Thursday, June 5, 2014

சிறுமிக்கு ஐ.நா. பரிசு-ஓவியம்

சிறுமிக்கு ஐ.நா. பரிசு


மேலே உள்ள இந்த ஓவியம் அழகாக உள்ளதா? இந்த ஓவியம் உங்களைப் போல ஒரு குட்டிப் பெண் வரைந்ததுதான். அவள் பெயர் கந்தகே கியாரா செனுலி ஃபெரேரா. 8 வயதாகும் இவள் இலங்கையைச் சேர்ந்தவள். இந்த ஓவியத்தை எதற்காக அவள் வரைந்தாள் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே.
ஐ.நா. சபையில் சுற்றுச்சூழல் செயல் திட்டத்துக்கான ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆசிய - பசிபிக் பிராந்திய சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ‘வீணாகும் உணவு’ என்பதுதான் போட்டியின் தலைப்பு.
ஆயிரக்கணக்கான குட்டீஸ்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்கள். இந்தப் போட்டியில் கந்தகே கியாரா செனுலி ஃபெராரா, பூமி உருண்டையை உண்டியல் போலக் கற்பனையாக வரைந்திருந்தாள். அதில் குட்டீஸ்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து உணவுப் பொருட்களை சேமிப்பது மாதிரி ஓவியம் இருந்தது. இதுதான் ஆசிய அளவில் சிறந்த ஓவியமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக அந்தக் குட்டிப் பெண்ணுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
இதேபோல மற்ற கண்டங்களிலும் போட்டியில் பங்கேற்று குட்டீஸ்கள் படம் வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவியங்களுடன் இந்த ஓவியமும் தற்போது போட்டி போடப் போகிறது. அதிலும் வெற்றி கிடைத்தால் 2 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைக்கும்.
‘மாயா பஜார்’ பகுதிக்கு நீங்கள் நிறைய ஓவியங்களை அழகாக வரைந்து அனுப்புகிறீர்கள். இனி இதுபோன்ற போட்டிகள் நடக்கும்போது நீங்களும் கலந்துகொள்ளுங்கள். http://www.unep.org/Tunza/Children/22ndcompetition.aspx இதுதான் போட்டியை நடத்தும் ஐ.நா. சபை சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் இணையதள முகவரி. இதில் குட்டீஸ்கள் வரைந்த நிறைய ஓவியங்கள் இருக்கின்றன. உங்க அம்மா, அப்பா உதவியுடன் இந்த இணையதளத்தைப் பாருங்கள். ஒவ்வொரு வருஷமும் போட்டி நடக்கிறது.
அடுத்த ஆண்டு எப்போது போட்டி நடக்கும் என்று தெரிந்துகொண்டு நீங்களும் கலந்துகொள்வீர்கள் அல்லவா?

No comments:

Post a Comment