Thursday, September 18, 2014

ஜோதிடம் பலிக்குமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சமீபத்தில் கல்யாணத்தின்பொருட்டு பொருத்தம் பார்க்கச் சென்றிருந்தோம். பொருத்தம் இல்லை என்றார் ஜோதிடர். அதேநேரம், 'ஜாதகப் பொருத்தம் அருமையாக இருப்பதாக எங்கள் ஜோதிடர் கூறுகிறார். எனவே, மேற்கொண்டு பேசலாம்’ என்கிறார்கள் பெண் வீட்டார்.
இப்படிக் குழப்பமான பலன்களும் தீர்வுகளுமே கிடைக்கும் எனில், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கையே அற்றுப் போய்விடாதா? ஜோதிடத்தை ஏற்பதா, தவிர்ப்பதா?
இ.நெல்லையப்பன், தாழையூத்து
முதல் கோணம்...
ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவங்கள் ஏட்டில் இருக்கும். அதை மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை. விளைவு, ஜோதிடம் சொல்பவரின் அனுபவமே ஜோதிடமாக மாறிவிட்டிருக்கிறது. சூழலுக்கு உகந்த விளக்கம் என்பது அதன் பலனாக உருவெடுத்தது. அதற்கென்று பல முகங்கள் உண்டு. மக்களின் சிந்தனை ஓட்டத்துக்கு உகந்த முறையிலான பல விளக்கங்களும் உண்டு!
பாமரர்கள் ஜோதிட அறிவு அற்றவர்கள். அது, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பலன் சொல்லும் சிலருக்கு சாதகமாகிவிட்டது. ஜோதிடர்களில் பலர் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டு முன்னேற முனையமாட்டார்கள். அவர்களுடைய  மனம் அதற்கு இடமளிக்காது. அவர்களது விளக்கம் ஜோதிடம் தெரியாதவர்களிடம் வெற்றி பெறும். அப்பாவி மக்களிடம்தான் அவர்கள் பெருமை பெற வேண்டும். அவர்களைப் பிரபலம் ஆக்குவது, அப்பாவி மக்கள்தான்.
? நாம் ஜோதிடத்தை ஏற்பதற்கும், ஜோதிடர்கள் இடையிலான கருத்துப் பரிமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஜோதிடத்தை ஏற்றவர்களின் மனம் இனம் தெரியாத பயத்தில் ஆழ்ந்திருக்கும். ஜோதிடம் தவிர, மற்ற துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாகக் கலந்துரையாடி, உயர்ந்த கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, உண்மையை உள்வாங்கி உயர்ந்து விளங்க முற்படுவார்கள். ஆனால், ஜோதிடத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தத்துவங்களை விளக்கும் நூலறிவை ஒதுக்கிவிட்டு, தங்களின் அனுபவத்தையே தத்துவமாக்கி, மற்ற ஜோதிடர்களின் தகவல்களை உதறித் தள்ளுவார்கள். இது, சமூகத்துக்கு உண்மையான பலனை அளிக்காது.
பலர் ஜோதிட பட்டப் படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் இந்திய அரசாங்கம் நடத்தும் சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் படித்து, ஜோதிட அறிவைப் பெற்று விளங்குகிறார்கள். ஆனாலும், சம்ஸ்கிருத மொழியின் மீதான பகை ஜோதிடத்திலும் ஊடுருவி, சம்ஸ்கிருத ஜோதிட நூல்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டன. அவற்றின் மொழிபெயர்ப்புகளுடன் கூடிய கையேடுகளையே ஜோதிடம் பார்ப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிட அறிவு இல்லை என்பது மனசாட்சிக்குத் தெரியும். இவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் ஜோதிடத்தின் பரிந்துரையை ஏற்பதில்லை. ஆக, இவர்களும் பல இன்னல்களில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.
