Saturday, June 14, 2014

'ஒட்டிக்கு ரெட்டி...’ - கொல்லிமலையில் களைகட்டும் பாரம்பரியப் பாதுகாப்பு

ழிந்துவரும் சிறுதானிய சாகுபடியை மீட்டெடுக்கும்விதமாக... 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் களப்பணி ஆற்றி வருகிறது. சிறுதானியங்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக, மலைக்கிராம விவசாயிகளுக்கு, சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்ததன் விளைவாக, மலைவிவசாயிகள் மத்தியில் சிறுதானிய சாகுபடி கோலோச்சிக் கொண்டிருக்கிறது!  
குளுகுளு காற்று வீசும் கொல்லிமலையின் செம்மேடு சிறுநகரத்தில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை திட்ட அலுவலர் டாக்டர். ஆலிவர் கிங், அதைப் பற்றி பெருமையோடு பேசினார் நம்மிடம்.
''சிறுதானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த உணவுச் சீதனம். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்வாக இருந்த காலத்தில்... ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் கடமை அவர்களுக்கு இருந்தது. அப்போது, அனைவரின் உணவுப் பயன்பாட்டுக்காக சிறுதானியங்களே பயிரிடப்பட்டன. சிறுதானிய சாகுபடி சிறப்பாக இருந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கும் பல நூறு ஏக்கர் நிலங்களில் சிறுதானிய சாகுபடி நடந்தது. காலப்போக்கில் பணப் பயிர்கள் சாகுபடி மீது சமவெளி விவசாயிகளுக்குப் பிறந்த ஆர்வம், மலைக்கிராமங்களுக்கும் பரவி, கொல்லிமலையிலும் சிறுதானிய சாகுபடிப் பரப்பு குறைந்தது. 'அதை மீண்டும் பெருக்க வேண்டும். அழிந்துவரும் சிறுதானிய விதைகளை மீட்டெடுக்க வேண்டும்’ என்கிற நோக்கில் 96-ம் ஆண்டு முதல் கொல்லிமலையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு’' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
மீட்டெடுக்கப்பட்ட 22 ரகங்கள்..!
''பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, பயிரிடுதல், உணவுப் பயன்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கு செயல்பாடுகளை மையப்படுத்தி வேலை செய்கிறோம். இதுவரையில், அழியும் நிலையில் இருந்த 22 ரகங்களை மீட்டெடுத்து பாதுகாத்து வருகிறோம். எங்கள் களப்பணியாளர்களுடன் இணைந்து இங்குள்ள 305 மலைக்கிராமங்களுக்கும் சென்று, அவர்களிடம் இருந்த பாரம்பரிய ரக சிறுதானிய விதைகளைச் சேகரித்தோம். அதில் அழியும் நிலையில் இருக்கும் பல ரகங்களும் கிடைத்தன. இப்பகுதியில் சாமை, தினை, வரகு, கேழ்வரகு ஆகிய நான்கு ரகங்கள் மட்டும்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன.
மல்லியச்சாமை, பெருஞ்சாமை, வெள்ளைப்பெருஞ்சாமை, கட்டவெட்டிச் சாமை, திருகுலாசாமை, சடஞ்சாமை, கருஞ்சாமை என ஏழு சாமை ரகங்களும்; செந்தினை, பாலாந்தினை, கோராந்தினை, கில்லாந்தினை, பெருந்தினை, மூக்காந்தினை என ஆறு தினை ரகங்களும்; திரிவரகு, பனிவரகு என்ற இரண்டு வரகு ரகங்களும்; சாட்டைக் கேழ்வரகு, காரக் கேழ்வரகு, கண்டாங்கிக் கேழ்வரகு, பெருங்கேழ்வரகு, சுருட்டைக் கேழ்வரகு, அரிசிக்கேழ்வரகு, கருமுழியான் கேழ்வரகு என கேழ்வரகில் ஏழு ரகங்களையும் சேர்த்து, மொத்தம் 22 பாரம்பரிய ரக விதைகளை, ஆர்வமுள்ள விவசாயிகளிடம்கொடுத்துப் பெருக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெருக்கும் விதைகளை விலைக்கு விற்பதில்லை. மாறாக, ஒரு கிலோ விதை பெற்றுக்கொள்ளும் விவசாயி, விதைத்து அறுவடை செய்த பிறகு, இரண்டு கிலோ விதையை