மூன்று ஆண்டுகளுக்கு முன் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது காபி குடில். காபியைத் தவிர பாரம்பரிய பானங்களும் கிடைக்கும் இடம். இன்று அது மெல்ல மெல்ல கொல்கத்தா வரை தன்னுடைய கிளைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசமான முயற்சியின் பின்னணியில் இருப்பவர்கள் மூன்று இளைஞர்கள். பள்ளித் தோழர்களான ஆர். ஜெயராமன், ஆர். வெற்றிச்செல்வன், கே.குருநாதன் ஆகிய மூவருமே பொறியியல் பட்டதாரிகள். காரைக்குடி, கும்பகோணம், தஞ்சையை சொந்த ஊராகக் கொண்டவர்கள். படித்து முடித்தவுடன் ஐ.டி., துறையில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைத்தது. இருந்தாலும் அந்த வேலையை விட்டு விட்டு, ரிஸ்க் எடுத்து இந்த காபி குடிலை ஆரம்பித்துள்ளனர்.
‘தனியாக தொழில் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?’ என்று அவர்களிடம் கேட்டபோது, ‘பள்ளி நாட்களில் இருந்தே எங்கள் மூவருக்கும் பிடித்த விஷயங்களில் ஒன்று நன்கு சாப்பிடுவது. அதிலும் வீட்டில் செய்த ருசியான உணவுகள் என்றால் ஒரு கை பார்த்துவிடுவோம். பள்ளி முடித்தவுடன் வேறு வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படித்தோம். ஆனாலும் பள்ளி நாட்களில் இருந்த நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது..." என்று தங்களின் பள்ளி நாட்கள் பற்றி நினைவுகூர்கிறார்கள்.
பொறியியல் முடித்தவுடன் மூவரில் குருநாதன் மட்டும் டாடா மோட்டார்ஸில் சர்வீஸ் என்ஜினீயராக வேலையில் சேர, மற்ற இருவரும் எம்.பி.ஏ., படித்திருக்கிறார்கள். முடித்தவுடன் வேறு வேறு கம்பெனிகளில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது.
எங்களின் வேலை என்பது தினமும் நிறைய மக்களை நேரடியாக சந்திப்பதாக இருந்தது. என்னதான் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் கல்லூரியில் படித்தபோது எப்போது நாங்கள் சந்தித்தாலும் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்போம். வேலையில் சேர்ந்த பிறகு, தினமும் நிறைய மக்களைச் சந்தித்தபோது, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். ஆரோக்கியமான நல்ல உணவை அனைவருமே விரும்புகிறார்கள். ஆனால் அவ்வளவு சுலபத்தில் அது கிடைப்பதில்லை. நம் மூவருக்கும் சாப்பிட ரொம்ப பிடிக்கும். ஏன் அதையே தொழிலாக செய்யக் கூடாது என்று நினைத்து அதற்கான வேலையை ஆரம்பித்தோம்.
எங்களுடைய கனவே பெரிய பெரிய மால்களில் இருக்கும் உணவு மையங்களைப் போல (food court) ஒரு ரெஸ்ட்டராண்ட் தொடங்க வேண்டும் என்பதுதான். எங்களது ஐடியா இதுதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவுப் பழக்கம், அந்தப் பகுதிக்கென்ற பிரத்யேக உணவு வகைகள் உள்ளன. காரைக்குடி, மதுரை, தஞ்சை, நெல்லை என்று அந்தந்தப் பகுதி உணவகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க தனித்தனி குடில்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். வட்ட வடிவில் எல்லாக் குடில்களும் இருக்க, தனியாக நடுவில் ஒரு காபி குடில். தங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிட்டு விட்டு கடைசியில் காபி குடிலில் வந்து காபி குடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஆனால், இவ்வளவையும் செய்யும் அளவிற்குப் பொருளாதார வசதி கிடையாது.
