Wednesday, May 7, 2014

ஒரு ஊரில் , ஒரு ராஜா !






ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!
இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!
இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.
அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!------------ --------- --------- --------- --------- --------- -------
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போதுநம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!


Sunday, May 4, 2014

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?


தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.



ரொமான்ஸ் ரகசியம் ! ♥



ரொமான்ஸ் என்பது ஊடலின் ஒருபகுதி என்பது இன்றைய தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ரொமன்ஸை சினிமாவிற்கும் அதில் வரும் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு மட்டும் சம்பந்தமான விசயமாகவே பலர் கருதுகிறார்கள். கலாச்சாரத்தோடு ஒன்றிய நம் தேசத்தில் தம்பதியர், நான் ரெடி..! நீங்க ரெடியா? என்று நேராகவோ.. மறைமுகமாகவோ கேட்பதில்லை. ஆசை அருபது நாள் மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்து விடுவதில்லை.கணவன்-மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், தங்கள் உறவை திருப்திகரமாக்கிக் கொள்ளவும் ரொமான்ஸ் அவசியம். திருமண உறவு மூழ்கிப்போகாமல் காப்பாற்றும் ரகசிய பார்முலாவில் மிகவும் முக்கியமான விசயம் ரொமான்ஸ்! நாம் வாழும் வாழ்க்கையை கடைசிவரை அதன் கிக் குறையாமல் கலர்புல்லாக வைத்திருக்கும் உணர்வு ரொமான்ஸ்..

இனிதாக ஆரம்பிங்க

திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி கலகலப்பாக இருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் வயதை மறப்பது தான்...! ஆம் , இளைஞர்கள் திருமணத்திற்கு முன்புவரை நண்பர்களுடன் கலகலப்பாக கடி ஜோக்கும், வேடிக்கைப் பேச்சுமாக இருப்பார்கள். திருமண்ம் முடிந்த அடுத்த நிமிடமே தனக்கு ஏதோ பத்து வயது கூடிவிட்டது போல உணர ஆரம்பித்து விடுவார்கள். சரி அவன் தான் அப்படி நினைக்கிறான்-னு பார்த்தால், அவனது சொந்த பந்தம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் தரும் அட்வைஸ் வேறு இன்னும் அவன் வயதை கூட்டுகிற மாதிரி இருக்கும். கண்ணா நீ முன்ன மாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை.. இனிமேல் உன் வால்தனத்தை எல்லாம் சுருட்டி வெச்சிட்டு குடும்பஸ்தனா லட்சனமா பொருப்பா நடந்துக்கோ-னு உபதேசம் குவியும்.. இதையெல்லாம் கேட்ட அந்தப் பையன் ஓகோ குடும்பஸ்தன்-னா இப்படித்தான் இருக்கனும் போல-னு நினைக்கிறான். எந்த ஒரு விசயத்தையும் சீரியஸாக அணுகுவது தான் குடும்பஸ்தனுக்கு அழகு என்பதுபோல் நம் சமூகம் அவனுக்கு ஒரு வரைபடம் காட்டுகிறது. நாமும் அந்த வரைபடத்தில் தான் இருக்க வேண்டுமென்று தன்னைப் பொருத்திக் கொள்கிறான்..



ஒரு சேம்பிள் சொல்றேன்..
   அந்த இளைஞன் வாரத்திற்கு இரண்டு நாள் சினிமாவிற்கு போவதும்.. விசிலடித்து பாட்டு பாடுவதும்.. டிவி-யில் காதை பிழக்கும் அளவு சத்தம் வைத்து டான்ஸ் ஆடுவதுமாக இருப்பவன் எதற்காக திருமணத்திற்குப் பின் இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?
சொல்லப்போனால், திருமணத்திற்குப் பின் அவன் தன் மனைவியுடன் சேர்ந்து இதை தொடரலாமே..!
  மனைவி காலையில் அரைத் தூக்கத்துடன் பால்பூத்-ல் நிற்க்கும் போதும், பஸ்சில் கூட்டத்துடன் கூட்டமாக செல்லும் பொழுது வரும் டென்சனில், அலுவலக மேனேஜரின் காரப்பேச்சில் சிக்கும் போதும் அவளுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை உடைக்க கணவனின் விசிலும், டான்சும் உதவலாமே....!
 * அன்பு மனைவிக்கு ஒரு முழம் பூ, நாலுவரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், எதிர்பாராத முத்தம், செல்லமாக ஒரு தட்டல், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ விசயங்கள் சந்தோசப்பட வைக்கின்றன.இது மட்டும் ரொமான்ஸ் அல்ல...
*  உங்கள் கணவர் அல்லது மனைவி மிகவும் டென்சனாக ஒரு வேளையைச் செய்து கொண்டிருக்கும்பொழுது அந்த டென்சனை மறந்து அவர் ரசிக்கும் விதத்தில் ஜோக் அடிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்.
*  அடிக்கடி, அதிலும் குறிப்பாக வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் குறையும் நேரங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்ட அந்த நிமிடங்கள் பற்றியும், காதலும் படபடப்பும் பின்னிப்பிணைய நீங்கள் பேசிய டயலாக்குகள் பற்றியும் நினைத்துப் பார்த்துத் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ளும் நபரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்