எங்களிடம் கொடுத்துவிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல நூறு கிலோ அளவில் விதைப் பறிமாற்றம் நடந்து வருகிறது. இந்த விதை மாற்று முறையை 'ஒட்டிக்கு ரெட்டி’ என்று மலைமக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்'' என்றவர், இப்பணிகளை மலைவாழ் மக்களைக் கொண்டே செயல்படுத்தி வருகிறோம். இதற்காக, 'கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்ற ஆலிவர் கிங், இந்த அமைப்பின் பொறுப்பாளர் சிவக்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.
மலைக்க வைக்கும் மலைநாடுகள்!
''கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கத்துல 1,503 பேர் உறுப்பினரா இருக்காங்க. இதுமூலமா 108 சுய உதவிக்குழுக்களைத் தொடங்கியிருக்கோம். எங்களுக்கு ஆலோசனையையும், உதவிகளையும் சுவாமிநாதன் பவுண்டேஷன்தான் கொடுத்திட்டிருக்கு. வாழவந்தி நாடு, அரியூர்நாடு, வளப்பூர்நாடு, சேலூர் நாடு, திண்ணனூர் நாடு, தேவனூர் நாடு, திருப்புளிநாடு, ஆலத்துர்நாடு, குண்டனி நாடு, இடப்புளி நாடு, பெறக்கரை நாடு, சித்தூர் நாடு, பைல் நாடு, குண்டூர் நாடுனு இங்க 14 மலைநாடுகள் இருக்கு. 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மலை நாடுகள்ல 305 கிராமங்கள் இருக்கு. எங்க கூட்டமைப்பு, இதுவரை 500 ஏக்கரில் சிறுதானிய விதைப்புக்கு ஊக்கம் கொடுத்து, கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பத்தை சிறுதானிய விவசாயிகளா மாத்தியிருக்கு. அதுபோக சிறுதானியங்களை அரைக்க, 14 மலைநாடுகள்லயும் 14 அரவை இயந்திரங்களை அமைச்சிக் கொடுத்திருக்கோம். இதை சுய உதவிக்குழுப் பெண்கள் இயக்கி வருமானம் பாக்குறாங்க'' என்றார், சிவக்குமார்.
இரட்டை லாபம்..!
மலைக்கிராம மக்கள் பலரையும் சந்தித்துப் பேசித் திரும்பிய நம்மிடம், நிறைவாக பேசிய ஆலிவர் கிங், ''சிறுதானிய மேம்பாட்டு பணியுடன் நிறுத்திக்கொள்ளாமல், அழியும் நிலையில் உள்ள கொல்லிமலை கலாசாரத்தையும் மீட்டெடுத்து வருகிறது எங்கள் ஆராய்ச்சி நிறுவனம். இந்த மலைநாட்டு மக்களின் பாரம்பரியக் கலைகளை மறு உருவாக்கம் செய்து, அதை செயல்படுத்தி வருகிறோம். தெருக்கூத்து, பாவைக்கூத்து, தேவராட்டம், கும்மி போன்ற கலைவடிவங்களையும் மக்களைக் கொண்டே நிகழ்த்தும் வேலையும் நடக்கிறது. பணப்பயிரான மரவள்ளிக்கிழங்கு வயலில் ஊடுபயிராக சிறுதானியங்களை விதைத்து... பணப்பயிர் மற்றும் தானியப்பயிர் என்று இரண்டு மகசூலை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதால், இரட்டை லாபம் பார்க்கிறார்கள் விவசாயிகள்.
ஆடிப்பட்டத்தில் கேழ்வரகுடன் சாமை அல்லது தினை, அவரை, மொச்சை, கடுகு விதைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கைவிதைப்பாக விதைத்துவிட்டால், வெவ்வேறு பருவங்களில் நமக்குத் தேவை யான உணவுப்பொருட்கள் கிடைப்பதுடன் நிலத்தின் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. இந்த 17 ஆண்டுகளில் அழியும் நிலையில் இருந்த சிறுதானிய விவசாயத்தை முடிந்த அளவு மீட்டுக் கொண்டு வந்துவிட்டோம். சிறுதானிய உணவின் நுகர்வும் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நல்ல விற்பனை வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் கொல்லிமலையில் மட்டுமல்ல. நாட்டில் உள்ள பல்லாயிரம் ஏக்கரில் சிறுதானியக் கொடி மறுபடியும் பறக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.

No comments:

Post a Comment