Friday, August 1, 2014

போதையால் வீழ்ந்தோம்... கால்பந்தால் எழுந்தோம்..!

போதைப் பழக்கங்களால் சீரழிந்த ஒரு கிராமம், இன்று கால்பந்து விளையாட்டால் தலை நிமிர்ந்து நிற்கிறது

1997-காலகட்டங்களில் ஒரு நடுத்தரக் குடும்பத்து மாணவனுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பிற்கு வாய்ப்புக் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் குரு மங்கள் தாஸ் சோனிக்கு எளிதாக அந்த வாய்ப்பு கைகூடியது. தங்கள் கிராமத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தன் மகனுக்குக் கிடைத்துள்ளதை எண்ணி குருமங்கள் தாசின் குடும்பமே ஆனந்தத்தில் மிதந்தது. ஆனால் அவரின் சிந்தனைகளோ தன் சொந்தக் கிராமமான ரூர்கா கலானைச் சுற்றியே இருந்தது.

பஞ்சாபின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரூர்கா கலான் கிராமம் 60 சதவிகித தலித் மக்களைக் கொண்டது. விவசாயம் மட்டுமே அடிப்படைத் தொழில் என்பதால் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருந்தாலும் ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களையும் உருவாக்கிய பெருமை உடையது. ஆனால் மங்கள் தாசின் காலத்தில் அந்தக் கிராமத்தின் இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருந்தனர். இயற்கையிலேயே கால்பந்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த மங்கள் தாஸ், தனது கிராமத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர கால்பந்து மட்டுமே ஒரே வழி என முடிவெடுத்தார். இதற்காக தனக்குக் கிடைத்த மேல்படிப்பு வாய்ப்பையும் உதறித் தள்ளினார்.

மங்கள் தாஸின் குடும்பத்தினரும் இவரின் முடிவுக்கு பச்சைக் கொடி காட்ட, ரூர்கா கலான் கிராமத்தின் இளைஞர்களுக்கு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கால்பந்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். அன்று அவர் எடுத்து வைத்த முதல் அடி, இன்று பஞ்சாபில் கால்பந்து என்றாலே ரூர்கா கலான் கிராமத்தை நோக்கிக் கைகாட்டும்படி மாறியுள்ளது.

இன்று பஞ்சாபின் கால்பந்து விளையாட்டின் அடையாளமாக கூறப்படுவது ரூர்கா கலான் கிராமத்தில் குரு மங்கள் தாசால் உருவாக்கப்பட்ட Youth Football Club (YFC) என்ற அமைப்பு. இந்த அமைப்பு அளித்த பயிற்சியால் இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாநில, தேசிய வீரரைப் பார்க்க முடியும். தற்போது வரை YFC  அமைப்பைச் சேர்ந்த 100 கால்பந்து வீரர்கள் பஞ்சாப் அணிக்காக தேசியப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு வயதிற்குட்பட்ட பிரிவுகளில் இந்திய சீனியர் அணிக்காக விளையாடியவர்களின் எண்ணிக்கை 15 பேர். 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட, பள்ளி, பல்கலைக்கழக அணிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

1998-இல் கால்பந்துப் பயிற்சி மட்டும் அளித்து வந்த குரு மங்கள் தாசால் தனது பயிற்சி மையத்தை, பல தடைகளைத் தாண்டி 2001-ஆம் ஆண்டுதான் Youth Football Club (YFC)  என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவாக்க முடிந்தது. இதற்கு இடைபட்ட பயணம் YFC-க்கு அவ்வளவு எளிதாக இல்லை.

 எடுத்த உடனே யாரும் பயிற்சிக்கு வந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கால்பந்து விளையாட்டின் முக்கியத்துவம் என்ன? விளையாட்டினால் நம் பொருளாதாரத்தை எப்படி உயர்த்தலாம் என எடுத்துச் சொன்னோம். இதன் பலனாக மாணவர்களும் வரத் தொடங்கினர். முதலில் வாரம் ஒருமுறை காலியான இடங்களில் விளையாடுவோம். மாணவர்கள் ஆர்வத்துடனும், ஆக்ரோஷத்துடனும் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தபோது, கண்டிப்பாக ஒரு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மைதானம் அமைக்க வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை தெரிவித்த நான்கு நாட்களில் கிராம மக்களே மைதானத்தை அமைத்துத் தந்தனர். இன்று எல்லா வசதிகளையும் உடைய உயர்தர மைதானமாக அது திகழ்கிறது" என்கிறார் மங்கள்தாஸ்.

பயிற்சி பெறும் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான விளையாட்டு உபகரணங்கள், சத்தான உணவு ஆகியவை இலவசமாக அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. பொருளாதாரம் மங்கள் தாசை நெருக்கினாலும், தன்னுடைய முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். YFC மாணவர்கள் கால்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்று அதில் கிடைக்கும் பரிசுப் பணத்திலும், சைக்கிள் ஸ்டாண்டுகள் நடத்தியும், லாஹ்ரி எனப்படும் பஞ்சாப் திருவிழாக்களில் பாங்ரா நடனம் ஆடியும் தங்களுக்கான பணத்தேவையைப் பூர்த்தி செய்தனர்.

எந்த நோக்கத்திற்காக குரு மங்கள் தாஸ் YFC-யைத் தொடங்கினாரோ, அந்த நோக்கமும் சில வருடங்களில் சாத்தியப்பட்டது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடந்த இளைஞர்கள், கால்பந்து விளையாடத் தொடங்கினர். ஏழ்மையான குடும்பத்திலிருந்து கால்பந்து விளையாட வந்திருக்கும் இளைஞர்களுக்கு மங்கள் தாசின் வீடே விளையாட்டு விடுதியாக மாறியது. உணவு உட்பட அடிப்படை வசதிகள் அவரின் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டன. இதனால் கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் YFC-க்குப் பயிற்சி பெற வந்தனர். படிப்பு அரசுப்பள்ளியில், பயிற்சி YFC-இல், உணவு, இருப்பிடம் மங்கள் தாசின் வீட்டில் என அனைத்தும் இலவசமாக வீரர்களுக்குக் கிடைத்தன. அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் செல்லவில்லை எனச் சொன்னபோது என் வீட்டில் ஒரு சின்ன எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை. இன்று வரை சம்பளம் என என் குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை. அவர்களும் கேட்டதில்லை. இன்று வரை எனது முயற்சிகள் அனைத்திற்கும் பக்கப் பலமாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர். இப்போதும் வருடந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நிதியை YFC-க்காக அளித்து வருகின்றனர்" என நெகிழ்கிறார் குரு மங்கள் தாஸ்.

YFC மூலம் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களில் பலர் பல்வேறு இடங்களுக்கு கால்பந்துப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றி தங்களால் முடிந்த நிதியை YFC-க்கு அளித்தனர். ஆனாலும் போதுமான நிதி என்பது கனவாகவே இருந்தது.

2008-ஆம் ஆண்டு YFC-க்கு நல்ல ஆண்டாகத் தொடங்கியது. இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட குருமங்கள் தாஸ், அங்குள்ள தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு YFC-க்காக நிதி திரட்டத் தொடங்கினார். கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து கிளப்களில் இருந்தும் நிதி கிடைக்கத் தொடங்கியது.