இதனால் குறைந்த முதலீட்டில் முதலில் மத்தியில் இருக்கும் காபி குடிலை மட்டும் தொடங்கலாம் என்று முடிவு செய்தோம். சரி, காபியை எப்போது குடிக்கிறோம்? ஒன்று, காலையில் எழுந்தவுடன். இரண்டாவது, வேலைக்கு நடுவில் ஒரு சிறிய பிரேக் தேவைப்படும்போது. எல்லோருக்குமே இப்படி தங்களைப் புத்துணர்வு (refresh) செய்து கொள்ளத்தான் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி வந்தது. அதை முதலில் தெரிந்துகொள்ளலாம் என்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, கோவை, தஞ்சை, ஈரோடு, சென்னை என்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, நேரடியாக பலதரப்பட்ட மக்களை சந்தித்து வேலைக்கு நடுவில் எப்படி உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பிடிக்கும் என்று கேட்டபோது, 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் சொன்ன பதில் காபி, டீ குடிப்போம் என்பது. பலருக்கும் வீட்டில் போடும் காபிதான் பிடித்திருக்கிறது. சென்னை பல ஊர்கள், பல மாநிலத்தவர்கள் என்று இருக்கும் நகரம். சென்னை மக்களுக்கு நல்ல காபி கிடைத்தால் பரவாயில்லை என்று இருக்கிறது.
நாங்களும் கும்பகோணம், தஞ்சை, காரைக்குடி என்று காபிக்குப் பெயர் பெற்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இந்த ஊர்களின் பெயரில் தற்போது பல பகுதிகளில் காபி தருகிறார்கள். இவர்களில் இருந்து வித்தியாசப்படுத்தவும் கொடுப்பதைப் பாரம்பரியத் தரத்துடன் தரவும் முடிவெடுத்து, தமிழகத்தில் கிடைக்கும் எல்லா காபியையும் ஒரு ரவுண்ட் ருசி பார்த்தோம்.
எல்லா காபியிலும் (சில பெரிய ஹோட்டல்கள் தவிர) 60 சதவிகிதம் காபி, 40 சதவிகிதம் சிக்கரி கலந்திருந்தது. 100 சதவிகிதம் சிக்கரி கலக்காத காபி தரவே முடியாதா என்று பார்த்தால் ஒரு கிலோ காபியின் விலை 500 ரூபாய். சிக்கரி 100 ரூபாய்க்குள் கிடைக்கிறது. காபி ஜாம்பான்கள் நரசுஸ் காபி சாரதி, சேலம் அன்னபூர்ணா சுப்ரமணியம் போன்றவர்களைச் சந்தித்து எங்களுடைய கான்செப்டைச் சொல்லி, நல்ல காபி எப்படி தருவது என்று கேட்டோம். அவர்கள் தங்களுடைய துறைக்குப் படித்த இளைஞர்கள் வருகிறார்கள் என்ற உற்சாகத்தோடு பல டிப்ஸ்களைத் தந்தார்கள்.
மக்களைச் சந்தித்துப் பேசியபோது, ‘காபியுடன் என்ன சாப்பிடுவீர்கள்’ என்று கேட்டோம். பிஸ்கெட் என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்க, ‘சுண்டல் சாலட்’ என்று தமிழகத்கதின் பல பகுதிகளில் இருந்தும் பதில் வந்தது. ‘அதுதான் சத்து’ என்றும் சொன்னார்கள். ‘அவித்த வேர்க்கடலை, கறுப்பு கொண்டைக் கடலை, மக்காச் சோளம் இவற்றை மாலை நேரத்தில் காபியுடன் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்’ என்றும் சொன்னார்கள். இவை எங்களை வழி நடத்தின" என்றனர்.