Read more: http://www.puriyathaputhir.com/2014/04/blog-post_30.html#ixzz30osKZ0b4

Saturday, May 3, 2014

50 ரூபாயில் ஹிந்தி படிக்கலாம்!




ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஹிந்தியில் சான்றிதழ் படிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது மத்திய ஹிந்தி இயக்ககம்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்களும், வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட இந்தியர்களும், ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டினரும், ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதற்கு வசதியாக புதுதில்லியிலுள்ள மத்திய ஹிந்தி இயக்ககம், தொலைநிலைக் கல்வி மூலம் ஹிந்தி மொழியைக் கற்றுத் தருகிறது.

ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு போன்ற படிப்புகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் வாயிலாக கற்றுக் கொள்ளலாம். ஓராண்டு காலப் படிப்பு இது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் இப்படிப்பு துவங்கும்.

கல்வித் தகுதி: இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பை படிக்க முடியும். 15 வயதுக்கு மேற்பட்ட, ஹிந்தி மொழி தாய்மொழியாக இல்லாதவர்கள் இப்படிப்பில் சேரலாம். இந்தியர்களின் குழந்தைகள் அல்லது இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் 10 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால், அவர்களும் இந்த சான்றிதழ் படிப்பில் சேரலாம்.

ஹிந்தியில் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், மேற்கூறிய தகுதிகளுடன், மத்திய ஹிந்தி இயக்ககத்தில் ஹிந்தி மொழியில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களாக இருக்கவேண்டும்.    

இந்தியாவில் வசிப்பவர்கள், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணமாக தலா ரூ.50 செலுத்தவேண்டும். கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டராக Director, Central Hindi Directorate, Ramakrishna Puram, New Delhi – 110066 என்கிற முகவரிக்கு புதுதில்லியில் செலுத்தத்தக்க வகையில் எடுத்து அனுப்பவேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 50 அமெரிக்க டாலர்கள்.

சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளுக்குப் பிறகு, இந்தியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், 17 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பை படிக்க விரும்பும் இந்தியாவில் வசிப்பவர்களுக்கான கட்டணம் ரூ.200. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 200 டாலர்கள் அல்லது அதற்குச் சமமான தொகை.

மாதிரி விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சேர விரும்பும் படிப்பு, எந்த மீடியத்தில் படிக்க விரும்புகிறார்கள் போன்ற விவரங்களுடன், தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், எந்த நாடு, தாய்மொழி, கல்வித் தகுதி, பாலினம், ஹிந்தி பற்றிய அறிவு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய முறை போன்ற விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியக் கட்டணத்துடன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விவரங்களுக்கு: www.hindinideshalaya.nic.in

Monday, April 28, 2014

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!






சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது பால், தயிர், தேன் அல்லது தண்ணீர் ஊற்றி பெண்கள் அபிஷேகம் செய்வதை சர்வ சாதரணமாக பார்க்கலாம். சிலர் நல்ல கணவன் அமைய சிவபெருமானை வழிபடுவார்கள். இன்னும் சிலரோ குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபடுவார்கள். என்ன காரணமாக இருந்தாலும் சரி, சிவலிங்கத்திற்கு பூஜை புரிவது என்பது இந்து மதத்தில் பின்பற்றி வரும் ஒரு முக்கிய சடங்காகும். சுவாரஸ்யமான வேறு: நாள் வாரியாக வழிப்பட வேண்டிய இந்து கடவுள்கள்!!! நம்மில் பலருக்கு சிவலிங்கம் என்றால் உண்மையிலேயே என்ன என்றும் அதனை ஏன் இவ்வளவு தீவிரமாக வழிபடுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் இருக்கும். உங்களுக்கும் சிவலிங்கத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால் மேலும் படியுங்கள். 'லிங்கா' என்றால் சமஸ்கிரதத்தில் சின்னம் அல்லது குறியீடு என்ற பொருளாகும். சிவபெருமானை குறிக்கும் லிங்கம், அண்டத்திற்குரிய ஆற்றல் திறனை குறிக்கிறது. லிங்கத்தை பொதுவாக 'யோனி' என்ற வட்ட வடிவிலான அமைப்பின் மீது தான் வைத்திருப்பார்கள். யோனி என்பது பெண்மையின் ஆக்கப் படைப்பு திறன் அல்லது இயற்கை. லிங்கமும், யோனியும் சேர்ந்து தான், உயிரை உருவாக்க தேவைப்படும் ஆண் மற்றும் பெண்ணின் கட்புலனாகாத ஆற்றலை குறிக்கும். 


