Tuesday, May 13, 2014

போய் வாருங்கள் பிரதமரே...! மன்மோகன் சிங்



-

மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்!
ஒருவகையில் நீங்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; வேறு வகையில் மிக மோசமாகச் சபிக்கப்பட்டவர். நாட்டில் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் உங்களைப் போன்று பிரதமர் நாற்காலியில் ஆரோகணித்து அமரும் நல்வாய்ப்பைப் பெற்ற தேவகௌடா 10 மாதங்களும், குஜ்ரால் 11 மாதங்களும் மட்டுமே பதவியை அலங்கரித்தனர். ஆனால், நீங்களோ நேருவுக்குப் பின்பு தொடர்ந்து இருமுறை முழுமையாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தையே படைத்துவிட்டீர்கள். இந்திரா காந்திக்கே வந்து வாய்க்காத பெருமை உங்களுக்கு வாய்த்தது ஒரு வரலாற்று அதிசயம்.
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதத்தை வல்லபபாய் படேல் ஆதரிக்கவில்லை. அன்றைய செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்கள் டி.பி.மிஸ்ராவும், என்.வி.காட்கிலும், 'கட்சி உங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் நேருவின் பதவியைப் பறித்து அந்த நாற்காலியில் அமர்ந்துவிட முடியும்’ என்று ஆலோசனை வழங்கியபோது, 'கட்சி என் பக்கம் இருப்பது உண்மைதான். ஆனால், மக்கள் நேருவின் பக்கம் இருக்கிறார்களே’ என்றார் படேல். உங்கள் பக்கம் கட்சியும் இல்லாமல், மக்களும் இல்லாமல் பிரதமராக 10 ஆண்டுகள் பவனிவர முடிந்தது என்றால், விதியின் வலிமையை யாரோ அளக்கவல்லார்!
பிரதமர் கனவில் நீண்ட காலம் அரசியல் நடத்திய சரண்சிங்கும், சந்திரசேகரும் ஆறு மாதங்களுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் முலாயம் சிங்கையும், லாலுவையும் அலைக்கழிக்கும் பிரதமர் கனவு இன்றுவரை நிறைவேறவில்லை. முலாயம் சிங், லாலுவைத் தடுக்க கௌடாவைக் கொண்டுவந்தார். லாலு, முலாயமை வரவிடாமல் செய்வதற்குக் குஜ்ராலைத் தேடிக் கண்டுபிடித்தார். இளவரசர் ராகுல் அரசியல் முதிர்ச்சி அடையும் வரை பிரதமர் நாற்காலியைப் பாதுகாக்க சோனியா காந்தி உங்களைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் பிரதமர் பதவிக்காக நீங்கள் அளித்த விலை மிகவும் அதிகம்.
ஜெயலலிதா சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராகும் வரை அவருடைய பேரருளுக்கும் பெருங்கருணைக்கும் பாத்திரமான பன்னீர்செல்வம் மாநில முதல்வராகக் காட்சியளித்தார். எந்த அதிகாரமும் அவர் கையில் இல்லை. அது குறித்து அவர் கவலைப்படவும் இல்லை. ஓர் ஊராட்சி ஒன்றியச் செயலாளராக இருந்தவர். ஒரு மாநிலத்துக்கே முதல்வராவதெனில், அவரளவில் அது இந்திரப் பெரும்பதம் அல்லவா! ஆனால், பன்னீர்செல்வமும் நீங்களும் ஒன்றா? யோசிக்கும் வேளையில் நீங்கள் இழந்த பெருமையை நீங்களே உணர்வீர்கள்.
மாண்புமிகு பன்னீர்செல்வத்துக்கு அரசியல் முகமும் முகவரியும் அளித்து ஆட்கொண்டவர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா ஒரு கணம் நினைத்தால் போதும்... பன்னீர்செல்வம் இருக்கும் இடம் பக்கத்து மனிதனுக்கும் தெரியாமற் போய்விடும். அந்த நன்றியுணர்வுதான் ஜெயலலிதா விண்ணில் வரும்போதே அவரை மண்ணில் முதுகு வளைத்து மண்டியிடச் செய்கிறது. நீங்கள் யார் பிரதமரே? உலகம் புகழும் பொருளாதார மேதை; ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பெருமைக்குரிய முனைவர் பட்டம் பெற்றவர்; மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் முதன்மை ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், ஐ.நா. அமைப்பில் உயர்நிலை அதிகாரியாகவும் பல்வேறு நிலைகளில் அறிவுசார் நிபுணராகவும் வலம்வந்து, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, நாட்டில் புதிய பொருளாதாரச் கொள்கைக்கு வடிவம் வழங்கியவர். சோனியா உங்களைப் பிரதமராக்குவதற்கு முன்பே உங்களுக்குச் சுயமாக முகமும் இருந்தது; முகவரியும் இருந்தது. ஆனால் இன்று, கலியுகக் கர்ணனாய் நீங்கள் நன்றிக்கடன் செலுத்தியதில் உங்கள் பெருமையும் புகழும் சிதைந்துவிட்டது.
