Tuesday, June 10, 2014

ரேண்டம் எண் என்றால் என்ன?



பொறியியல் அட்மிஷனில் ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் ரேண்டம் எண் என்று சொல்கிறார்களே? அது பற்றி விளக்கிக் கூறுங்கள்!
கு. நரேஷ்குமார், கடம்பத்தூர், திருவள்ளூர்.

ரே மாதிரியான ரேங்க் மதிப்பெண்கள் (கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள்) பலர் இருக்கும் சூழ்நிலையில், யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண். ஒரே அளவு கட் ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு பேருக்கும் ரேங்க்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது முதலில் பார்க்கப்படும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அதையடுத்து நான்காவது விருப்பப்பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.

அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் இருவரது பிறந்த தேதியைப் பார்ப்பார்கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் 10 இலக்க எண்ணாகும். குலுக்கல் முறையைப் போன்று கம்ப்யூட்டர் மூலம் இந்த எண் உருவாக்கப்படுகிறது. இதில் கூடுதலான எண் வருபவர் ரேங்க் அடிப்படையில் முன்னுரிமை பெற்றவராகக் கருதப்படுவார். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் கவுன்சலிங்கிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?
திவ்யா, திருப்பாச்சித்தூர், மதுரை

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல், பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப்பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.

இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளையும்  சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் கணக்கில் 180 மதிப்பெண்களும் வேதியியலில் 180 மதிப்பெண்களும் இயற்பியலில்  190 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 182.5 தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களைப் பொருத்தவரை தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற்பயிற்சிப் பாடத்திற்கு (தியரி மற்றும் பிராக்டிக்கலைச் சேர்த்து) நூறு மதிப்பெண்களும் சேர்த்து 200-க்கு எவ்வளவு என்பதன் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் நடைபெறுவதற்கு முன்னதாகவே தொழிற்பயிற்சிப் பிரிவு (வொகேஷனல்) மாணவர்களுக்கான கவுன்சலிங் தனியே நடத்தப்படும்.

பி.ஆர்க். படிப்புகளுக்குத் தனியே ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங் நடத்தப்படும். நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் கணக்கிடப்பட்டு மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 186.5. எனக்கு எந்தப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்?
கொ.அமுதினி, சிவியம்பாளையம், நாமக்கல்

நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்து எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை இப்போதே திட்டவட்டமாகக் கூற முடியாது. ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டாலும்கூட, நாம் துல்லியமாகக் கணக்கிட்டு விட முடியாது. அதேசமயம், கடந்த ஆண்டு நிலவரத்தை வைத்து உத்தேசமாகத் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டில் எந்தெந்தக் கல்லூரிகளில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் எந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்ற விவரங்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பார்த்து நீங்கள் விரும்பும் கல்லூரியில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் எந்த மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நமது மதிப்பெண்களை விட ஒன்றிரண்டு மதிப்பெண்கள் அது குறைவாக இருந்தால் அந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க சாத்தியம் உள்ளது என்றும் நமது மதிப்பெண்களைவிட ஒன்றிரண்டு மதிப்பெண்கள் கூடுதலாக இருந்தால் அந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க சாத்தியம் குறைவாக உள்ளது என்றும் கருதலாம். இதைப்போல, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளைப் பார்த்து முன்னதாகவே பட்டியலிட்டு வைத்துக் கொண்டால், கவுன்சலிங்போது கல்லூரிகளைத் தேர்வு செய்ய உதவியாக இருக்கும். அத்துடன், கவுன்சலிங் தேதிக்கு முன்னதாக உங்களது பட்டியலை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

அண்ணா பல்கலைக்கழக இணையதள முகவரி:  www.annauni.edu
டாக்டர் ஆக என்ன திறமை வேண்டும்?
என். ஹரிபிரசாத்

டாக்டராவதற்கு பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களுடன் வேறு என்ன திறமைகள் வேண்டும் என்பதை விளக்குகிறார் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குடல்  இரைப்பை மருத்துவத் துறை முன்னாள் தலைவர் டாக்டர். ஆர்.சுரேந்திரன்

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிட்டோம். அடுத்து அந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கிறது. அடுத்து ஐந்தரை ஆண்டுப் படிப்பு. ஒரு டாக்டராக உருவாக இது மட்டும் போதுமா? அதற்கு ஒரு கனவு வேண்டும்.  மதிப்பெண்கள் என்பது ஒரு அளவீடு மட்டுமே. அது மாணவர்களின் திறமையை நிர்ணயம் செய்வது கிடையாது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். என்று மருத்துவம் சார்ந்த படிப்புகள் எதை தேர்வு செய்தாலும் சரி, அதனை ஒரு லட்சியமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களால் மட்டுமே நன்றாகப் பரிணமிக்க முடியும்.

சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரத் தேர்வு பெறுகிறார்கள். ஆனால் அதில் ஒரு சில மருத்துவர்களே சமுதாயத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாகிறார்கள். புரிதல்  இல்லாதபோது யாரோ ஒருவரின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப படிக்க வேண்டுமே என்ற சூழ்நிலை மாணவர்கள் மத்தியில் உள்ளது. மதிப்பெண்கள் பெற்றுவிட்டோம், பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்று  மருத்துவத் துறையை தேர்வு செய்யக்கூடாது. நாம் மருத்துவத் துறைக்கு எதற்காகப் படிக்கச் செல்கிறோம் என்ற கேள்வியை மாணவர்கள் அவர்கள் மனதில் கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தக் கேள்விக்கு ஓர் உறுதியான பதில் கிடைத்துவிட்டால் தாராளமாக மருத்துவத் துறையை எடுத்து விரும்பிப் படிக்கலாம்.

நம் நாட்டில் 17 வயதில் பள்ளிப்படிப்பு முடித்த ஒரு மாணவரால்,  தான் என்னவாக ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியாது. ஒரு தடுமாற்றம் இருக்கும். குழப்பதோடு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில்  தவறுதலாகப் போகும் வாய்ப்பும் உண்டு. ஆனால் இது போன்ற சூழ்நிலை வெளிநாடுகளில் இல்லை. நம் நாட்டில் 17 வயதில் மருத்துவத்துறையில் படிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பு முடித்ததும் ஏதேனும் ஓர்  இளநிலைப் படிப்பை கட்டாயமாக படிக்க வேண்டும். இளநிலைப் படிப்பு முடிந்தவுடன்  மருத்துவப் படிப்பில் சேரலாம். அதற்கும் சில விதி முறைகள் உண்டு. மதிப்பெண்கள் மட்டும் அங்கு தேர்வு முறையில் எடுத்து கொள்வது இல்லை. ஆப்டிடியூட் மற்றும் அட்டிடியூட் தேர்வு வைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதனால் அங்கு திறமை வாய்ந்த டாக்டர்கள் உருவாகிறார்கள். ஆனால் அது போன்ற முறைகள் இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் தேர்வு முறையில் இல்லை.
மருத்துவத்துறையில் தற்போது யாரும் எம்.பி.பி.எஸ். படிப்போடு நிறுத்தி விடுவதில்லை. மேற்கொண்டு முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று  மாணவர்கள் படிக்கும்போதே திட்டம் போட்டு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவம் சார்ந்த புதிய விஷயங்களை தினமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தேடல்கள் அதிகரிக்கும்.

மாணவர்கள் கவுன்சலிங்  செல்லும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பெற்றோருக்காக படிக்கப் போகிறோமா? மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையில் படிக்கப் போகிறோமோ? பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கப் போகிறோமோ?  பணம் சம்பாதிப்பதற்கு உலகில் நிறைய வழிகள் உள்ளன. இதுபோன்ற சிந்தனையுடன் இருக்கும் மாணவர் டாக்டர் படிப்பில் சேர்ந்து டாக்டர் பட்டத்தைப் பெற முடியும். ஆனால்  சிறந்த டாக்டர் ஆவது சிரமம்.

ஒரு நல்ல டாக்டர் என்பவர், நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை அவர்களுக்கு இருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான சிகிச்சையை முறையாக தர முடியும். வலியுடன் வரும் மனிதனுக்கு அந்த வலியை போக்கி, நலமுடன் இருக்கச் செய்யும் போது அந்த மனிதன் சொல்லும் நன்றி வேறு எதற்கும் ஈடாகாத ஒன்று. மரணத்தின் கடைசித் தருவாயில் இருக்கும் மளிதர்களை காப்பாற்றும் போது கிடைக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. கடினமான உழைப்பும், சிதறாத குறிக்கோளும் கொண்டுள்ள மாணவர்கள் நிச்சயமாக சிறந்த டாக்டராக சமுதாயத்தில் ஜொலிக்க முடியும்.

ஐராவதம்  மகாதேவனுக்கு விருது

மும்பை ஏசியேட்டிக் சொசைட்டி வழங்கும் கௌரவமிக்க விருதான கேம்பெல் நினைவு தங்கப் பதக்கம் பெற சர்வதேசப் புகழ் பெற்ற கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் ‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவரது கல்வெட்டியல் துறை ஆய்வுகளை கௌரவிக்கும் வகையில்,  வருகிற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் நிறுவன தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஐராவதம் மகாதேவன், பத்மஸ்ரீ விருது, ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப், தொல்காப்பியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

No comments:

Post a Comment