வாழ்க்கைப் பயணம் சிறப்புற, பொருளாதாரம் வலுப்பெற... இத்தகைய நோக்கங் களுக்காகவும் ஜோதிடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. உலகம் வியாபாரமயமாக மாறும்போது, ஜோதிடமும் அதில் இடம்பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை. எல்லா தொழில்களிலும் அதில் ஈடுபடுவதற்கான தொழில் அறிவு அவசியம். ஆனால், ஜோதிடத்தில் மட்டும் அப்படியான அறிவு, அனுபவம் இல்லாமலேயே தொழில் செய்யலாம் எனும் நிலைதான் உள்ளது.
? எனில், ஒரு சாஸ்திரமாக இல்லாமல் வியாபார நுணுக்கமாக மட்டுமே ஜோதிடம் பயன்படுத்தப்படுகிறது என்கிறீர்களா?
பெரும்பாலும் அப்படித்தான்! முன்பு ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்திய பரம்பரைகளும் இன்றைக்கு ஜோதிடம் பார்த்து வாழ்க்கையை நடத்துகின்றன. கணினியைப் பயன்படுத்தி ஜோதிட வியாபாரம் விரிவுபெற்று விளங்குகிறது. கேள்வியைக் கேட்ட நொடியில் பலன் அளித்து மகிழ்விக்கிறார்கள். கல்வியைத் தொடர முடியாதவர்கள், இடையில் வேலை இழந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள், உழைத்து முன்னேற விருப்பம் இல்லாதவர்கள் ஆகியோரில் பலர், ஜோதிடத்தைக் கையாண்டு சேவை செய்பவராகத் தென்படுகிறார்கள். சொல்வளம் இருந்தால் போதும்; ஜோதிடத்தைக் கையாள லாம். அப்பாவி மக்கள் இருக்கும் வரை இவர் களுடைய தொழில் சிறப்புற்று விளங்கும்.
முன்பு பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகம் கணித்து வந்தார்கள். கணினி வந்த பிறகு கணிக்க வேண்டிய அறிவும் தேவை இல்லை; இன்டர்நெட்டில் ஜாதகம் கணிக்கும் முறை இனாமாகக் கிடைத்து விடும். அதை காகிதத்தில் ஏற்றி அளித்துவிடலாம். பணமும் சேர்ந்துவிடும். இதுபோன்றவர்கள் தங்கள் பெருமையை வளர்த்துக்கொள்ள மீடியாக்களும் உதவுகின்றன.
? எல்லா துறைகளையும் போன்று ஜோதிடமும் விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்கிறது. அப்படியிருக்க கணினி ஜோதிடத்தை ஏற்க முடியாது என்பது சரியாகுமா?
அதனால், போலிகளுக்கான பயன்பாடு பெருகும் என்பது தான் எங்கள் கவலை. விஞ்ஞான அறிவும், கல்வியறிவும் உலக ளாவிய நிலையில் நாலு கால் பாய்ச்சலில் விறுவிறுப்போடு முன்னேறிக்கொண்டிருக்கும் இன்னாளில், ஜோதிடம் குறித்து அடிப்படைத் தகவல்களையே அறியாத பலபேருக்கு, ஓங்கி வளர்ந்த பெரும் நிறுவனம் போன்று, ஜோதிடத் துறை வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருப் பது, சிந்தனையாளர்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, அரசியல் நுழைவு, உயர் பதவி, வியாபாரம், சொத்துச் சேர்க்கை, பங்குச்சந்தை, லாட்டரிச்சீட்டு... இப்படி பல வடிவங்களில் விரிவுபெற்று, வாழ்வின் கணிசமான பங்கை தன் வசம் வைத்துக்கொண்டு, தன்னை விஸ்வரூபமாக்கிக் கொண்டிருக்கிறது ஜோதிடத் துறை. பல இடைத்தரகர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய ஜோதிடத் துறை, மற்ற பல துறைகளில் உள்ளவர்களையும் தன்னிடம் சரணடைய வைத்திருக்கிறது. ஜாதகம் பொய்த்து விவாகரத்தைச் சந்தித்தாலும் அவர் களுக்கு சாதகமாக மாறிவிடும். அதாவது, கோயில் வழிபாடுகளைப் பரிகாரமாகப் பரிந்துரைத்து, புதுத் திருமணத்தில் இணைய வைக்கும் பணியின் மூலம் வியாபாரத்தை இன்னும் விரிவாக்க இயலுகிறது. கலப்புத் திருமணம், காதல் திருமணம், விதவைத் திருமணங்கள் அத்தனையும் அதன் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். ஆக, பரிச்ரமம் இல்லாமலே பல வழிகளில் பணம் சேரும் நிறுவனமாக விளங்குகிறது, ஜோதிடம்!