ஒரு குறிப்பிட்ட துறையில் உச்சம் தொட்டவர், மற்ற துறைகளிலும் அதேயளவு ஆற்றல் கொண்டவராக இருப்பதில்லை. 'விரல் முனையில் ஆயிரம் ராகங்களுக்கு வாழ்வளித்த விஸ்வநாதனுக்கு விஜயவாடா எங்கிருக்கிறது என்று தெரியாது’ என்பார் கண்ணதாசன். நீங்கள் பொருளாதாரத்தில் மேதை. ஆனால், வரலாற்றுத் தாழ்வாரங்களில் நீங்கள் போதுமான அளவுக்கு நடைபயின்றதில்லை என்று நினைக்கிறேன். அரசியலுக்கும் நன்றிக்கும் அணுவளவும் சம்பந்தம் இருப்பதில்லை பிரதமரே!
அண்ணல் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்காமற் போயிருந்தால் அவர் படேலிடம் பிரதமர் பதவியைப் பறிகொடுத்திருப்பார். 'என்னுடைய மொழியில் இவர் பேசுவார்’ (He will speak my language) என்று நம்பிக்கையுடன் சொன்ன காந்தியின் மொழியில் நேரு பாரதப் பிரதமராக 17 ஆண்டுகள் பேசவுமில்லை; காந்தியத்தின் வழியில் நாட்டை நடத்தவுமில்லை. காமராஜரின் ஆதரவுக் காற்று மொரார்ஜியின் பக்கம் திசைமாறி வீசியிருந்தால் இந்திரா காந்தி பிரதமர் பதவியை அடைந்திருக்கவே முடியாது. அந்த இந்திரா காந்தி கலைஞரின் துணையோடு காமராஜரின் அரசியல் செல்வாக்கை அழிக்கும் காரியத்தில் கடைசிவரை ஈடுபட்டார்.
இந்திரா காந்தியின் வீழ்ச்சிக்கும், ஜனதாவின் ஆட்சிக்கும் வழிவகுத்து மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கியதில் பெரும்பங்கு ஜெ.பி-க்கு உண்டு. ஆட்சியில் அமர்ந்ததும் அந்த ஜெ.பி-யை அலட்சியப்படுத்தியவர் தேசாய். உத்தரப்பிரதேச அரசியலில் ஒடுங்கிக்கிடந்த வி.பி.சிங்கை மத்திய நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி, தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய ராஜீவ் காந்தி, போஃபர்ஸ் விவகாரத்தில் அதே வி.பி.சிங்கின் வியூகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. சோனியாவின் தயவால் பிரதமராகப் பொறுப்பேற்ற உங்கள் அரசியல் ஆசான் நரசிம்ம ராவ் அந்த சோனியாவின் கட்டுப்பாட்டிலிருந்து காங்கிரஸை விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகளை நீங்கள் முற்றாக மறந்துவிட்டீர்களா? பிரதமர் பதவியில் அமர்த்தினார் என்பதற்காக 10 ஆண்டுகள் சோனியாவின் சூத்திரக் கயிறு இழுத்த இழுப்புக்கெல்லாம் 'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’யாய் நீங்கள் இருந்தது நியாயந்தானா? உங்கள் நன்றியுணர்வுக்கு நாடு பாழாகிவிட்டது பிரதமரே!
பாரதப் பிரதமரே... நீங்கள் நாணயமும் நல்லொழுக்கமும் நிறைந்த ஒரு நேர்மையான மனிதர் என்றுதான் நான் இன்றும் நினைக்கிறேன். ஆனால், பனை மரத்தின் அடியில் அமர்ந்து நீங்கள் பருகிக்கொண்டிருப்பது பால்தானா என்ற ஐயம் இப்போது பலருக்கு வந்துவிட்டது. அதிகார வர்க்கத்தில் இருந்து நீங்கள் அரசியலில் வைத்த முதல் அடியே தவறானது. அசாம்  மாநிலத்தில் இருந்து 1991-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் எந்த வகையில் அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்? மாநிலங்களவை உறுப்பினராக ஐந்து முறை அதே இடத்தில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தார்மிக அடிப்படையில் ஏற்கத்தக்கதா? சட்டத்தின் படி சரியாக இருப்பதெல்லாம் தர்மத்தின் பார்வையில் முறையாக இருப்பதில்லை.
