Monday, June 9, 2014

என்ஜினீயரிங் : எந்தப் படிப்புக்கு போட்டி?

எந்தப் படிப்பில் மாணவர்கள் அதிகம் சேருகிறார்களோ அந்தப் படிப்புக்குத்தான் மதிப்பு இருக்கிறது என்று கருதி அந்தப் படிப்பைத் தேர்வு செய்யாதீர்கள். ஒரு படிப்பில் சேருவதற்கு உங்களது விருப்பமும் அதற்கேற்ற திறமையும்தான் முக்கியம். பொறியியல் படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. எந்தப் பொறியியல் படிப்பை எடுத்துப் படித்தாலும் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது என்பதுதான் யதார்த்தம்.

ன்றைய மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் முக்கியப் படிப்பு, என்ஜினீயரிங். தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக பொறியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்து விடுகிறது. எனவே, பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது, தமிழ்நாட்டில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள் உள்ளன. பல்வேறு பொறியியல் பட்டப் படிப்புகள் இருந்தாலும்கூட, தற்போதைய நிலவரப்படி மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் போன்ற குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் சேருவதிலேயே பல மாணவர்கள் போட்டி போடுகிறார்கள்.  

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி துறைகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர இருந்த ஆர்வம் தற்போது குறைந்து விட்டது என்றாலும்கூட, எப்படியும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நினைத்து இப்படிப்பில் தொடர்ந்து மாணவர்கள் சேருகிறார்கள்.

இந்தப் படிப்பில் மொத்த இடங்களில் சேருகின்ற மாணவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறதே தவிர, சேரும் மாணவர் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அது கணிசமாகத்தான் இன்னமும் இருக்கிறது. கடந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் இருந்த 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பின. காலியாக இருந்த இடங்களின் எண்ணிக்கை 17,821. இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் 16,466 இடங்களில் 6,705 இடங்கள் பூர்த்தியாகின. அதாவது, ஐ.டி. படிப்பில் கவுன்சலிங் முடிவில் இருந்த காலி இடங்களின் எண்ணிக்கை 9,761.

மாணவர்களிடம் அதிக ஆர்வம் இருப்பதாகக் கருதப்படும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் இருந்த இடங்களின் எண்ணிக்கை 41,271. அதில் 32,794 இடங்கள் பூர்த்தியாகின. அந்தப் படிப்பிலும் 8,477 இடங்கள் காலியாக இருந்தன. இதேபோல, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் படிப்பில் உள்ள 42,996 இடங்களில் 24,992 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. இப்படிப்பில் 18,004 இடங்கள் காலியாக இருந்தன.

சிவில் என்ஜினீயரிங் படிப்பில் இருந்த 26,104 இடங்களில் 18,922 இடங்கள் பூர்த்தியாகின. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 26,790 இடங்களில் 13,734 இடங்கள் பூர்த்தியாகி உள்ளன. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் இருந்த 3,231 இடங்களில் 1,585 இடங்களும், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பில் 2555 இடங்களில் 1,309 இடங்களும், பயோ டெக்னாலஜி மற்றும் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி படிப்பில் 1,275 இடங்களில் 1,086 இடங்களும் பூர்த்தியாகின.

சென்ற ஆண்டின் முதல் கட்ட கவுன்சலிங் முடிவில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் போன்ற சில படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகமாகி இருப்பதையும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதேபோல குறைந்த எண்ணிக்கையில் உள்ள பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே காலியாக இருந்தன. என்ஜினீயரிங் படிப்பில் நமது தேவைக்கு அதிகமாகவே இடங்கள் இருப்பதால் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் காலி இடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதில் பிரச்சினை இருக்காது. தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் கிடைக்குமா என்றுதான் பார்க்க வேண்டியதிருக்கும்.

“மாணவர்கள் எந்தப் படிப்பில் சேர அதிகம் போட்டி போடுகிறார்கள் என்பதை வைத்து மட்டுமே டாப் டென் படிப்புகள் என்று கணக்குச் சொல்லிவிடுவது சரியாக இருக்காது. மாணவர்களின் ஆர்வத்துக்கும் நடைமுறை யதார்த்தத்துக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கின்றன. குறிப்பிட்ட படிப்பில் சேர்ந்து விடுவதால் மட்டுமே மாணவருக்கு வேலை கிடைத்து விடும் என்று சொல்லி விட முடியாது. மற்ற மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட படிப்பை எடுத்துப் படிக்கிறார்கள் என்பதற்காக அந்தப் படிப்பை மற்ற மாணவர்களும் தேர்வு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட சில படிப்புகள், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமும் அதற்கு ஏற்ற திறமையும் இருந்தால் மட்டுமே அந்தப் படிப்பில் சேர்வது நல்லது.