? ஜோதிடத் துறையில் உண்மையானவர்களே இல்லை என்கிறீர்களா?
அப்படி இல்லை! தேர்ச்சி பெற்ற உண்மையான விளக்கங்களை அளித்து மக்கள் சேவை செய்யும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். எனினும், குடத்தில் வைத்த விளக்குபோல் சமுதாயத்தில் எல்லோருக்கும் அவர்கள் தென்படுவதில்லை. அவர்களுடைய விளக்கங்களும் மக்களைக் கவரவில்லை. அத்துடன் மக்களின் சிந்தனையும் மாறுபட்டு இருப்பதால், அவர்களுக்கும் உண்மையான சேவை கிடைப்பது இல்லை. உழைக்காமல் ஊதியம் பெறும் எண்ணம் இருப்பவர்களில் பலர் ஜோதிடத்தை அணுகு வார்கள். அவர்களைத் திருப்திப்படுத்த உண்மை ஜோதிடத்தால் இயலாது. இந்தப் பாகுபாடு உண்மை அல்லாதவர்களுக்கு உதவியளிக்கிறது.
இப்போது தென்படும் ஜோதிட விளக்கங்கள், மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதைவிட, அவர்களை துயரத்தில் ஆழ்த்துவதே அதிகம்.திருத்தமுடியாத அளவுக்கு ஜோதிடத்தின் முகம் மாறிவிட்டது. புதுத் தலைமுறையினர் முறையாகப் பயின்று மக்கள் சேவையில் இறங்க வேண்டும். பழம்பெருமை மிக்க அந்தப் பொக்கிஷத்தைக் காப்பாற்றி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் பெற்று அறிந்து, ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். கடவுள் கண் திறக்க வேண்டும்.
இரண்டாவது கோணம்...
பழைமையின் பெருமையை மட்டும் மதிக்கும் தங்களது சிந்தனை இன்றைய் சூழலுக்கு எதிரானது. இன்றைய சிந்தனையாளர்கள் பல அதிசயங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் பழைய நடைமுறைகள் வெற்றி பெறுவதில்லை. புதுத் தலைமுறையினரின் சிந்தனை ஓட்டத்துக்கு உகந்த வகையில், ஜோதிடம் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
? அதற்காக உண்மை ஷரத்துக்கள் இல்லாத ஜோதிட பலன்களை ஏற்க முடியுமா?
ஒட்டுமொத்தமாக எதையும் புறக்கணித்து விடக் கூடாது. இன்றைக்கு உகந்த வகையில், கணினி வாயிலாகவும் ஜோதிட அறிவை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறார்கள். கரடுமுரடான ஜோதிட வழியை சூழலுக்கு உகந்த முறையில் செப்பனிட்டு அளித்துள்ளார்கள். நொடியில் பலன் சொல்லும் அளவுக்கு, ஜோதிடத் தகவல் களை ஓரிடத்தில் திரட்டிவைத்து ஆராயும் திறமையை தொழில்நுட்பத் துறை அளித்துள்ளது. பல நூல்களில் சிதறிக்கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் சேர்த்து அதன் சாதகபாதகங்களை கவனித்து, பலன் சொல்லும் திறன் வளர்ந்திருக்கிறது. மொத்தத்தில், சமுதாய வளர்ச்சிக்கு ஈடாக ஜோதிடமும் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஜோதிடரை அணுகாமலேயே கணினியில் தங்களது வருங் காலத்தை அறிய வழிவகை செய்யப்பட்டிருக் கிறது. சுருங்கச் சொல்வதானால், கணினி வந்தபிறகு ஜோதிடத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டிருக்கிறது எனலாம்.