கிடைத்த நிதியை திட்டமிட்டு செலவழித்து YFC-யை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். 40 வீரர்கள் தங்கிப் பயிற்சி எடுக்க விடுதி, நவீன வசதிகளையும் உடைய ஜிம், 12 கிராமங்களில் கால்பந்துப் பயிற்சி அளிக்கும் கால்பந்து பயிற்சி மையங்கள், வருடந்தோறும் 2,000 குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்கள், 84 பெண்களுக்கு கால்பந்துப் பயிற்சி, 100 கபடி வீரர்களுக்கு உதவி எனத் தற்போது YFC-யின் சேவை கிளை பரப்பியுள்ளது.

10 வயதில் YFC உடன் தொடங்கிய உறவு இன்று வரை தொடர்கிறது. ரூர்கா கலான்தான் என் சொந்தக் கிராமம். வீட்டில் வருமானம் என்பது மிகவும் குறைவுதான். நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்துதான் கால்பந்தின் மேல் எனக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வம் கூடிய விரைவிலேயே கால்பந்தின் மீது காதலாக மாறியது. முதலில் நான் நன்றாக கால்பந்து விளையாடினாலும் முறையான பயிற்சி என்பது கிடைக்கவில்லை. எனது ஆர்வத்தைப் பார்த்த YFC பயிற்சியாளர்கள் எனக்குத் தேவையான பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கினர். YFC-இன் உதவியால்தான் கால்பந்தின் மீதான எனது கனவு நனவானது" என்கிற அன்வர் அலி, ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். தற்போது மும்பை கால்பந்து கிளப்புக்காக விளையாடி வரும் இவர், இந்திய கால்பந்து அணியில் விளையாடியவர். 2011-ஆம் ஆண்டு டெம்போ கிளப்புக்காக 95 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட, ‘Costliest Defender’  என்ற பெருமையும் இவருக்கு உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் YFC  மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அன்வரைப் போலவே அம்ரித் பால் சிங்கும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அம்ரித்தின் திறமையைக் கண்டு கொண்ட YFC, 2006-ஆம் ஆண்டு முதல் விடுதியில் இடமளித்தது. இங்கு சிறப்பாகச் செயல்பட்ட அம்ரித் பால் சிங் 19 வயதிற்குட்பட்ட தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்வரைப் போலவே இவரும் ஒரு தொழிற்முறை கால்பந்தாட்ட வீரராகி தன்னுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவர். இப்படி YFC-ஆல் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கால்பந்து மட்டுமல்லாது சமுதாயக் கடமையும் தனக்கு உள்ளது என்பதை உணர்ந்த குருமங்கள் தாஸ், கால்பந்து தவிர்த்து சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். ரூர்கா கலானில் உள்ள இரண்டு அரசு தொடக்கப்பள்ளிகளையும் ஓர் உயர்நிலைப்பள்ளியையும் YFC தத்தெடுத்துள்ளது. கிராமப் பெண்கள் முன்னேற்றத்திற்காக 300 மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய கணினிப் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. மேலும் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

வருடந்தோறும் சர்வதேச கால்பந்து வீரர்கள் YFC-க்கு வருகை தந்து, கால்பந்து நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் 2010-இல் நடந்த world street football tournament  சாம்பியன்கள் இவர்களே. பஞ்சாபின் கால்பந்து அடையாளமாக ரூர்கா கலானை மாற்றியது போல், உலகத்தின் கால்பந்து அடையாளமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தோடு குருமங்கள் தாசின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருகின்றன.