மூலம்

 அதர்வ வேதம் மற்றும் சிவபுராணத்தின் படி, அண்ட சராசரத்தில் முழுமையான இருள் சூழ்ந்திருந்த போது, எரிந்து கொண்டிருக்கும் முடிவில்லா ஒரு தூண் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த தூணை 'புருஷ்' அல்லது ஆண் ஆற்றல் என்று அழைத்தனர். இது சிவபெருமானை குறிக்கும். அதனால் தான் சிவபெருமானை லிங்க வடிவில் வணங்குகிறோம்.

சிவனின் குறியீடு

 சிவலிங்கமே சிவபெருமானின் குறியீடு. முழுமையான கடவுளுக்கு உருவமில்லை என்பதை இது குறிக்கிறது. உருவமற்ற இயற்கை, மௌனம் என்ற மொழியில் பேசுகிறது என்பதை இது குறிக்கிறது. சிவபெருமானே முதன்மையான கடவுள் என்பதால், சிவலிங்கம் என்பது சிவபெருமானின் குறியீடாக பார்க்கப்படுகிறது. அண்டத்திற்குரிய முட்டை வடிவில் அண்டத்தையும் இது குறிக்கும்.

மூன்று பகுதிகள்

 சிவலங்கத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. கீழ் பகுதியை 'பிரம்ம பிதா' என்றும், நாடு பகுதியை 'விஷ்ணு பிதா' என்றும் மேற் பகுதியை 'சிவ பிதா' என்றும் அழைக்கப்படுகிறது.

பளிங்கினாலான சிவலிங்கம்

 பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்படிக லிங்க வழிபாடு தான் சிறந்த வழிபாட்டு வகையாக கருதப்படுகிறது. காரணம் அந்த பொருளுக்கு அதற்கென சொந்தமாக நிறம் கிடையாது. அது எதனோடு தொடர்பில் ஈடுபடுகிறதோ அதன் நிறத்தையே பெறுகிறது. அதனால் அது 'நிர்குண பிரம்மன' அல்லது இயல் பண்புகள் முற்றிலும் ஒழிந்த முதன்மை சக்தி அல்லது உருவமற்ற சிவனை குறிக்கும்.

பக்தர்களுக்கு லிங்கத்தின் முக்கியத்துவம்

 மிகவும் புதிரானதாக கருதப்படும் சிவலிங்கத்தில் விளக்க முடியாத மிகப்பெரிய சக்தி அடங்கியுள்ளது. சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையை குறிப்பதால், இதில் தெய்வீக சக்தி அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இது மனதை செறிவூட்ட தூண்டி, ஆன்மீக ஆற்றலையும் அளிக்கிறது. இது வெறும் கல்லல்ல. மாறாக இது ஒரு பக்தர் தன்னிலை மறந்து, முதன்மை கடவுளிடம் நேரடியாக தொடர்பை ஏற்படுத்த உதவும் ஒரு கருவி எனலாம்.

Friday, April 25, 2014

குழந்தை வளர்ப்பு:உங்க பசங்கள ஈஸியா வழிக்கு கொண்டு வரணுமா?