ஜோதிடம் தொடாத நாளேடுகளோ, சின்னத் திரையோ இன்று இல்லை. ஒட்டுமொத்த சமுதாயமும் அதை வரவேற்று, அதன் வழியில் மக்களுக்குச் சேவை செய்கிறது. சிந்தனை முடங்கித் தவிக்கும் மக்களுக்கு, முடங்கிப்போன சிந்தனையை முடுக்கிவிட்டு வெற்றி பெறச் செய்கிறது. மனிதன் தோன்றிய நாளில் இருந்து ஜோதிடம் கையாளப்பட்டு வருகிறது. வருங்காலத்தை அறிய ஜோதிடத்தைத் தவிர, மாற்று வழி இல்லை. வேதத்தின் அங்கமாக வேத காலத்தில் இருந்து தொடரும் ஜோதிடத்தை, குறுகிய கண்ணோட்டத்துடன் தவறாக பார்ப்பது அறிவீனம்.
? அப்படியென்றால், குறைகளோடு திகழ்ந்தாலும் ஜோதிடம் அவசியம்தான் எனச் சொல்ல வருகிறீர் களா?
நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!
நல்லநேரம், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, புதிய முயற்சிகளுக்கான நேரத்தின் ஒத்துழைப்பை அறிந்துகொள்வது இதற்கெல்லாம் ஜோதிடம் வேண்டும். துறவிகளும் தங்களது வாரிசைத் தேர்வு செய்ய ஜோதிடத்தை அணுகுவார்கள். தங்களது 'முக்தி’யை (இறுதி நாள்) ஜோதிடம் வாயிலாகத் தெரிந்துகொள்வார்கள். கடவுளை ஏற்காத பௌத்த ஜைன மதங்களிலும் மடாதிபதிகள் தங்களின் வாரிசைத் தேர்வு செய்ய ஜோதிடத்தை நாடுவார்கள். கோயில் வழிபாடுகளும் ஜோதிடத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
பிறந்த நாள், இறந்த நாளையும் ஜோதிடத்தை வைத்து நிர்ணயம் செய்வார்கள். நிலநடுக்கம், பெருவெள்ளம், புயல், எரிமலை போன்றவற்றை முன்கூட்டியே அறியவும் ஜோதிடம் உதவும். அன்றாடம் நிலவும் சூடு, குளிர்ச்சியையும் ஜோதிடம் கணித்து அளிக்கும். கால மாற்றத்தில் நிகழும் சாதகபாதகங்களை அறுதியிட்டுச் சொல்லும். ஆக, மக்களின் வாழ்க்கையில் கால மாற்றத்தால் நிகழும் வருங்கால வரைபடத்தை விளக்கி, எச்சரிக்கையுடன் வாழ்வதற்கு ஜோதிடம் பரிந்துரைக்கும்.
? அதற்காக, அதை அப்படியே ஏற்கச் சொல்கிறீர்களா?
முழுவதுமாகத் தவிர்த்துவிட முடியாது என்று சொல்கிறோம். ஜோதிடம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அளவுக்குப் பற்றிக்கொண்டிருக்கிறது. மேடையில் அனல் பறக்கப்பேசி, ஜோதிடத்தின் துயில் உரிக்கும் சீர்திருத்தவாதிகளும்கூட நல்ல நேரம் பார்த்துதான் மேடை ஏறுவார்கள். படப்பிடிப்பு, வேட்புமனுத் தாக்கல், பதவியேற்பு, ஆடை ஆபரணங்கள் வாங்க, அவற்றை அணிய, விதை விதைக்க, அறுவடை செய்ய, பத்திரப் பதிவு செய்ய, கடைக்கால் தோண்ட, புதுமனை புகுவிழா, காதணி விழா, காலணி வாங்க, திருமணம் செய்ய, பிரசவம்  சிசேரியன், பள்ளிக் கூடத்தில் பிள்ளையைச் சேர்க்க, வேலையில் நுழைய, முதல் உணவு அளிக்க, பயணம் மேற்கொள்ள ஜோதிடத்தை அணுகுவார்கள்.