சக்சஸ் ஐ.ஏ.எஸ்.! அசத்தல் வெற்றி வியூகங்கள்

ந்தியாவை நிர்வகிக்கும், அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது குடியுரிமைப் பணித் தேர்வுகள் (Civil Services Examination). இந்தத் தேர்வுகளில், தமிழர்களால் அழுத்தமான முத்திரைப் பதிக்க முடிவது இல்லை என்ற வருத்தங்களுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான பெரும்பாலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழர் என்பது எத்தனை நகைமுரண். அந்தத் தமிழர், ராசிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்!
டெல்லியில் ரவீந்திரன் நடத்திவரும் 'வாஜிராம் அண்ட் ரவி ஐ.ஏ.எஸ் இன்ஸ்டிட்யூட்’தான் இந்தியாவின் நம்பர் ஒன் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் என்று வட இந்திய ஊடகங்கள் கொண்டாடுகின்றன. இந்த வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வில், டாப் 10 இடங்களில் முதல் இடம் பிடித்த மாணவர் உட்பட 8 பேர் இங்கே பயிற்சி பெற்றவர்களே. அதோடு முதல் 100 ரேங்க் பிடித்தவர்களுள் 70 மாணவர்கள் ரவீந்திரனின் தயாரிப்புதான். ஆனால், ரவீந்திரனிடம் ஒரு இ-மெயில் ஐ.டி-கூட இல்லை. கணினி, வாட்ஸ்-அப் போன்ற தவிர்க்க முடியாத தொழில்நுட்பங்களுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு வேலை பளு. கடந்த 35 வருடங்களில் 5,000 சிவில் சர்வீசஸ் அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறார் என்றால், அந்தப் பளுவின் வீரியத்தை உணர முடிகிறது. சென்னை வந்திருந்த ரவீந்திரனை, தேநீர் இடைவேளை ஒன்றில் சந்தித்தேன்...
''நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமம் எனக்குச் சொந்த ஊர். பஞ்சாயத்து போர்டு, அரசாங்கப் பள்ளிகளில்தான் படிப்பு. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பட்டம். எம்.ஏ அரசியல், எல்.எல்.பி படிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். ஏஷியன் ஆப்பிரிக்கன் கன்சல்டன்ட் கமிட்டியில் சட்ட ஆலோசனை நிபுணராக இருந்த வேலாயுதம்தான் 1976-ல் இந்த இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பித்தார். நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு நான் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டிருந்தேன். அந்த அனுபவம்தான் வேலாயுதம் இன்ஸ்டிட்யூட்டில் என்னைச் சேர்த்தது. 48 வருடங்களுக்கு முன் சின்ன அறை ஒன்றில் மிகச் சில மாணவர்களோடு ஆரம்பித்தோம். இப்போது 25 ஆயிரம் சதுர அடிக்கு பரந்து விரிந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறது எங்கள் இன்ஸ்டிட்யூட். பொது அறிவு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், புவியியல், சமூகவியல், உளவியல், வணிகவியல்... இந்த எட்டுப் பாடங்களுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.
எங்கள் மையத்தில் சேர, தகுதி தேர்வு எதுவும் கிடையாது. அது கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகளும் உண்டு!'' என்றவரிடம் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது தொடர்பான கேள்விகளை அடுக்கினேன்.
''சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது?''
'''எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது’ என்பதில்தான் இந்தத் தேர்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. எப்படிப் படிப்பது எனத் தெரியாமல் எதைப் படித்தாலும் பயன் இல்லை. 'எப்படிப் படிப்பது?’ என்பதைப் புரிந்துகொள்ள, 'ப்ரிசிஸ் ரைட்டிங்’ (Precis writing) எனப்படும் சுருக்கமாக எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். 300 வார்த்தைகள் உள்ள ஒரு பத்தியில் இருக்கும் செய்தியை, அதன் சுவாரஸ்யமும் உண்மைத்தன்மையும் குலையாமல் 100 வார்த்தைகளுக்குள் சுருக்கி எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் திறமை இருந்தாலே எந்தத் தேர்வையும் எளிதில் சமாளிக்கலாம்.
ஒரு புத்தகத்தைப் படித்தால், அதன் அனைத்து பக்கங்களில் இருக்கும் செய்திகளையும் பதிந்துகொள்ள நம் மூளை, கம்ப்யூட்டர் இல்லை. குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும். அதனால் நாமே ஒரு செய்தி அல்லது கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் புரிந்துகொண்டு, அதை மட்டும் நினைவில் நிறுத்தப் பழக வேண்டும். பிறகு, அந்த நினைவுக் குறிப்புகளைக்கொண்டே, நான்கு பக்கக் கட்டுரையோ, நாலாயிரம் வார்த்தை கட்டுரையோ எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை திறமையைத்தான் முதலில் எங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம்!
அடுத்து, 'என்கொய்ரிங் மைண்ட்’ பயிற்சி கொடுப்போம். அதாவது கேள்வி கேட்டு, அதற்குப் பதில் கண்டுபிடிப்பது. எதைப் படித்தாலும் அதில் சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி, என்ன - இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்தால் தெளிவு அதிகரிக்கும். இதில் ஒரு கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டால் அது இன்னொரு கேள்விக்குக் கொண்டுபோகும். அந்தக் கேள்விக்கான பதில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கு அழைத்துச்செல்லும். இப்படித் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு படித்தால் தேர்வில் வெற்றி சுலபம்.
ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு என்பது, ஒரே நேரத்தில் மூன்று முதுகலைப் பட்டத்துக்கான தேர்வுகளை எழுதுவதுபோல சிரமமானது. அவ்வளவு பாடங்களைப் படிக்கும்போது அதில் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்ற தெளிவு வேண்டும்!''
''சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் புதிய பாடத் திட்டம், தமிழக மாணவர்களைத் திணறச்செய்கிறதே?''
''திணறுகிறார்கள் என்று சொல்ல வேண்டாம்; சின்னத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிசாட் சிலபஸ் புதுசு, ஜெனரல் ஸ்டடீஸ் மதிப்பீட்டு முறைகள் புதுசு என்பதால் இந்தச் சிக்கல் இருக்கலாம்! அதற்கு முதல் காரணம் யூ.பி.எஸ்.சி கொண்டுவந்த Civil Services Aptitude Test (CSAT)  என்ற புதிய பாடத் திட்டம்தான். இரண்டாவது காரணம், முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு முக்கியத்துவம் அளித்து, விருப்பப் பாடத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், இந்தத் தற்காலிகத் தொய்வில் இருந்து தமிழக மாணவர்கள் விரைவில் பிக்-அப் ஆவார்கள். சிசாட் கஷ்டமாக இருக்கும் என்பது ஒரு மாயை. அந்தப் பாடத் திட்டத்தின் தரம் 10-ம் வகுப்பு பாடத் திட்டத்துக்கு ஒப்பானது.
முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு 200 மார்க். சிசாட்-க்கு 200 மார்க். இதில் இரண்டிலும் சேர்த்து 250 மார்க் வாங்கினால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்துவிடலாம். ஜெனரல் ஸ்டடீஸில், 100 கேள்விகளுக்கு 200 மார்க். அதற்கு 2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். சிசாட்டில் 80 கேள்விகளுக்கு 200 மார்க். அதே இரண்டு மணி நேரம்தான். ஆனால், 70 சதவிகித மாணவர்கள், அந்தப் பேப்பரை எழுதி முடிப்பது இல்லை. சிசாட்டில் 65 முதல் 72 கேள்விகளுக்கேனும் கண்டிப்பாகப் பதில் எழுதியாக வேண்டும். அப்போதுதான் தேர்ச்சிபெற முடியும். ஏனெனில், ஜெனரல் ஸ்டடீஸில் சராசரியாக 110 மதிப்பெண்கள் வரைதான் வாங்க முடியும். ஆனால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்ய குறைந்தபட்சமே 210 மதிப்பெண்கள் தேவை. எனவே, சிசாட்டில் 120 மதிப்பெண்களேனும் பெற முயற்சிக்க வேண்டும். சிசாட்டில் 55 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க முடிந்தால், தேர்வு அறையிலேயே நமது ரிசல்ட்டைக் கணித்துவிடலாம்! சிசாட்டில் ஜெயிக்க நிறையப் பயிற்சி, கடுமையான முயற்சி மூலம் பதில் அளிக்கும் வேகத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று நாட்களேனும் சிசாட் தேர்வுக்குப் பயிற்சியெடுக்க வேண்டும். எத்தனை இன்ஸ்டிட்யூட் பேப்பர்களை வாங்கி பயிற்சி எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு சிசாட் தேர்ச்சி எளிமையாக இருக்கும்!''
''ஜெனரல் ஸ்டடீஸுக்கு எந்த மாதிரி உழைக்க வேண்டும்?''
''இந்திய வரலாறு, இந்தியா மற்றும் உலகப் புவியியல், இந்தியப் பொருளாதாரம், பொது அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்.சி.ஆர்.டி பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதே தலைப்புகளில் கிராஜுவேட் லெவல் புத்தகங்களையும் ஊன்றிப் படிக்கலாம். செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும். பாடப் புத்தக அறிவை மட்டுமே கொண்டு ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாது. நடப்பு விஷயங்களைச் சம்பந்தப்படுத்தித்தான் கேள்வித்தாள்களையே அமைப்பார்கள். உதாரணமாக, 'முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்’ என்று செய்தி வந்தால், 'முன்ஜாமீன் என்றால் என்ன, யாரெல்லாம் முன்ஜாமீன் கொடுக்க முடியும், முன்ஜாமீனுக்கான நிபந்தனைகள் என்ன, யாருக்கு எல்லாம் முன்ஜாமீன் தர முடியாது?’ போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்!''
''நேர்முகத் தேர்வுக்கான டிப்ஸ்?''
''அது இன்டர்வியூ மட்டுமல்ல... உங்கள் ஆளுமையை முழுமையாகப் பரிசோதிக்கும் பெர்சனாலிட்டி டெஸ்ட்டும்கூட. நேர்முகத் தேர்வில் பொய் சொல்லக் கூடாது. ஏனென்றால், ஜீனியஸ் அறிவாளியாக இருந்தாலும் உங்களின் அடிப்படை குணநலன்கள் சரியில்லை என்றால், தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தெரிந்ததைச் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் 'தெரியவில்லை’ என நேர்மையாகச் சொல்லிவிட வேண்டும். 'இதுவாகத்தான் இருக்கும்’ என யூகம் செய்துகொண்டு பதில் சொல்லக் கூடாது. குடிமைப்பணிகளுக்கு இரக்க மனப்பான்மை, உதவும் குணம் அவசியம். அதனால், எளியவர்களுக்கு உதவும் மனம் உள்ளவர்கள் என்று நினைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் முன்னுரிமை அளிப்பார்கள்.
'ஐ.ஏ.எஸ்-ல் ஏன் சேர வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 'சேவை செய்வதற்காக’ என்று நீங்கள் பதில் அளித்தால், 'எந்தப் பிரிவில் சேவை செய்ய விருப்பம்?’ என்று அடுத்த கேள்வி எழும். 'ஊரக வளர்ச்சி’ என்று பதில் அளித்தால், அது தொடர்பான ஆழமான கேள்வி கேட்கப்படும். ஆக, பொய் சொன்னால், ஒரு கட்டத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.
நேர்முகத் தேர்வு நடத்தும் உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்வது, நீங்கள் இருக்கையில் அமரும் பாங்கு, பதில் தெரியாவிட்டால் அதை வெளிப்படுத்தும் தன்மை... என உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் அங்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு கமிட்டியில் ஓர் ஆண் சேர்மனாக இருந்தாலும், பெண் உறுப்பினர் ஒருவர் இருந்தால், அந்தப் பெண் உறுப்பினருக்குத்தான் முதலில் வணக்கம் சொல்ல வேண்டும். இப்படியான நுணுக்கமான விஷயங்கள் முதல் தேர்வு முடிந்து நீங்கள் வெளியேறும் போக்கு வரை அனைத்துக்கும் அங்கு மதிப்பெண் உண்டு. ஆகவே, சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்துவிட்டால், உங்களுக்கே நீங்கள் உண்மையாக இருங்கள். அதுதான் வெற்றிக்கான ஒரே வழி!''
''சிவில் சர்வீசஸ் தேர்வுப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாடு வரமுடியவில்லையே ஏன்?''
''இந்த வருடம் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, முதல் இடத்தைக்கூடப் பிடித்தது. நாலைந்து வருடங்களுக்கு முன்பு அகில இந்திய அளவில் 90 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் தமிழகத்தில் இருந்தே 18 பேர் தேர்வானார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் பங்களிப்பு சற்றே குறைவு என்பது உண்மைதான்!''
''சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு எங்கே தடுமாற்றம் ஏற்படுகிறது?''
''கல்லூரி பட்டப்படிப்பு வரையில் தமிழ் மாணவர்கள் ஒரு போட்டித் தேர்வைக்கூட எதிர்கொள்வது கிடையாது. தமிழ்நாட்டுக் கல்வித் திட்டம் அதுமாதிரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இல்லை. ஆனால், வட இந்தியாவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால்தான் பட்டப்படிப்புகளில் சேர முடியும். இதனால் அவர்கள் போட்டித் துடிப்பை மிக இளம் வயதில் இருந்தே ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும்போது அது அவர்களுக்கு பாரமாகத் தெரிவது இல்லை. ஆனால், தமிழ் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகே, போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகிறார்கள். அதனாலேயே முதல் அட்டெம்ப்ட் அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதையும் சுலபமாகச் சமாளிக்கலாம்.
11-ம் வகுப்பில் இருந்தே செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இணையத்தில் கிடைக்கும் போட்டித் தேர்வு கேள்வித்தாள்களை அவர்களாகவே நிரப்பி, திருத்தி தங்கள் தகுதிகளை அளவிட்டுக்கொள்ள வேண்டும். லோக்சபா சேனலில் வரும் பேனல் டிஸ்கஷன், பி.பி.சி உலகச் செய்தி, டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். அதில் புதுப் புது விஷயங்களைப் பற்றிய விவாதமோ, செய்திகளோ ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். போட்டித் தேர்வை எதிர்கொள்ளாத தமிழ் மாணவர்கள், இப்படித் தங்கள் பொழுதுபோக்கின் மூலமும் பொது அறிவை வளர்த்துக்கொள்வது நிச்சயம் கை கொடுக்கும்!''
''சமீபமாக தமிழ் இலக்கியம் படித்தவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகிறார்களே?''
''தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, எல்லா விருப்பப் பாடங்களும் ஒரு வருடத்தில் நல்ல மார்க் வாங்கும். அடுத்த வருடம் தேர்ச்சியே கிடைக்காமல் போகும். 2012-ல் பொது நிர்வாகத்தில் 300-க்கு 90 என இரட்டை இலக்க மதிப்பெண்கள்தான் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்பு பொது நிர்வாகம் நல்ல மார்க் வாங்கிக் கொடுத்தது. விருப்பப் பாடத்தின் டிரெண்ட் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தமிழ் இலக்கியம் நல்ல ஸ்கோர் கொடுத்திருக்கிறது. அதை எல்லாம் மனதில்கொண்டு நாம் விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு மாணவனின் ஆர்வம், பரிச்சயத்தைக்கொண்டே விருப்பப் பாடத்தைத் தீர்மானிக்க வேண்டும்!''

