இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அரவிந்த் சிதம்பரம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். அவருக்கு ஆனந்த் உள்ளிட்ட பல செஸ் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 16 வயதுக்குட்பட்ட உலக இளைஞர் ஒலிம்பியாட் போட்டியின் 9-வது சுற்றில் ரொமானியாவை சேர்ந்த மிஹ்னியா கொஸ்டாச்சியை 59 நகர்த்தல்களில் தோற்கடித்தார் அரவிந்த். இதைத் தொடர்ந்து 2500 ரேட்டிங்கைத் தாண்டினார். இதனால் அவர் கிராண்ட் மாஸ்டர் ஆனது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இதுபற்றி கூறும்போது, “வாழ்த்துகள் அரவிந்த் சிதம்பரம். கிராண்ட் மாஸ்டர் கிளப்புக்கு உங்களை வரவேற்கிறேன். அரவிந்த் பெரிய வீரர்கள் சிலரை தோற்கடித்துள்ளார். சென்னையில் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்” என்று பாராட்டியுள்ளார்.
பிரபல செஸ் நிபுணரும் வீராங்கனையுமான சூசன் போல்கர், “அரவிந்தால் மிகவும் பெருமைப்படுகிறோம். அருமையான பணி. வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். அரவிந்தின் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் கூறும்போது, “அரவிந்த் வெளிநாட்டுப் போட்டிகளில் ஆடுவதற்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அரவிந்தை நினைத்து பெருமைப் படுகிறேன் ” என்றார்.
No comments:
Post a Comment