மற்றவர்கள் சேருகிறார்கள் என்பதற்காக தங்களுக்கு ஆர்வமில்லாத படிப்புகளில் சேர்ந்து படிக்கக் கூடாது” என்கிறார் பெருந்துறை மகாராஜா பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன். “சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். எனவே, அந்தப் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும்  சிறந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும். சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அந்த அளவுக்கு அதில் வேலைவாய்ப்பு இல்லை என்றால் அந்தப் படிப்பைப் படித்த பல மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்கிறார்கள் கல்வியாளர்கள்.

அத்துடன், சிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது நமது திறமைகளை வளர்க்க உதவியாக இருக்கும் என்பதால், நாம் விரும்பும் பாடப்பிரிவை படிப்பதற்கு சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது விருப்பமான பாடத்தில் இடம் கிடைக்காத சூழ்நிலையில், தங்களது அடுத்த விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஒரு படிப்பில் சேருவதற்கு முன்னதாக அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், அந்தப் படிப்பு, நமது திறமைகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன வேலையில் சேர விரும்புகிறோமோ அதற்கு ஏற்ற வகையில் இந்தப் படிப்பு இருக்குமா என்றும் பார்க்க வேண்டும். சில மாணவர்களுக்குக் குறிப்பிட்ட படிப்பில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதில் போதிய திறமை இருக்காது. அதுபோன்ற நிலையில், அந்தப் பாடப்பிரிவை எடுத்தால், அந்தப் பாடத்தைப் படிக்கத் திணற வேண்டியதிருக்கும்.

“படிப்புகளுக்கான பாப்புலாரிட்டி என்பது வட்ட சுழற்சி போன்றது. ஒரு காலத்தில் மாணவர்களிடம் பாப்புலராக இருந்த படிப்புகள், மற்றொரு காலத்தில் அந்தப் படிப்புகளுக்கான பாப்புலாரிட்டி குறைந்து போகும். கொஞ்ச காலத்திற்கு முன்பு மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயரிங்கில் மாணவர்களிடம் போதிய ஆர்வம் இல்லாததால் பல கல்லூரிகள் தங்களது சீட்களை சரண்டர் செய்தன. தற்போது நிலைமை மாறி மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர முயற்சி செய்கிறார்கள். இந்த நிலைமை அடுத்த நான்கு ஆண்டுகளில் மாறக்கூடும். எனவே, பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதில் பாப்புலாரிட்டியைப் பார்ப்பது சரியாக இருக்காது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பொறியியல் படிக்கின்ற மாணவர்களில் 70 சதவீத மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வது ஐ.டி. நிறுவனங்கள்தான். மெக்கானிக்கல் போன்ற பல்வேறு பொறியியல் படிப்புகளில் படித்த மாணவர்களும் கூட ஐ.டி. நிறுவனங்களில்தான் வேலைக்குச் சேருகிறார்கள். எனவே, மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் படிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு முன்னாள் இயக்குநர் ப.வே. நவநீதகிருஷ்ணன்.

படிப்பது என்பது வேலைவாய்ப்புக்காகத்தான். அதேசமயம், ஒரு குறிப்பிட்ட படிப்பை எடுத்துப் படிப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்து விடாது. அந்தப் படிப்பில் எந்த அளவுக்குத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தப் படிப்பில் சேர்ந்து படித்தாலும் அதில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு எப்படியும் வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது. படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது எதுவும் இல்லை என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற வகையில் படிப்புகளைத் தேர்வு செய்துகொள்வதற்கு உதவும் வகையில் சில முக்கியப் பொறியியல் படிப்புகள் குறித்த சிறிய அறிமுகம் இதோ...