''முழுக்கவே தமிழ் வழியில் தேர்வு எழுதி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?''
''அதற்கும் அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். ஏனென்றால், தமிழில் எல்லாப் புத்தங்களும் கிடைப்பது இல்லை. ஆங்கிலப் புத்தங்களை மொழிபெயர்த்துப் படிக்கவேண்டிய நிலையே இருக்கிறது. பயிற்சி மையங்களிலும் ஆங்கிலவழி வகுப்புகள்தான் உண்டு. எனவே, அடிப்படை ஆங்கில அறிவு இல்லாமல் தேர்வில் வெற்றிபெறுவது மிக மிகக் கடினம். ஆனால், பள்ளிப் பாடத் திட்ட அளவுக்கான ஆங்கிலப் பரிச்சயம் இருந்தால்கூட, எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்பது அவசியம் இல்லை. பேசினால் புரிந்துகொள்ளக்கூடிய, வாசித்தால் அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்கான புலமை இருந்தால் போதும்.
தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்வழியில் பயிற்சியளிக்க பயிற்சி நிறுவனங்களுக்குப் பொருளாதாரப் பலன் இல்லை. அதோடு தேர்வின் பாடத் திட்டங்களை தமிழில் எழுத ஆசிரியர்கள் முன்வருவதும் இல்லை. கவலைகொள்ள வேண்டாம். ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான அளவுக்குத் தமிழில் புத்தங்கள் கிடைக்கின்றன.
'நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ என்ற அரசு பதிப்பகம், நல்ல புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விற்கிறது. இந்திய அரசின் வெளியீடான 'யோஜனா’ என்ற பத்திரிகை 'திட்டம்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. அதில் அருமையான ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தமிழக அரசே வெளியிட்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிறைய வரலாற்றுப் புத்தகங்ளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. ஆல் இந்தியா ரேடியா தினமும் இரவு 9.15 மணி முதல் 9.30 வரை 'நியூஸ் அனலைஸ்’ நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது. அதை அவசியம் கேட்கலாம். இணையதளத்தில் அந்த நிகழ்ச்சியின் ஆடியோ பதிவுகள் உள்ளன. இந்த நியூஸ் அனலைஸ் தகவல்கள் தேர்வுகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்!''

Wednesday, July 9, 2014

போரடிக்காமல் இருக்க சில வழிகள்!

இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “போரடிக்கிறது” என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு போரடிப்பது ஒரு தாங்க முடியாத நிலையாக இருக்கிறது.
புதிது புதிதாகப் பொருள்களும், அனுபவங்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த மனநிலை யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வரக்கூடியதல்ல அல்லவா? அதனால் போரடிப்பது என்பது அவர்களுக்கு அவ்வப்போது தவிர்க்க முடியாத மனநிலையாக மாறி விடுகிறது.
யார்க் பலகலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் ஈஸ்ட்வுட் (Dr.John Eastwood) தலைமையில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள் ஆராயப்பட்டன. மனதின் எண்ணங்களும், உணர்வுகளும் சரி, வெளியே நடக்கும் நிகழ்வுகளும் சரி, கவனம் முழுமையாக செலுத்த உகந்ததாக இல்லை என்று மனிதர்கள் நினைப்பது தான் போரடிக்க முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈடுபட்டிருக்கும் எந்த நடவடிக்கையும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை, அதில் ஈடுபடுவது திருப்திகரமாகவும் இல்லை என்று மனிதன் உணரும் போது போரடிக்கிறது என்கிறான் என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது.
அதனால் போரடிக்கும் போது மனிதன் தன் கவனத்தைப் போதுமான அளவு எதிலும் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறான். இருக்கிற சூழ்நிலையும், ஈடுபடுகின்ற செயலும் பிடித்தமானதாக இல்லை. ஆனால் அதற்குக் காரணம் தான் அல்ல, வெளியுலகம் தான் என்று மனிதன் நினைக்கிறான். இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் கையில் இல்லை என்றும் இது மாறினால் ஒழிய போரடிப்பது தவிர்க்க முடியாது என்று நினைக்கிறான் என்றும் அந்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
உண்மையில் போரடிப்பதற்கு மிக முக்கிய காரணம் மனிதனின் அகத்தில்தான் இருக்கிறதே ஒழிய புறத்தில் இல்லை. புரிதல், கவனம், அர்த்தம், சுவாரசியம், பங்கு பெறுதல் ஆகியவை இல்லாத போது எதுவும் அவனுக்கு சீக்கிரம் போரடித்துப் போகிறது. பல சமயங்களில் இவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே போகிறார். மாணவனுக்குப் பாடம் புரியவில்லை. அவர் சொல்கிற விதம் சுவாரசியமாக இல்லை. அதனால் கவனம் செலுத்த முடியவில்லை. கற்றலில் பங்கு பெற முடியவில்லை. அதனால் அவனுக்குப் போரடிக்கிறது.
வாழ்க்கையின் நிகழ்வுகள் மாற்றமின்றி ஒரே மாதிரி போகும் போதும் போரடிக்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் சுவாரசியம் குறைகிறது. கவனம் குறைகிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாததாகத் தோன்றுகிறது. அதனால் போரடிக்கிறது. புதியதாக பொருளோ, வாகனமோ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி வாங்கினால் சில நாட்கள் போரடிக்காமல் இருக்கிறது. வாங்கிய பொருள்களால் ஏற்படும் புதிய அனுபவங்களும், வாங்கிய பொருள்களை மற்றவர்களுக்குக் காண்பித்துக் கிடைக்கும் பெருமிதமும் முடிகையில் மறுபடி போரடிக்க ஆரம்பிக்கிறது.
போரடிப்பது பெரிய விஷயமல்ல. அது பெரிய பிரச்சினையும் அல்ல. எல்லார் வாழ்விலும் அது அவ்வப்போது ஏற்படுவது தான் என்றாலும் போரடிக்காமல் இருக்க மனிதன் தேடும் வழிகளில் தான் பெரும்பாலும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ, பொருள்களை வாங்கிக் குவிப்பதும் போரடிப்பதின் விளைவே. போரடிப்பதால் தான் பெரும்பாலானோர் போதையைத் தேடிப் போகிறார்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். சூதாட்டம் முதலான வேறுபல தீய பழக்கங்கள் உருவாவதும் இந்தக் காரணத்தினால்தான். வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தைத் திரும்ப ஏற்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுக்கும் இது போன்ற வழிகள் புதைகுழியாய் மாறி மனிதனை அடித்தளத்திற்கு இழுத்து விடும் வல்லமை படைத்தவை என்பது தான் உண்மையான பிரச்சினை.
தீய பழக்கங்களில் ஈடுபடுவதாலாவது போரடிப்பது தவிர்க்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே வேடிக்கையான உண்மை. போதை போன்ற தீயபழக்கங்களில் ஆழ்ந்தால்கூட போரடிக்காமல் இருப்பதில்லை. போரடிக்காமல் இருக்க அதன் அளவுகளை ஒருவன் அதிகரித்துக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க அவன் தன்னை மேலும் மேலும் அழித்துக் கொண்டே போகும் அபாயமும் இருக்கிறது.
சரி அப்படியானால் நமக்கு தீமைகளை வரவழைத்துக் கொள்ளாமல் போரடிப்பதில் இருந்து மீளும் வழிகள் என்ன?
வாழ்வில் ஓர் உன்னத இலக்கும், அதைச் சாதிக்கும் துடிப்பும் இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை. ஒவ்வொரு அடியாக முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் போது, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறோம் என்ற பெருமிதமும் இருக்கும் போது, எப்படி போரடிக்கும்? இப்படிப்பட்டவர்களுக்கு நேரம் போகவில்லை என்ற எண்ணம் ஏற்படாது. நேரம் போதவில்லையே என்ற எண்ணமே மேலோங்கும்.
அடுத்ததாக எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று இருப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி வேலை பார்ப்பது, அந்த வேலையைத் தவிர வேறு எதையும் அறியாமலிருப்பது இரண்டும் இருந்தால் போரடிப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவர்கள் அறிவுக்கூர்மையும் மங்க ஆரம்பித்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
எத்தனையோ நல்ல விதங்களில் அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாத வழிகளில் ஈடுபட்டு ஒருவர் போரடிப்பதைத் தவிர்க்கலாம். நல்ல இசையைக் கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓவியம் வரைவது, தோட்டவேலை போன்ற நல்ல பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் ஈடுபடுதல், அழகிய இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் செல்தல், நல்ல நண்பர்களைச் சந்தித்துப் பேசுதல், நல்ல சொற்பொழிவு கேட்டல் போன்றவற்றை அந்த வழிகளாகச் சொல்லலாம். மீண்டும் பழைய வேலைகளுக்குத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்திருக்க இவையெல்லாம் நல்ல மாற்று வழிகள்.
போரடிப்பதாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் தீர்வை வெளியே தேடுகிறார்கள். ஆனால் தீர்வு ஒருவருக்குள்ளேயே இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க ஒருவரது சிந்தனைகளில் புதுமை இருந்தாலே போதும். பார்க்கின்ற விதம் மாறினாலே, பார்க்கின்ற கோணம் மாறினாலே, எத்தனையோ சாதாரண விஷயங்களின் அசாதாரண அல்லது சுவாரசியமான அம்சங்களை நாம் பார்க்க முடியும். அதே போல் செயல்களைச் செய்கின்ற விதத்தை மாற்றினாலும் கூட வாழ்வில் சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வித்தியாசங்களை வெளியே இருந்து தருவித்து சுவாரசியம் காண முயலாமல் உள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு வாழ்வை சுவைபடுத்திக் கொள்ள முடிந்தவன் “போரடிக்கிறது” என்று என்றுமே நினைக்கவும் மாட்டான்.
ஆஸ்கார் ஒயில்டின் “டோரியன் க்ரேயின் ஓவியம்” (The Picture of Dorian Gray) நாவலில் ஒரு அழகான வசனம் வரும். ஹென்றி வோட்டன் பிரபு என்ற கதாபாத்திரம் இளையவனான டோரியன் க்ரே என்ற கதாபாத்திரத்திடம் சொல்வார். “இந்த உலகில் சகிக்க முடியாத பயங்கரமான விஷயம் போரடிப்பது ஒன்று தான் டோரியன். அந்த ஒரு பாவத்திற்கு மன்னிப்பே இல்லை”.
ரசிக்கவும், அறியவும், அழகான, அறிவார்ந்த ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உலகில் இருக்கையில் அதை நோக்கி நம் கவனத்தையும் கருத்தையும் செலுத்தாமல் போரடிக்கிறது என்று சொல்வது ஆஸ்கார் ஒயில்டு கூறுவது போல மன்னிக்க முடியாத பாவமே அல்லவா?

