உலகை வெல்ல இன்னொரு தமிழன் !
''எனக்கு, கிரிக்கெட் என்றால் உயிர். அதைவிட தாத்தா மேலே உயிர். வயதான அவரால் என்னோடு கிரிக்கெட் விளையாட முடியலை. அதனால், நான் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டேன். அதுதான் இன்னைக்கு என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டி இருக்கு. முதல் நன்றி தாத்தாவுக்கு!'' என்று பூரிப்புடன் சொல்கிறார் அரவிந்தன்.
சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டித் தொடரில்... ஓப்பன் செஸ் போட்டியில் 6 கிராண்ட் மாஸ்டர்களோடு மோதி, சாம்பியன் பட்டம் வென்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சதுரங்க இளவரசன், அரவிந்தன். 14 வயதுக்குள் இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் அரவிந்தன் '''எனக்கு கார்ல்சன்தான் ஃபேவரைட். அவர் ஆடும் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில், சென்னையில் உலக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனை வெல்கம் பண்ணி போட்டி மேடைக்கு அழைத்துச்செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது'' என்கிறார் அரவிந்தன்.
இவரது சொந்த ஊர் மதுரை. ''அரவிந்தன், செஸ்ஸில் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்ளவைத்தேன். அவற்றில் எளிதாக வெற்றிபெற்றான். பிறகு, பயிற்சியாளர் பிரசாத்திடம் அனுப்பினோம். மாநில அளவில் நடந்த செஸ் போட்டியில் நான்காவது இடம் பிடித்தான். அப்போ, அவன் நான்காவதுதான் படித்துக்கொண்டிருந்தான்'' என்கிறார், அம்மா தெய்வானை. அரவிந்தனின் சதுரங்க எதிர்காலத்துக்காகவே இப்போது சென்னைக்கு மாறிவிட்டார்கள்.
2011-ம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய செஸ் போட்டியில்... இரண்டாவது இடம், இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்டோர் செஸ் போட்டியில் முதல் இடம், கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் முதல் இடம், 2012-ம் ஆண்டு உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம், அதே ஆண்டு இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் எனத் தொடர்கிறது சாதனைப் பட்டியல். India's youngest title winner என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
''இந்த ஆண்டு ஈரானில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று, எல்லோரின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். அரவிந்தனும் கார்ல்சனைப் போலவே, முதலில் விரைவாகக் காய் நகர்த்தும் பாணியில்தான் விளையாடுகிறான். இந்த வகை ஆட்டம் கொஞ்சம் சவாலானது. ஆபத்தானதும்கூட. மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும்'' என்றார் அரவிந்தனின் தற்போதைய பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ்.
நண்பனுடன் விளையாடிக்கொண்டிருந்த அரவிந்தன், ''எனக்கு இந்த மாதிரி சவால் ஆட்டம்தான் பிடிச்சிருக்கு. சவால் இருந்தால்தானே அங்கிள் லைஃப் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்'' என்று புன்னகையுடன் சொல்லியபடி சிப்பாயை நகர்த்துகிறார்.
உலக அளவில் சதுரங்கத்தில் சாதனைகள் படைக்க இன்னொரு தமிழன் ரெடி!
No comments:
Post a Comment