Saturday, June 14, 2014

பிசினஸ் -ட்வென்டி19 டாட்காம்: சம்பளத்துடன் பயிற்சி தரத் தயார்

4)
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பு சார்ந்து பிராக்டிகல் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக, 'இன்டர்ன்ஷிப்’ (Internship) பயிற்சி செய்வது கட்டாயம். இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை எந்த நிறுவனத்தில் பெறுவது என்கிற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். இதுமாதிரியான மாணவர்களை நல்ல நிறுவனங்களில் சேர்ந்து 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக சில வலைதளங்கள் இப்போது வந்துவிட்டன. இந்த வகை நிறுவனங் களில் ஒன்றை சென்னையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கார்த்திகேயன் விஜயகுமார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் இந்த நிறுவனத்தைப் பற்றி கேட்டோம்.
3 லட்சம் மாணவர்கள்!
''கல்லூரி மாணவர்கள் நல்லபடியாக 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை செய்து முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ட்வென்டி19 டாட்காம் (http://www.twenty19.com/)   என்கிற வலைதளம். 2010-ல் இந்த வலைதளத்தை ஆரம்பித்த போது, இதன் பயனாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று இதன் மூலம் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் பேருக்கு மேல்.
இந்த எண்ணிக்கையில் 60 சதவிகிதம் பேர் பொறியியல் மாணவர்கள், 20 சதவிகிதம் பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், 10 சதவிகிதம் பேர் மேலாண்மை படிப்பு சார்ந்த மாணவர்கள், மீதி இருக்கும் 10 சதவிகிதம் பேர் முதுகலை கல்வி பயிலும் மாணவர்கள் (எம்டெக் போன்றவை) அடக்கம். தற்போது ட்வென்டி19 டாட்காம் மூலம், மாணவர்களுக்கான ஆன்லைன் மார்க்கெட்டிங், சாஃப்ட்வேர் டெஸ்டிங், போன்ற பலவகையான கோர்ஸ்களை நடத்தி வருகிறோம்'' என்று எடுத்த எடுப்பிலேயே நம்மை ஆச்சர்யப்படுத்தினார் கார்த்திகேயன் விஜயகுமார்.
இன்டர்ன்ஷிப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில் எங்களின் வலைதளத்தில் அவர்களின் பெயர், படிப்பு விவரம், படிக்கும் கல்லூரியின் பெயர் போன்றவற்றை முதலில் பதிவு செய்து பின்னர் அவர்களுக்கான இன்டர்ன்ஷிப் நிறுவனங்களை தேட ஆரம்பிக்க வேண்டும். இதேபோல, 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களை அணுக நினைக்கும் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் நிறுவனம் சார்ந்த விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துகொண்டு, அவர்கள் இன்டர்ன்ஷிப் வழங்க இருக்கும் மாணவர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதேபோல, மாணவர்களும் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் பயிற்சிக்கான அனுமதியை வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு பெற முடியும்.  
''தற்போது சுமார் 6,000 நிறுவனங்கள் எங்கள் வலைதளத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்காக எங்களைத் தேடிவரும் மாணவர்களுக்கு நாங்களே அந்த வாய்ப்பைத் தந்து, அவர்களின் தொழில்நுட்ப அறிவை பெருக்கி வருகிறோம்'' என்றவர், இந்த வலைதளத்தைத் தொடங்கியதற்கான பின்னணியையும் எடுத்துச் சொன்னார்.
''2009-ல் நான் தனியாக மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் அமைத்து பணியாற்றி வந்தேன். அப்போது என் நிறுவனத்துக்காக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். இந்த ஆட்களைத் தேடி எங்கே போவது என்று நானும் என் குழுவினரும் பலவாறாக யோசித்தோம். இறுதியில், கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை அணுகி, இதுபற்றி பேசினோம். அவர்களுக்கு செய்முறை அறிவு கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் எங்கள் யோசனையை உடனே  ஒப்புக்கொண்டார்கள். பிற்பாடு இதை பரந்துபட்ட அளவில் செய்ய ஆரம்பித்தோம்'' என்றவர், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி தருவதன் மூலம் எப்படி திறமையான ஊழியர்களை உருவாக்க முடியும் என்பது பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
வேலைக்கான பயிற்சி!
இன்றைய நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள், கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்து அவர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவர்களையே நிரந்தரமாக வேலைக்கு அமர்த்துகின்றன. இந்தச் சூழ்நிலை மாணவர்களுக்குச் சரிவராது என்பதே எங்கள் கருத்து.
கல்லூரியில் படித்து முடித்ததும் அவர்கள் நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டால்தான் புத்துணர்ச்சியுடன் வேலை செய்வார்கள். மீண்டும் பயிற்சி என்கிறபோது அவர்களின் மனநிலை, தாங்கள் இன்னும் மாணவர்கள்தான் என்கிற மாதிரி இருக்கும். ஆனால், படிக்கும்போதே இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியைத் தந்துவிட்டால், அவர்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது பயிற்சி தரவேண்டும் என்கிற அவசியம் இருக்காது. இதனால் மாணவர்களுக்கும் வேலை தரும் நிறுவனத்துக்கும் நன்மையே.
கட்டணம் கிடையாது!
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு நாங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறோம்.  அது மாணவர்கள் குறித்தும், மானவர்களுக்கு வழங்கும் இன்டர்ன்ஷிப் குறித்தும் வலைதளத்தில்  ஃபீட்பேக்  குறிப்பிட வேண்டும் என்பதே. எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களை நன்கு விசாரித்தபின்பே அவர்களுக்கான பதிவை ஏற்றுக்கொள்கிறோம். இதன்பிறகே அந்த நிறுவனங்கள் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களிடமிருந்து நாங்கள் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. தங்கள் படிப்பு சம்பந்தமான நிறுவனம் எங்கள் வலைதளத்தில் இருந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்கான அனுமதியைப் பெறலாம்.
சம்பளமும் உண்டு!
முன்பெல்லாம் 'இன்டர்ன்ஷிப்’ வழங்கும் நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லாத பயிற்சி தந்து வந்தன. ஆனால், வேலைக்குத் தரமான ஆள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு இருப்பதால், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்களுக்கு சம்பள மும் தரத் தயாராக இருக்கின்றன சில நிறுவனங்கள். பெரிய நிறுவனங்களில் 'இன்டர்ன்ஷிப்’ முடிக்கும் மாணவர் களுக்கு அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கவும் வாய்ப்புண்டு'' என்று முடித்தார் கார்த்திகேயன் விஜயகுமார்.
கல்லூரி மாணவர்களுக்கு இந்த வலைதளம் புதியதொரு உலகத்தைத் திறந்து காட்டும் என்பதில் சந்தேகமில்லை!

No comments:

Post a Comment