Saturday, June 28, 2014

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

)
வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன,  இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா?  அப்படியென்றால் இது உங்களுக்கான பக்கம் தான்!!
 

ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள்! 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படி பார்த்து பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும்! ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ...


1. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில் மகிழ்ச்சியை தேடி கொள்ளுங்கள்!!  

உங்களை வாழ்க்கைக்கான திட்டத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள், அதற்குபதில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்,  இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அப்போது தானாகவே இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்யுங்கள் தனாக உங்கள் கனவு நிறைவேறும்.

2.இன்றைய நாளில் என்ன செய்தீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ள பழகுங்கள்!


''ஒரு நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று எழுதி வைத்து பாருங்கள் அது இன்றைக்கு நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள் என்பதை காட்டும். வெறும் 15 நிமிடங்கள் நீங்கள் செய்த வேலையை எழுதி வைப்பது உங்களுக்கு வேலை மீதான செயல்திறனை அதிகரிக்கும்!' இன்று எது நீங்கள் நினைத்து உங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லையோ அதனை சரிசெய்தாலே போதும்!

3.தினமும் ஒரு புதிய, பழக்கமில்லாத நபரோடு பேசுங்கள்

''புதிய பழக்கமில்லாதவர்கள் என்பது புதிய வாய்ப்புகளுக்கு சமம். இந்த வாய்ப்புகள் புதிய நண்பர்கள், புதிய யோசனைகள் மற்றும் உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், கூச்சததையும் போக்குவதாகவும், புதிய தொழில் துவங்குவதற்கான கருவியாக இருக்கும். உங்கள் வட்டத்தை பெரிது படுத்திக்கொள்ள பழகிவிட்டால் அது உங்கள் வேலை,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்.அதனால் தினமும் ஒரு புதிய பழக்கமில்லாத மனிதரோடு பேசுங்கள்.

4. நன்றாக கவனிக்க பழகி கொள்ளுங்கள்!

மக்கள் தங்களை பற்றி பேசுவதை பெரிதும் விரும்புவார்கள். அதனால் அவர்கள் பேசுவதிலிருந்து உங்களுக்கு தேவையானதை பெற அவர்களை பேசவிட்டு கவனியுங்கள். இது போன்ற மனிதர்களின் அனுபவம் எப்போதும் நமக்கு கைகொடுக்கும் சிக்கலான சூழல்களில் அவர்கள் செய்த தவறை பற்றி கூறியிருப்பார்கள் அதை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பாடத்தையாவது அது கற்றுக்கொடுக்கும்.
 

 
5.குறைந்த நேரத்தை மட்டும் வீணாக்குங்கள்!! 

நேரத்தை வீணாக்காமல் நம்மால் வாழமுடியாது. ஆனால் நம்மால் குறைவான நேரத்தை வீணாக்க முடியும். வாழ்க்கை நாட்களால் உருவாக்கப்பட்டது, நாட்கள் நேரங்களாலும், நேரம் நிமிடங்களாலும் உருவாக்கப்பட்டவை. அதனால் நிமிடங்களை தாண்டி நாம் நொடியை மட்டும் வீணாக்கி கொள்ள கற்று கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தை நீங்கள் சரியாக கையாண்டால் உங்களால் வெற்றியை மட்டும் தான் பெறமுடியும்.

6. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். 


உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள்.. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை உருவாகியே தீரும்!

7. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்க பழகுங்கள்!! 

அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும்! உங்கள் மீதுள்ள சந்தேகம் உங்களை தெளிவு படுத்தும்.
 


 
8. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள்:

 உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்கு சென்று வாருங்கள், உளவியலாலர்களை சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவும் கருவியாகவும் அமையும்.

9.உங்களைவிட வித்தியாசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:


நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேடலில் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும்.

10. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்:

ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்கு பழக்கப்படுத்தும்! இந்த பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும்.


இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்......
உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரை தீர்மானிக்க விடாமல் இருப்பது தான்!! இன்றைய நாளை உங்கள் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது  இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

Tuesday, June 24, 2014

India Win Three Gold, Two Silver

India Win Three Gold, Two Silver
by Arvind Aaron

asianyouth2014atUzbek

The Asian Youth Chess Championship started for the age group categories of Under-6, 8, 10 and 12 for Open and Girls at Hotel Uzbekistan in capital Tashkent. The Under-14, 16 and 18 sections will be held separately later in India.
In the rapid section, India won three gold and two silver medals. Chess fans back at home can expect more medals when the classical chess and blitz sections commence.
Indian gold winners in rapid were Aditya Mittal (Under-8) and Nihal Sarin (Under-10) and Priyanka Nutakki (Under-12 girls). The silver medals were won by L.N. Ram Aravind (Under-12) and Mrudul Dehankar (Under-10 girls).
Earlier, the glittering opening ceremony comprised of song and dances of popular Hindi songs which attracted our children to dance with them.
Photo By : Mr.T.J.Suresh Kumar, Coach of the Indian Team
Tags: 

