பாம்பு கடித்தால் இறந்து போவார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. பாம்பு விஷம் உயிருக்கு ஆபத்தானதுதான் என்றாலும், நம்மை சுற்றி வாழும் பாம்புகளில் 80 சதவீதம் விஷ மற்றவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இரவு நேரங்களில் கடிக்கும்போது எந்த பாம்பு கடித்தது? அது விஷமுள்ளதா? இல்லாததா? என்பதை கண்டறிவது கடினம். ஆனால் கடிபட்டவர்கள் முடிந்த அளவு அந்த பாம்பின் வடிவத்தை மனதில் பதியவைத்துக்கொள்வது சிகிச்சைக்கு வசதியாக இருக்கும்.
சிலர் பாம்பு கடிபட்டதும் முதல் வேலையாக அந்த பாம்பை விரட்டிப்பிடித்து கொல்வார்கள். அதன் பிறகுதான் சிகிச்சைக்கு செல்வார்கள். அது ஆபத்தை வரவழைக்கும் செயல். கடிபட்டதை உணர்ந்த உடனே மருத்துவமனைக்கு விரைந்து, சிகிச்சை பெறவேண்டும்.
விஷமுள்ள பாம்பு கடித்தாலும், சூழலுக்கு தக்கபடி விஷம் பரவும் தன்மையில் மாறுதல் ஏற்படும். பாம்பு இரை எடுத்தவுடன் கடித்தால் விஷத்தன்மை குறைவாக இருக்கும். இரை பிடிப்பதற்கு முன்னால் கொத்தினால் மனித உடலில் செல்லும் விஷத்தின் அளவு அதிகமாக இருக்கும். துணியின் மேல்பகுதி வழியாக கடித்தால் விஷம் உள்ளே செல்லும் அளவு குறைவாக இருக்கும்.
பாம்பு கடித்ததும் செய்யக்கூடியவை..
பயம் கொள்ளக்கூடாது. கடிபட்டவரின் மனதை அமைதிப்படுத்தவேண்டும். டென்ஷன் இல்லாமல் இருக்கவேண்டும்.
பாம்பு கடிபட்டவர் பயம் கொண்டால் உடலில் அட்ரினாலின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். அது இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். ரத்தத்தில் கலக்கும் விஷம், அதன் மூலம் வேகமாக உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவும். பயம், பதற்றமின்றி மன அமைதியாக இருந்தால் விஷம் பரவுவது குறையும்.
பாம்பு கடிபட்ட நபரை நடக்கவைக்கக்கூடாது.
உடலுக்கு ஓய்வளிக்கவேண்டும்.
கடிபட்ட இடத்தில் அசைவு இல்லாமல் இருக்க, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு உபயோகப்படுத்தும் ஸ்பிளின்ட்டை பயன்படுத்தவேண்டும்.
கடிபட்ட இடத்தை இதய பகுதிக்கு கீழ் இருக்கும்படி பராமரிக்கவேண்டும்.
மேற்கண்டவை மூலம் விஷம் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.
செய்யக்கூடாதவை..
பாம்பு கடிபட்ட இடத்தை கத்தி, பிளேடு போன்ற எதை பயன்படுத்தியும் கீறக்கூடாது.
கடிபட்ட பகுதியை கயிறாலோ, வேறு உபகரணங்களாலோ இறுக்கி கட்டக்கூடாது.
கடிபட்ட இடத்தில் வாயைவைத்து உறிஞ்சி துப்புவதற்கு முயற்சிக்கக்கூடாது.
காயம்பட்ட இடத்தை கழுவலாம். ஆனால் பலமாக அதில் தண்ணீரை பீய்ச்சிஅடித்து கழுவக்கூடாது.
கடிபட்ட இடத்தில் ஐஸ் வைக்கக்கூடாது.
அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வரை உணவு எதுவும் வழங்கக்கூடாது.
காபி, டீ, மது போன்ற எதுவும் அருந்தக்கூடாது.
கடிபட்ட பகுதியை உயர்த்தி பிடிக்கக்கூடாது.
கடிபட்ட பாம்பை துரத்தி சென்று பிடிக்க நேரத்தை வீணாக்கக்கூடாது. அதன் வடிவம், நிறம் போன்றவைகளை நினைவில் வைத்திருந்தால் நல்லது.
பாம்பு கடிப்பதை தவிர்ப்பது எப்படி?
பாம்பு தானாக ஓடிவந்து யாரையும் கடிக்காது. பழி வாங்கும் என்ற கட்டுக்கதையும் உண்மையில்லை. தெரிந்தோ, தெரியாமலோ நாம் அதை உபத்திரவம் செய்தால் மட்டுமே அது நம்மை கடிக்கும்.
இரவில் வெளியே நடக்கும்போது செருப்பு அணிந்துகொள்ளவேண்டும். இருட்டில் நடக்கக்கூடாது. இருட்டில் டார்ச் பயன்படுத்தவேண்டும்.
இரவில் வெளியே நடக்கும்போது கையில் சிறிய தடி ஒன்று வைத்திருங்கள். அதை தரையில் தட்டியபடியே நடந்து செல்லுங்கள். பாம்புகளால் நமது சத்தத்தை அறிய முடியாது. பூமியின் அதிர்வைதான் அது உணர்ந்து செயல்படும். தரையில் தட்டிக்கொண்டே நடந்தால் மனிதர் வருவதை உணர்ந்து அது ஒதுங்கிவிடும்.
பாம்பு இருக்கக்கூடும் என்று கருதும் இடங்களில் இருந்து கற்கள், மரத் துண்டுகள் போன்ற எந்த பொருளையும் கையால் எடுக்காதீர்கள். அவைகளில் பாம்பு சுருண்டு கிடக்கும். எடுக்கும்போது கடித்துவிடும். எலிகள் இருக்கும் இடத்தில் இரை தேடி பாம்புகள் பதுங்கியிருக்கும்.
No comments:
Post a Comment