Tuesday, September 30, 2014

உங்கள் குழந்தையும் சாதிக்கும்

நூல் : உங்கள் குழந்தையும் சாதிக்கும்
 
ஆசிரியர் : கிருஷ்ண.வரதராஜன்
 
பக்கம் : 96
 
விலை : ரூ. 125
 
பதிப்பகம் : சாதனா பதிப்பகம், S2, சாய்மந்த்ராலயா, 6, வேணுகோபால் வீதி, சென்னை – 603 202.
 
ஒருவர் தனது பகுதியில் திடீர் திடீர் என நிலநடுக்கம் ஏற்படுவதால் தனது குழந்தையை வெளியூரில் இருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். இரண்டு நாட்களில் அங்கிருந்து தந்தி வருகிறது. 
 
‘நிலநடுக்கத்தை வேண்டுமானால் இங்கே அனுப்பிவிடுங்கள். தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். தயவு செய்து உங்கள் குழந்தையைக் கூட்டிச் செல்லுங்கள்.’
 
-இது குழந்தைகளின் குறும்புத்தனத்தைச் சமாளிப்பது சாமானியமல்ல என்பதை உணர்த்தும் கதை. குழந்தைகளைப் பற்றி சொல்லும்போது பெரும்பாலும் இந்தக் கதையைக் குறிப்பிடுவது உண்டு. 
 
குழந்தைகளுக்கு எதையும் கற்றுத்தருவதைவிட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதே பெற்றோர்களின் கடமை. குழந்தைகள் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களின்  தேடலை தீவிரப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகள் எதைக் கடைபிடிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள் என்று புத்தகம் முழுக்க பெற்றோர்களுக்கு அறிவுரைகளை அனுசரணையாகக் கூறுகிறார் நூலாசிரியர்  கிருஷ்ண.வரதராஜன். 
 
உலகத்திற்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் தன்னால் முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையுடன் வருகிறது. நாம்தான் அவர்களிடம் நீ அதைச் செய்யாதே, இது உன்னால் முடியாது என்று எதிர்மறைச் சிந்தனையைக் கற்றுக்கொடுக்கிறோம் என்பதை இந்த நூலில் உள்ள உதாரணங்கள் உணர்த்துகின்றன. 
 
தங்கள் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான புத்தகம் இது. மேலும் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கும், பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குமான வழிகாட்டி நூலும்கூட.
 
நூலிலிருந்து
 
”காவிரி ஆறா?"
 
”ஆம், காவிரி ஆறு."
 
”அதில் தண்ணீர் ஓடுகிறதா?"
 
”இல்லை"
 
”சரி, இப்போது அதற்குப் பெயர் என்ன?"
 
”காவிரி ஆறுதான்"
 
”தண்ணீர் ஓடினால்தான் ஆறு. இப்பொழுதுதான் தண்ணீர் இல்லையே? காவிரி தரை என்றல்லவா நீங்கள் சொல்லவேண்டும்?"
 
”இன்று ஓடவில்லை என்றால் என்ன?  நேற்று ஓடியிருக்கிறது. நாளை ஓடும்" என்றார் உறுதியான குரலில்.
 
”நான் கேட்டேன், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காவிரி மீது கூட நீங்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், நாளை இதில் தண்ணீர் வருமென்று. ஆனால் அந்த நம்பிக்கை ஏன் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உங்கள் குழந்தைகள் மீது இல்லை, நாளை நிச்சயம் இவர்கள் ஜெயிப்பார்கள் என்று".
 

No comments:

Post a Comment