Saturday, June 14, 2014

'ஒட்டிக்கு ரெட்டி...’ - கொல்லிமலையில் களைகட்டும் பாரம்பரியப் பாதுகாப்பு

ழிந்துவரும் சிறுதானிய சாகுபடியை மீட்டெடுக்கும்விதமாக... 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் களப்பணி ஆற்றி வருகிறது. சிறுதானியங்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக, மலைக்கிராம விவசாயிகளுக்கு, சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்ததன் விளைவாக, மலைவிவசாயிகள் மத்தியில் சிறுதானிய சாகுபடி கோலோச்சிக் கொண்டிருக்கிறது!  
குளுகுளு காற்று வீசும் கொல்லிமலையின் செம்மேடு சிறுநகரத்தில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை திட்ட அலுவலர் டாக்டர். ஆலிவர் கிங், அதைப் பற்றி பெருமையோடு பேசினார் நம்மிடம்.
''சிறுதானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த உணவுச் சீதனம். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்வாக இருந்த காலத்தில்... ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் கடமை அவர்களுக்கு இருந்தது. அப்போது, அனைவரின் உணவுப் பயன்பாட்டுக்காக சிறுதானியங்களே பயிரிடப்பட்டன. சிறுதானிய சாகுபடி சிறப்பாக இருந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கும் பல நூறு ஏக்கர் நிலங்களில் சிறுதானிய சாகுபடி நடந்தது. காலப்போக்கில் பணப் பயிர்கள் சாகுபடி மீது சமவெளி விவசாயிகளுக்குப் பிறந்த ஆர்வம், மலைக்கிராமங்களுக்கும் பரவி, கொல்லிமலையிலும் சிறுதானிய சாகுபடிப் பரப்பு குறைந்தது. 'அதை மீண்டும் பெருக்க வேண்டும். அழிந்துவரும் சிறுதானிய விதைகளை மீட்டெடுக்க வேண்டும்’ என்கிற நோக்கில் 96-ம் ஆண்டு முதல் கொல்லிமலையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு’' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
மீட்டெடுக்கப்பட்ட 22 ரகங்கள்..!
''பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, பயிரிடுதல், உணவுப் பயன்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கு செயல்பாடுகளை மையப்படுத்தி வேலை செய்கிறோம். இதுவரையில், அழியும் நிலையில் இருந்த 22 ரகங்களை மீட்டெடுத்து பாதுகாத்து வருகிறோம். எங்கள் களப்பணியாளர்களுடன் இணைந்து இங்குள்ள 305 மலைக்கிராமங்களுக்கும் சென்று, அவர்களிடம் இருந்த பாரம்பரிய ரக சிறுதானிய விதைகளைச் சேகரித்தோம். அதில் அழியும் நிலையில் இருக்கும் பல ரகங்களும் கிடைத்தன. இப்பகுதியில் சாமை, தினை, வரகு, கேழ்வரகு ஆகிய நான்கு ரகங்கள் மட்டும்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன.
மல்லியச்சாமை, பெருஞ்சாமை, வெள்ளைப்பெருஞ்சாமை, கட்டவெட்டிச் சாமை, திருகுலாசாமை, சடஞ்சாமை, கருஞ்சாமை என ஏழு சாமை ரகங்களும்; செந்தினை, பாலாந்தினை, கோராந்தினை, கில்லாந்தினை, பெருந்தினை, மூக்காந்தினை என ஆறு தினை ரகங்களும்; திரிவரகு, பனிவரகு என்ற இரண்டு வரகு ரகங்களும்; சாட்டைக் கேழ்வரகு, காரக் கேழ்வரகு, கண்டாங்கிக் கேழ்வரகு, பெருங்கேழ்வரகு, சுருட்டைக் கேழ்வரகு, அரிசிக்கேழ்வரகு, கருமுழியான் கேழ்வரகு என கேழ்வரகில் ஏழு ரகங்களையும் சேர்த்து, மொத்தம் 22 பாரம்பரிய ரக விதைகளை, ஆர்வமுள்ள விவசாயிகளிடம்கொடுத்துப் பெருக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெருக்கும் விதைகளை விலைக்கு விற்பதில்லை. மாறாக, ஒரு கிலோ விதை பெற்றுக்கொள்ளும் விவசாயி, விதைத்து அறுவடை செய்த பிறகு, இரண்டு கிலோ விதையை எங்களிடம் கொடுத்துவிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல நூறு கிலோ அளவில் விதைப் பறிமாற்றம் நடந்து வருகிறது. இந்த விதை மாற்று முறையை 'ஒட்டிக்கு ரெட்டி’ என்று மலைமக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்'' என்றவர், இப்பணிகளை மலைவாழ் மக்களைக் கொண்டே செயல்படுத்தி வருகிறோம். இதற்காக, 'கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்ற ஆலிவர் கிங், இந்த அமைப்பின் பொறுப்பாளர் சிவக்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.
மலைக்க வைக்கும் மலைநாடுகள்!
''கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கத்துல 1,503 பேர் உறுப்பினரா இருக்காங்க. இதுமூலமா 108 சுய உதவிக்குழுக்களைத் தொடங்கியிருக்கோம். எங்களுக்கு ஆலோசனையையும், உதவிகளையும் சுவாமிநாதன் பவுண்டேஷன்தான் கொடுத்திட்டிருக்கு. வாழவந்தி நாடு, அரியூர்நாடு, வளப்பூர்நாடு, சேலூர் நாடு, திண்ணனூர் நாடு, தேவனூர் நாடு, திருப்புளிநாடு, ஆலத்துர்நாடு, குண்டனி நாடு, இடப்புளி நாடு, பெறக்கரை நாடு, சித்தூர் நாடு, பைல் நாடு, குண்டூர் நாடுனு இங்க 14 மலைநாடுகள் இருக்கு. 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மலை நாடுகள்ல 305 கிராமங்கள் இருக்கு. எங்க கூட்டமைப்பு, இதுவரை 500 ஏக்கரில் சிறுதானிய விதைப்புக்கு ஊக்கம் கொடுத்து, கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பத்தை சிறுதானிய விவசாயிகளா மாத்தியிருக்கு. அதுபோக சிறுதானியங்களை அரைக்க, 14 மலைநாடுகள்லயும் 14 அரவை இயந்திரங்களை அமைச்சிக் கொடுத்திருக்கோம். இதை சுய உதவிக்குழுப் பெண்கள் இயக்கி வருமானம் பாக்குறாங்க'' என்றார், சிவக்குமார்.
இரட்டை லாபம்..!
மலைக்கிராம மக்கள் பலரையும் சந்தித்துப் பேசித் திரும்பிய நம்மிடம், நிறைவாக பேசிய ஆலிவர் கிங், ''சிறுதானிய மேம்பாட்டு பணியுடன் நிறுத்திக்கொள்ளாமல், அழியும் நிலையில் உள்ள கொல்லிமலை கலாசாரத்தையும் மீட்டெடுத்து வருகிறது எங்கள் ஆராய்ச்சி நிறுவனம். இந்த மலைநாட்டு மக்களின் பாரம்பரியக் கலைகளை மறு உருவாக்கம் செய்து, அதை செயல்படுத்தி வருகிறோம். தெருக்கூத்து, பாவைக்கூத்து, தேவராட்டம், கும்மி போன்ற கலைவடிவங்களையும் மக்களைக் கொண்டே நிகழ்த்தும் வேலையும் நடக்கிறது. பணப்பயிரான மரவள்ளிக்கிழங்கு வயலில் ஊடுபயிராக சிறுதானியங்களை விதைத்து... பணப்பயிர் மற்றும் தானியப்பயிர் என்று இரண்டு மகசூலை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதால், இரட்டை லாபம் பார்க்கிறார்கள் விவசாயிகள்.
ஆடிப்பட்டத்தில் கேழ்வரகுடன் சாமை அல்லது தினை, அவரை, மொச்சை, கடுகு விதைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கைவிதைப்பாக விதைத்துவிட்டால், வெவ்வேறு பருவங்களில் நமக்குத் தேவை யான உணவுப்பொருட்கள் கிடைப்பதுடன் நிலத்தின் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. இந்த 17 ஆண்டுகளில் அழியும் நிலையில் இருந்த சிறுதானிய விவசாயத்தை முடிந்த அளவு மீட்டுக் கொண்டு வந்துவிட்டோம். சிறுதானிய உணவின் நுகர்வும் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நல்ல விற்பனை வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் கொல்லிமலையில் மட்டுமல்ல. நாட்டில் உள்ள பல்லாயிரம் ஏக்கரில் சிறுதானியக் கொடி மறுபடியும் பறக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.