அதுமட்டுமா? மருந்துக்குக் கட்டுப்படாத பிணிகளைத் தெரிந்துகொள்ள, வருங்காலத்தில் வரும் பிணிகளை அறியவும், அகால மரணம், அபமிருத்யு, துர்மரணம் ஆகியவற்றை அறியவும், குழந்தைகளின் எண்ணிக்கையை, அவர்களின் ஆயுளை அறியவும் ஜோதிடம் பயன்படுகிறது. ரத்தத்தில் இணைந்துவிட்டது ஜோதிடம். பல வடிவங்களில் தென்படும் காலண்டர்களும், டைரிகளும் ஜோதிடத்தின் விரிவாக்கம். தினமும் தினபலனும் ராசி பலனும் பார்ப்பது வாழ்க்கையின் நடைமுறை ஆகிவிட்டது.
இப்படி, காலத்துக்கு உகந்த வகையில், மக்களுக்குச் சேவை செய்வதை குறிக்கோளாகக் கொண்டு, மன உளைச்சலை அகற்றும் மருந்தாக விளங்குகிறது, இன்றைய ஜோதிடம். அதன் அறிவுரைகள் மனப் பதற்றத்தை அகற்றி, முனைப்புடன் செயல்பட ஒத்துழைக்கின்றுன. வாழ்வில் ஒரு பகுதியை (மனப்போராட்டத்தை) நிறைவு செய்து அவனை முழுமையாக்குகிறது என்கிற பெருமையைப் பெற்றது, இன்றைய ஜோதிடம் மட்டுமே.
மூன்றாவது கோணம்...
கணினியின் சாதனை சமு தாயத்துக்குச் சோதனையாக மாறியிருக்கிறது. கணினியானது ஜோதிடத் தகவலை ஈட்டித்தரும். பலன் சொல்லாது. எந்த வகை யிலும் ஜோதிட அறிவை (பலன் சொல்லும் திறமையை) அது ஏற்படுத்தவில்லை. நாம் கொடுக் கும் தகவலை அது வெளியிடும் அவ்வளவுதான். 2016ம் ஆண்டில் பிறக்கப்போகும் குழந்தைக்கு அல்லது பிறக்காத குழந்தைக்கும் இப்போதே ஜாதகம் கணித்துத் தந்துவிடும் கணினி. தரப்பட்டிருக்கும் தகவலின் அடிப் படையில் பலனைச் சொல்லும்!
இதிலிருந்து, ஜாதகம் என்பது காலத்தின் வரை்படம் என்பது தெளிவாகும். பிறந்த வேளையில் காலத்தோடு இணைந்த மனிதனுக்கு அதை ஜாதகமாக ஏற்கிறோம். கடந்த காலத்திலும் கூட வருங்காலத்தில் தோன்றுபவருக்கு ஜாதகம் கணிக்க முடிகிறது. ஆகாசத்தோடு இணைந்த காலத்தில் கிரகங்களது இணைப்பு இருப்பதால் கால ஜாதகம் பலன் சொல்வதில் வெற்றி பெறுகிறது.
? ஜோதிடத்தைப் பொறுத்தவரையிலும் நவீனத்தின் தாக்கம் கூடாது என்கிறீர்களா?