டாக்டர். ராஜ்மோகன் - Saturday, January 14, 2012
How to guide children's behavior? - Child Care Tips and Informations in Tamil
"டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு... எதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...
பெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை" - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.
'இந்தப் புலம்பல்களுக்குத் தீர்வு என்ன?' - சென்னையைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டோம்.
"முதலில் இப்படிப் புலம்புவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். ஒரு பொருளை மூடிவைத்திருந்தால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் எழுவது எப்படி இயல்பானதோ, அதேபோலதான் செய்யாதே என்று சொல்வதை செய்துபார்க்க நினைப்பதும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதே மனநிலை இருக்கும். நீங்கள் செய்யாதே என்று சொல்லியும் உங்கள் குழந்தை அதைச் செய்கிறது என்றால், நீங்கள் சொல்லும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். 'அதைச் செய்யாதே... இதைத் தொடாதே' என்று வீடே அதிரும்படி கத்தக் கூடாது. 'சொல்வதை மீறி இப்படிச் செய்தால் என்ன செய்வேன் தெரியுமா?'என்று மிரட்டவும் கூடாது. குழந்தைகளை எப்போதுமே இதுபோல நெகட்டிவாக அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது. இப்படி பேசினால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதற்காகவே உங்கள் வார்த்தையை மீறி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னதைச் செய்துகாட்ட நினைப்பார்கள்.
உங்கள் அதிரடி அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றி, இதமாக எடுத்துச் சொல்லிப் பாருங்களேன். வேண்டாத, உடலுக்குத் தீங்குதரக்கூடிய செயல்களை குழந்தை செய்தால் ஆத்திரப்படாமல் வார்த்தைகளில் குழைவைக் கூட்டி, 'அதையெல்லாம் செய்யக்கூடாது கண்ணா...' என்று சொன்னால் அதற்குக் கிடைக்கும் ரிசல்ட்டே தனிதான். அதையும் மீறி குழந்தை செய்தால், 'நீ இப்படி செய்தால் இப்படி ஏற்படலாம்' என்று அந்தச் செயலால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் கற்பனையைச் சேர்த்து அவர்களை மிதமாக பயமுறுத்தலாம். இப்படிச் சொல்லும்போது நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும், அடுத்தமுறை அந்தச் செயலை செய்ய குழந்தை யோசிக்கும். இதுதான் உங்கள் வெற்றி!
பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது? வேறு வழியே இல்லை. அவர்கள் வழிக்கு நீங்கள் செல்ல வேண்டியதுதான். தேவையற்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, அவர்களுக்கு ஆர்வமான விளையாட்டுகளைப் பற்றி பேசி அவர்களது கவனத்தை திசைதிருப்பலாம். உதாரணமாக, படிக்கிற நேரத்தில் விளையாடக் கூடாது என்று கண்டிப்பு காட்டாமல், படித்து முடித்துவிட்டால் அடுத்து என்ன புது விளையாட்டு விளையாடலாம் என்று குழந்தையிடமே ஆலோசனை செய்தால், குழந்தை உற்சாகமாகி படிக்கத் துவங்கிவிடும். தவிர, எப்போதும் படிப்பைப் பற்றி மட்டுமே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால், படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும். இதைவிட, படிப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதனால் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் பெருமையையும் எடுத்துச் சொல்லலாம். 'நீ நல்லா படிச்சாதான் புதுப்புது விளையாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கும் அறிவு வேண்டும் இல்லையா?' என்று சொன்னால் எந்தக் குழந்தைதான் படிப்பை வெறுக்கும்?
தன் குழந்தை படிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் என்னிடம் ஒரு தம்பதி வந்தனர். எப்போதும் நீச்சல் அடிப்பதால் படிப்பு கெட்டுவிடுகிறது என்பது அவர்கள் வாதம். குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெற்றோருக்குத்தான் முதலில் கவுன்சிலிங் கொடுத்தேன். 'குழந்தை நீச்சல் அடிப்பதை ஊக்கப்படுத்தாமல், எப்பவும் படிப்பையே அவனுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருக்காமல், நீச்சல் பற்றியும் அவனிடம் கலந்துபேசுங்கள். அந்தப் பேச்சுக்கு நடுவே விளையாட்டாகவே படிப்பைப் பற்றி நினைவூட்டுங்கள். அதனால், அவனுக்கே படிப்பின் மேல் அக்கறை வரும்" என்றேன். இப்போது அந்தக் குழந்தை படிப்பிலும் கெட்டிக்காரனாக இருக்கிறான், நீச்சல் போட்டிகளிலும் முன்னேறிவருகிறான்.
குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் மனநிலைக்கு வரமாட்டார்கள். பெற்றோர்தான் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிப்போக வேண்டும். அவர்களை, அவர்கள் போக்கில் விட்டுத்தான் நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அப்பா, அம்மா சொல்வது நம் நல்லதுக்குத்தான் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு குழந்தைகள் உலகத்துக்குள் நாம் செல்ல வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். ஒரே வரியில் சொல்வதென்றால், அவர்களை நண்பர்களாக அணுக வேண்டும்" என்றார் டாக்டர் ராஜ்மோகன்.

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்கிட்டே இருங்க...!


Be Aware of Your Child's Friends - Child Care Tips and Informations in Tamil
'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்' என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
முக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
'மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது 'உற்சாக டானிக்'கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.
தாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.
இயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சொர்க்கம்' எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் 'உன்னைப் பெற்ற தாயின் காலடியில்' என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.