‘எல்லாம் சரி, காபி குடில் ஆரம்பிக்க இடம் வேண்டுமே? அதை எப்படி சமாளித்தீர்கள்?’ என்று கேட்டபோது, ஜெயராமன் சொன்னார்: நான் தஞ்சை சாஸ்த்ரா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவன். என்னுடைய பேராசிரியர்கள், கல்லூரி முதல்வரை அணுகி எங்களின் யோசனையைச் சொன்னவுடன் மகிழ்ச்சியாக கல்லூரி வளாகத்திலேயே இடம் கொடுத்தார்கள்" என்றார். தொடர்ந்து பேசிய வெற்றிச் செல்வன், கல்லூரி மாணவர்களிடையே காபிக்கு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அமோக வரவேற்பு. 120 மி.லி., காபி 10 ரூபாய். மாணவர்களுக்கு அது பெரிய தொகை இல்லை. காபியின் வெற்றியைத் தொடர்ந்து நம்முடைய பரம்பரிய பானங்களான பாதாம் பால், பனங்கற்கண்டு பால், சுக்கு காபி, டீ என்று சேர்த்துக் கொண்டோம். எது எந்தச் சுவையில் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படித் தருகிறோம். அதுதான் எங்களின் வெற்றி" என்றார்.
தொடர்ந்து பேசிய குருநாதன், இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கே விளைகிறதோ, அங்கே நேரடியாகப் போய் வாங்குவோம். உதாரணமாக பனங்கற்கண்டு கும்பகோணம், விருதுநகர் போன்ற இடங்களில் அதிகம். அங்கு போவோம். தேயிலைக்கு நீலகிரி என்று அந்தந்த இடத்திற்கே போய் வாங்குகிறோம். காபியைப் போலவே இந்தப் பானங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் முட்டையில் தயாராகும் பல வகைகளையும் eggsclusive என்ற பெரில் தருகிறோம்" என்றவரைத் தொடர்ந்து பேசிய வெற்றிச்செல்வன், சாஸ்த்ராவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. வளாகத்தில் அடுத்த காபி குடிலைத் தொடங்கினோம். அங்கும் எங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு.
ஒரு காபி குடிலில் 200 முதல் 250 காபி ஒரு நாளைக்கு விற்கிறது. மெஷின்களைப் பயன்படுத்தாமல் மனித ஆற்றலின் உதவியோடே காபி பொடி அரைப்பது முதல் அனைத்தையும் செய்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான காபி விற்றால் அதற்கு ஏற்ப எப்படி சமாளிப்பது, எங்களின் லட்சிய ரெஸ்ட்டாரெண்ட்டை அமைக்க செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.
தற்போது சாஸ்த்ராவில் 2, சென்னையில் ஒன்று, ஈரோட்டிலும், கொல்கத்தாவிலும் தலா ஒன்று என்று காபி குடில்கள் உள்ன. 2017-க்குள் எங்களைப் போல முதல் தலைமுறை தொழில் முனைவோர் 100 பேரை உருவாக்க வேண்டும். அதற்காக விருப்பம் உள்ள யார் வந்தாலும் அவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி தர தயாராக உள்ளோம். பயிற்சிக்குப்பின் காபி குடில் என்ற பெயரில் franchise வைத்து நடத்தலாம். தவிர, அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலக வளாகங்களிலும் காபி குடில்களை அமைக்க அரசின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம்" என்றார்.
லட்சம் லட்சமாக செலவு செய்து உன்னை என்ஜினீயரிங், எம்.பிஏ.,ன்னு படிக்க வெச்சா... காபி கடை வைக்கிறேன்னு சொல்றியே, படிக்காமலேயே இதைச் செஞ்சிருக்கலாமே?’ என்று ஆரம்பத்தில் கேட்ட பெற்றோர்கள், உறவினர்கள் இப்போது எங்களைப் புரிந்துகொண்டார்கள். அதுவே எங்கள் வெற்றிதானே..." என்கிறார்கள் மூவரும்.
உங்க நம்பர் கொடுங்க ஜீ .நா ரெடி
ReplyDelete