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ்: என்ஜினீயரிங் படிக்க விரும்பும் பல மாணவர்களின் முக்கிய விருப்பம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ். இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன்ஸ் துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தங்களது முத்திரையைப் பதிக்கலாம் என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்து, தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவே பல மாணவர்கள் விரும்புகிறார்கள். எனவே, எந்தப் பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில் மாணவர்களிடம்  ஆர்வம் தொடர்கிறது. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாஃப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிக்கேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிக்கேஷன், கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் என்ஜினீயரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்: கம்ப்யூட்டர் என்ற மகத்தான கண்டுபிடிப்பு மனித வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி தனது முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் ஒரு புறம் இருந்தாலும்கூட, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிக அளவில் வேலைக்கு தேர்ந்தெடுந்தெடுப்பது ஐ.டி. கம்பெனிகள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். படித்து முடித்த திறமையாளர்களுக்கு உடனடி வேலை, கை நிறைய ஊதியம். கம்ப்யூட்டர் ஹார்டுவேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி: கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்கிற்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையின் உடன் பிறப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில் நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத் தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்புதான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய விருப்பப் படிப்புகளில் இதுவும் ஒன்று. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குப் பஞ்சமில்லை!

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்: எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு  மின் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இப்படிப்பைப் படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

சிவில் என்ஜினீயரிங்: பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் என்ஜினீயரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் என்ஜினீயர்களின் பங்கு முக்கியமானது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால் சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் என்ஜினீயர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் என்ஜினீயர்களுக்கு தனியார் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்து வருகிறது.

மெக்கானிக்கல்: பொறியியல் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை இது. தொழிற்சாலைகளில் பயன் படுத்தப்படும் இயந்திர சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், பொறியியல் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது இப்பாடப்பிரிவு. படிப்புக் காலம் மற்ற பொறியியல் படிப்புகளைப் போல 4 ஆண்டுகள்தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சாண்ட்விச் படிப்புக்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக (5 ஆண்டுகள்) படிக்க வேண்டும். இந்த ஓராண்டில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேர்முகப் பயிற்சி பெறுவார்கள். இதனால் சாண்ட்விச் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாத்தியங்கள் அதிகம். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்: ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் ஒரு பகுதியாக இருந்த ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தற்போது தனித் துறையாக வளர்ந்து விட்டது. வாகன அமைப்பு உருவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோமொபைல்  உற்பத்தி நிறுவனங்களிலும் ஆட்டோ மொபைல் ஆய்வு நிறுவனங்களிலும் பணிகளில் சேரலாம். இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இத்துறையில் படித்த பொறியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்: விமானங்களை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் அதனைப் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட்...என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை, பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பயோ டெக்னாலஜி: இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. விவசாயம், மருந்துப் பொருள்கள், பதனீட்டு உணவுகள், ஜவுளித்துறை...இப்படி இதன் பயன்பாடு விரிந்து வருகிறது. எனவே, இதுகுறித்த படிப்புகள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை  அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு  நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சமீபகாலமாக விப்ரோ, டி.சி.எஸ், இன்போசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.

இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்: இது தொழில் யுகம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகத் தற்காலத் தொழிற்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதற்காக இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்புகள் தேவைப்படுகின்றன. தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களையும் பணிபுரியும் மனிதர்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று கற்றுத்தரும் படிப்பு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைப் போன்றதே இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் துறை என்றாலும், தொழிற் சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்தி முறைகள், அதற்குப் பயன்படும் சாதனங்கள், அவற்றை ஆராய்ந்து தெரிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள், கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் போன்றவை இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்கில் கற்றுத் தரப்படுகின்றன. அரசுத் துறை, தனியார் துறைத் தொழிற்சாலைகளிலும் கன்ஸல்டன்சி நிறுவனங்களிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்: எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும்
சாதனங்களைப் பற்றிய படிப்புதான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன். எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதையும், அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். தொழில் நிறுவனங்கள், மின் நிலையங்கள், உரம் மற்றும் இரும்பு, ரசாயன ஆலைகளில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கெமிக்கல் என்ஜினீயரிங்: கெமிக்கல் என்ஜினீயரிங் தவிர்க்க முடியாத முக்கியத் துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமெண்ட், மருந்துகள், பெயிண்டுகள், செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும். நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகத்தில் (செக்ரி) கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பைப் படிக்கலாம்.

பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத் தொழிற்சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

No comments:

Post a Comment