பிசினஸ் -ட்வென்டி19 டாட்காம்: சம்பளத்துடன் பயிற்சி தரத் தயார்

4)
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பு சார்ந்து பிராக்டிகல் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக, 'இன்டர்ன்ஷிப்’ (Internship) பயிற்சி செய்வது கட்டாயம். இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை எந்த நிறுவனத்தில் பெறுவது என்கிற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். இதுமாதிரியான மாணவர்களை நல்ல நிறுவனங்களில் சேர்ந்து 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக சில வலைதளங்கள் இப்போது வந்துவிட்டன. இந்த வகை நிறுவனங் களில் ஒன்றை சென்னையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கார்த்திகேயன் விஜயகுமார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் இந்த நிறுவனத்தைப் பற்றி கேட்டோம்.
3 லட்சம் மாணவர்கள்!
''கல்லூரி மாணவர்கள் நல்லபடியாக 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை செய்து முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ட்வென்டி19 டாட்காம் (http://www.twenty19.com/)   என்கிற வலைதளம். 2010-ல் இந்த வலைதளத்தை ஆரம்பித்த போது, இதன் பயனாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று இதன் மூலம் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் பேருக்கு மேல்.
இந்த எண்ணிக்கையில் 60 சதவிகிதம் பேர் பொறியியல் மாணவர்கள், 20 சதவிகிதம் பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், 10 சதவிகிதம் பேர் மேலாண்மை படிப்பு சார்ந்த மாணவர்கள், மீதி இருக்கும் 10 சதவிகிதம் பேர் முதுகலை கல்வி பயிலும் மாணவர்கள் (எம்டெக் போன்றவை) அடக்கம். தற்போது ட்வென்டி19 டாட்காம் மூலம், மாணவர்களுக்கான ஆன்லைன் மார்க்கெட்டிங், சாஃப்ட்வேர் டெஸ்டிங், போன்ற பலவகையான கோர்ஸ்களை நடத்தி வருகிறோம்'' என்று எடுத்த எடுப்பிலேயே நம்மை ஆச்சர்யப்படுத்தினார் கார்த்திகேயன் விஜயகுமார்.
இன்டர்ன்ஷிப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில் எங்களின் வலைதளத்தில் அவர்களின் பெயர், படிப்பு விவரம், படிக்கும் கல்லூரியின் பெயர் போன்றவற்றை முதலில் பதிவு செய்து பின்னர் அவர்களுக்கான இன்டர்ன்ஷிப் நிறுவனங்களை தேட ஆரம்பிக்க வேண்டும். இதேபோல, 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களை அணுக நினைக்கும் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் நிறுவனம் சார்ந்த விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துகொண்டு, அவர்கள் இன்டர்ன்ஷிப் வழங்க இருக்கும் மாணவர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதேபோல, மாணவர்களும் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் பயிற்சிக்கான அனுமதியை வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு பெற முடியும்.  
''தற்போது சுமார் 6,000 நிறுவனங்கள் எங்கள் வலைதளத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்காக எங்களைத் தேடிவரும் மாணவர்களுக்கு நாங்களே அந்த வாய்ப்பைத் தந்து, அவர்களின் தொழில்நுட்ப அறிவை பெருக்கி வருகிறோம்'' என்றவர், இந்த வலைதளத்தைத் தொடங்கியதற்கான பின்னணியையும் எடுத்துச் சொன்னார்.
''2009-ல் நான் தனியாக மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் அமைத்து பணியாற்றி வந்தேன். அப்போது என் நிறுவனத்துக்காக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். இந்த ஆட்களைத் தேடி எங்கே போவது என்று நானும் என் குழுவினரும் பலவாறாக யோசித்தோம். இறுதியில், கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை அணுகி, இதுபற்றி பேசினோம். அவர்களுக்கு செய்முறை அறிவு கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் எங்கள் யோசனையை உடனே  ஒப்புக்கொண்டார்கள். பிற்பாடு இதை பரந்துபட்ட அளவில் செய்ய ஆரம்பித்தோம்'' என்றவர், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி தருவதன் மூலம் எப்படி திறமையான ஊழியர்களை உருவாக்க முடியும் என்பது பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
வேலைக்கான பயிற்சி!
இன்றைய நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள், கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்து அவர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவர்களையே நிரந்தரமாக வேலைக்கு அமர்த்துகின்றன. இந்தச் சூழ்நிலை மாணவர்களுக்குச் சரிவராது என்பதே எங்கள் கருத்து.
கல்லூரியில் படித்து முடித்ததும் அவர்கள் நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டால்தான் புத்துணர்ச்சியுடன் வேலை செய்வார்கள். மீண்டும் பயிற்சி என்கிறபோது அவர்களின் மனநிலை, தாங்கள் இன்னும் மாணவர்கள்தான் என்கிற மாதிரி இருக்கும். ஆனால், படிக்கும்போதே இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியைத் தந்துவிட்டால், அவர்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது பயிற்சி தரவேண்டும் என்கிற அவசியம் இருக்காது. இதனால் மாணவர்களுக்கும் வேலை தரும் நிறுவனத்துக்கும் நன்மையே.
கட்டணம் கிடையாது!
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு நாங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறோம்.  அது மாணவர்கள் குறித்தும், மானவர்களுக்கு வழங்கும் இன்டர்ன்ஷிப் குறித்தும் வலைதளத்தில்  ஃபீட்பேக்  குறிப்பிட வேண்டும் என்பதே. எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களை நன்கு விசாரித்தபின்பே அவர்களுக்கான பதிவை ஏற்றுக்கொள்கிறோம். இதன்பிறகே அந்த நிறுவனங்கள் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களிடமிருந்து நாங்கள் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. தங்கள் படிப்பு சம்பந்தமான நிறுவனம் எங்கள் வலைதளத்தில் இருந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்கான அனுமதியைப் பெறலாம்.
சம்பளமும் உண்டு!
முன்பெல்லாம் 'இன்டர்ன்ஷிப்’ வழங்கும் நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லாத பயிற்சி தந்து வந்தன. ஆனால், வேலைக்குத் தரமான ஆள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு இருப்பதால், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்களுக்கு சம்பள மும் தரத் தயாராக இருக்கின்றன சில நிறுவனங்கள். பெரிய நிறுவனங்களில் 'இன்டர்ன்ஷிப்’ முடிக்கும் மாணவர் களுக்கு அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கவும் வாய்ப்புண்டு'' என்று முடித்தார் கார்த்திகேயன் விஜயகுமார்.
கல்லூரி மாணவர்களுக்கு இந்த வலைதளம் புதியதொரு உலகத்தைத் திறந்து காட்டும் என்பதில் சந்தேகமில்லை!