவிலேயே கால்பந்தின் மீது காதலாக மாறியது. முதலில் நான் நன்றாக கால்பந்து விளையாடினாலும் முறையான பயிற்சி என்பது கிடைக்கவில்லை. எனது ஆர்வத்தைப் பார்த்த YFC பயிற்சியாளர்கள் எனக்குத் தேவையான பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கினர். YFC-இன் உதவியால்தான் கால்பந்தின் மீதான எனது கனவு நனவானது" என்கிற அன்வர் அலி, ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். தற்போது மும்பை கால்பந்து கிளப்புக்காக விளையாடி வரும் இவர், இந்திய கால்பந்து அணியில் விளையாடியவர். 2011-ஆம் ஆண்டு டெம்போ கிளப்புக்காக 95 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட, ‘Costliest Defender’ என்ற பெருமையும் இவருக்கு உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் YFC மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அன்வரைப் போலவே அம்ரித் பால் சிங்கும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அம்ரித்தின் திறமையைக் கண்டு கொண்ட YFC, 2006-ஆம் ஆண்டு முதல் விடுதியில் இடமளித்தது. இங்கு சிறப்பாகச் செயல்பட்ட அம்ரித் பால் சிங் 19 வயதிற்குட்பட்ட தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்வரைப் போலவே இவரும் ஒரு தொழிற்முறை கால்பந்தாட்ட வீரராகி தன்னுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவர். இப்படி YFC-ஆல் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.
கால்பந்து மட்டுமல்லாது சமுதாயக் கடமையும் தனக்கு உள்ளது என்பதை உணர்ந்த குருமங்கள் தாஸ், கால்பந்து தவிர்த்து சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். ரூர்கா கலானில் உள்ள இரண்டு அரசு தொடக்கப்பள்ளிகளையும் ஓர் உயர்நிலைப்பள்ளியையும் YFC தத்தெடுத்துள்ளது. கிராமப் பெண்கள் முன்னேற்றத்திற்காக 300 மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய கணினிப் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. மேலும் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன.
வருடந்தோறும் சர்வதேச கால்பந்து வீரர்கள் YFC-க்கு வருகை தந்து, கால்பந்து நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் 2010-இல் நடந்த world street football tournament சாம்பியன்கள் இவர்களே. பஞ்சாபின் கால்பந்து அடையாளமாக ரூர்கா கலானை மாற்றியது போல், உலகத்தின் கால்பந்து அடையாளமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தோடு குருமங்கள் தாசின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருகின்றன.