கணினி புரட்சி கணிதத்துக்கு எந்த வகையிலும் ஆக்கம் தராது. ஜாதக பலன் பொய்த்துப்போன நிலையில் ஜோதிடரை அணுகுவார்கள். அவர், நேர்காணலில் இருக்கும் நேரத்துக்கு (காலம்) ஜாதகத்தை உருவாக்குவார். அதுவும் காலத்தின் வரைபடமே! அதை, ஜோதிடம் பார்க்க வந்த வேளையுடன் இணைத்துப் புதுப் பலனை உதிர்ப்பார் ஜோதிடர். தோஷத்தையும் பரிகாரத்தையும் சொல்லி அவர் சிந்தனையைத் திருப்பி வழியனுப்பிவிடுவார். அதற்கு 'ப்ரச்ன ஜோதிடம்’ என்று சிறப்புப் பெயர் உண்டு. கீழ் கோர்ட்டில் தோற்றால், மேல் கோர்ட்டில் அப்பீல் செய்வது போல், ஜாதகத்தின் உருவத்தை  மாற்றி தோல்வியைச் சந்திக்கவைப்பார்.
அதேபோல், பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் ஆழமான நம்பிக்கை எவருக்கும் இல்லை. விரும்பிய பெண்ணை அடைய, ஆண் வீட்டாரை இணங்கவைக்க ஜோதிடரின் சிபாரிசை நாடுகிறார்கள். சம்பந்தத்தை முளை யிலேயே விலக்கவும் ஜோதிடரின் சிபாரிசை எதிர்பார்ப்பார்கள். தங்களுக்கு வேண்டிய தகவலைப் பெறுவதற்கு ஜாதகம் அவர்களுக்குப் பயன்படுகிறது. ஜாதகத்தைத் தவிர, மற்ற தகவலை அறிவதே குறிக்கோளாகத் திகழ்கிறது.
? ஆக, வெறும் சம்பிரதாயமாக அல்லது குறிப்பிட்ட எதிர்பார்ப்பு களுக்கு ஒரு தளமாக மட்டுமே திகழும் ஜோதிடம் வேண்டாம் என்பது தங்களின் நிலைப்பாடா?
அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!
காதல் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஏற்பார்கள். அங்கு ஜாதகம் பார்க்கும் படலம் படுத்துவிடும். விவாஹரத்து பெற்ற பிறகு அடுத்த திருமணத்திலும், விதவை மறுமணத்திலும் ஜாதகம் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள். பெற்றோர் விருப்பம் குழந்தைகளின் திருமணத்தில் அரங்கேறாது. எனவே, அவர்கள் பழைமையைத் துறக்க முடியாமலும், புதுமையை ஏற்க முடியாமலும் பேசாமடந்தையாக இருந்து, குழந்தைகளின் விருப்பத்துக்கு இணங்கி விடுவார்கள். புதுத் தலைமுறையினருக்கு ஜாதகத்திலும் பழைமையிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
சில ஜோதிடர்களின் அணுகுமுறை விசித்திரமாக இருக்கும். அவர்களின் தோற்றம் வெளிநாட்டுக் கலாசாரப்படி இருந்தாலும், நெற்றியில் திருநீறும், சந்தனமும் குங்குமமும் இருக்கும். கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை மிளிரும். தன்னைச் சுற்றிலும் தெய்வத் தின் திருவருவங்கள், மகான்களின் திருவுருவங் களை வைத்திருப்பார்கள். அறை முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம் பரவியிருக்கும். அவர்களது இனிமையான வரவேற்பு அப்பாவிகளை ஈர்த்துவிடும். எதிரில் கணினியை திறந்துவைத்துக் கொண்டு, வரும் அன்பர்களது பிறந்த தேதி யைக் கேட்டவுடன், பட்டனை அழுத்தி அவனது ஜாதகத்தை கணினியில் பார்த்து, நட்சத்திரத்தையும் ராசியையும் சொன்னதும், ஜோதிடம் பார்க்க வந்தவருக்கு மெய்ம்மறந்து போகும். ஜோதிடரின் மீதான நம்பிக்கை வலுத்துவிடும். பஞ்சாங்கத்தில் இடம் பிடித்த பத்து பொருத்தங்களை அலசி ஆராயாமல், சான்றில்லாத விளக்கத்தை பாமரர்கள் மனதில் பதிய வைப்பார்கள். அதை நம்பி திருமணத்தில் இறங்கி, விவாஹரத்தை சந்தித்தவர்களும் உண்டு.
முதல் திருமணம், மறுமணம், விவா ஹரத்து, கலப்புத் திருமணம்  இப்படி வகைப் படுத்தி எல்லோருக்கும் உதவி செய்யும் ஜாதக பரிவர்த்தனை கேந்திரங்கள் நிறைந்து காணப் படுகின்றன. முன்பு வீட்டு நிகழ்வாக இருந்த திருமணம் தற்போது சமூக நிகழ்வாக மாறி வருகிறது. பண்டைய நாளில் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை என்று ஓரிடத்தில் கூடுவார் கள்; நேரடியாகவே ஆடு மாடுகளை விற்பார்கள்; வாங்குவார்கள். அந்தப் பாணியில் தற்போது மணமக்கள் நேர்காணலும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கெல்லாம் ஜோதிடத் துக்கு வேலை இல்லை. ஜோதிடத்தில் ஆரம்ப மானது கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று, மணமக்கள் விருப்பத்தில் முற்றுப்பெறுகிறது. அநாதையாக வெளியேறிவிடுகிறது ஜோதிடம். இப்படிப் புரையேறிய புது நம்பிக்கைகளை அகற்றுவது எளிதல்ல. இந்த விளை யாட்டு, நடுத்தர மக்களை நடுத் தெருவில் நிற்க வைப்பது பரிதாபம்.
உருக்குலைந்த வீட்டைச் சரி செய்ய இயலாது. அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுப் புதிதாக எழுப்ப வேண்டும். தாறுமாறான வேள்வியைச் சரிசெய்ய இயலாமல், ஒட்டுமொத்தமாக அழித்தார் புத்தர். ஜோதிடத்தில் பட்டப்படிப்பு, பட்ட மேற் படிப்புப் பெற்றவர்களை இந்த தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அந்த நல்ல காரியத்தை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்தினால், நாட்டு மருத்துவம் கட்டுப்படுத்தப்பட்டு விளங்குவது போன்று ஜோதிடமும் விளங்கும்.
    தங்கள் சிந்தனைக்கு ஒருவார்த்தை...
ஒழுக்கமானது ஒட்டுமொத்தமாக விலகியதால் இந்த விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. கற்றுணர்ந்து, மக்களுக்குச் சேவை செய்ய முனைய வேண்டும். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானம். ஆகாயத்தில் வளைய வரும் கிரகங்களும் அதற்கு அடிப்படை. அப்படியிருக்க, 'நான் விஞ்ஞான முறையில் வித்தியாசமாக, துல்லியமாக பலன் சொல்வேன்’ என்கிற விளம்பரம் எல்லாம், அவன் ஜோதிட அறிவு அற்றவன் என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதாகவே அமையும்.
ஜோதிடர் என்பவர் ஜோதிடத்துக்கும் மக்களுக்கும் இடைத்தரகராகச் செயல்படக் கூடாது. வியாபாரிகளில் தென்படும் இடைத் தரகர் களுக்குப் பண்டங்கள் உருவாவதும் தெரியாது; பயன்படுத்துபவர்களின் பங்கும் தெரியாது. சட்டியில் இருக்கும் பொருள் அகப்பைக்குத் தெரியாது; உண்டவனின் உணர்வும் தெரியாது. அப்படித்தான் இதுவும்.
ஜோதிடர் இடைத்தரகராக மாறக் கூடாது. விரும்பிய பலனைப் பெற, அதற்கு உகந்த நல்ல காலம் ஏற்பட, கடவுளை கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டுவோம். எல்லாத் துறைகளும் வளர்ந்தும் தேய்ந்தும்தான் இருக்கும். தேய்ந்த நிலை மாறி வளர்ச்சியை எட்டுவதற்கு ஜோதிடர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
பதில்கள் தொடரும்...

No comments:

Post a Comment