குஜ்ரால் திடீர் பிரதமரானபோது உங்களைப் போன்று அவரும் மக்களவை உறுப்பினராக இல்லை. அதன் பின்பு லாலுவின் தயவால் பாட்னாவில் வேட்பாளராக நின்று அவர் வெற்றி பெற்றார். நீங்கள் ஒரேயொருமுறை 1999-ல் தெற்கு டெல்லியில் நாடாளுமன்ற வேட்பாளராக நின்று தோற்றீர்கள். அவ்வளவுதான். இன்றுவரை தேர்தல் களத்தில் மக்களை நீங்கள் சந்தித்ததே இல்லை. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா 1952-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையத்தில் தோற்ற அடுத்த நிமிடம் பதவியைத் துறந்தார். இடைக்கால முதல்வராக அவர் தொடர வேண்டும் என்று பிரதமர் நேரு வற்புறுத்தினார். 'ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நான் ஒரு மாநில முதல்வராக நீடிப்பது நியாயமாகாது’ என்று நேருவுக்குக் கடிதம் எழுதினார் ராஜா. 'பொதுவாழ்வில் நேர்மை’(Probity in Public life) அன்றைய அரசியல்வாதிகளின் தாரகமந்திரமாக இருந்தது. ராஜாவின் அளவுகோலால் உங்களை அளக்கக்கூடுமா?
மாண்புமிகு பிரதமரே... உங்களை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ் ஆட்சியில் அரங்கேறிய ஊழல்கள் ஒன்றா, இரண்டா? அனைத்துக்கும் மௌனசாட்சியாக இருந்து அன்று நீங்கள் எடுத்த பயிற்சி வீண்போகவில்லை. உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், பாதுகாப்புத்துறையில் ஊழல், ரயில்வே ஊழல் என்று அன்றாடம் ஊழல் அரக்கனுக்கு உற்சவம் நடந்த நிலையில் மௌனகுரு சுவாமிகளாக நீங்கள் பார்த்துக்கொண்டிருந்ததற்குப் பழைய பயிற்சிதான் பயன்பட்டிருக்கிறது. அன்று நரசிம்ம ராவின் மகன், இன்று சோனியாவின் மருமகன். பாதை ஒன்று; மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் ஒருவர். ஊழல் பயணியர் மட்டும் வேறுவேறு. நாட்டு நலனில் நாட்டமுள்ளவர் நீங்கள் என்று எப்படி நம்புவது?
நரசிம்ம ராவை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஹர்ஷத் மேத்தா பகிரங்கமாக அறிவித்தபோது அவர் வாய்திறக்கவில்லை. 'அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் அனுமதியுடன்தான் செயல்பட்டேன்’ என்று ஆண்டிமுத்து ராசா திரும்பத் திரும்ப வாக்குமூலம் வழங்கியபோதும் நீங்கள் வாய் திறக்கவில்லை. சிறுபான்மை அரசைக் காப்பாற்றிக் கொள்ள நரசிம்ம ராவ் எம்.பி-க்களுக்கு லஞ்சம் தந்ததாக அன்று பேசப்பட்டது. அதே குற்றச்சாட்டு உங்கள் ஆட்சியிலும் உங்களுக்கு எதிராக வீசப்பட்டது. உங்கள் அரசியல் குருநாதர் பதவியிழந்த பின்பு நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்க நேர்ந்தது. உங்களுக்கு அந்த அவமானம் வரக் கூடாது என்று ஆண்டவனை வேண்டுகிறேன். ஏவியவரை விட்டுவிட்டு ஏவப்பட்ட அம்பை ஏசக் கூடாது.
மரியாதைக்குரிய பிரதமர் பரிதாபத்துக்கு உரியவராக மாறியது யாரால் என்ற கேள்வி இன்று வரை உங்களுக்குள் எழவே இல்லையா? நேர்மை பேசும் நீங்கள் லாலு போன்றவர்களின் பதவிப் பறிப்பைத் தடுப்பதற்காக அவசர சட்டமியற்ற முனைந்தபோது, இளவரசர் ராகுல் உங்களைத் தரம்தாழ்ந்து வெளிப்படையாக விமர்சித்தபோதே உங்கள் கம்பீரம் கலைந்துவிட்டது. நாட்டு விடுதலைக்காக 3262 நாட்கள் சிறையில் தவமிருந்த நேரு, ஊழல் நிழல்படாத உத்தமர் என்பதில் இருகருத்து யாருக்கும் இருக்கவியலாது. ஆனால், ஜீப் ஊழல் கிருஷ்ணமேனனையும், முந்த்ரா ஊழல் கிருஷ்ணமாச்சாரியையும், பஞ்சாப் முதல்வர் ஊழல் நாயகர் கெய்ரோனையும் காப்பாற்ற அவர் முனைந்ததை மறுக்கவும் முடியாது. நேருவின் அளப்பரிய தியாகம் அவரைக் காப்பாற்றியது. கறைபடிந்த உங்கள் ஆட்சியின் களங்கத்தில் இருந்து உங்களை எது காப்பாற்றக் கூடும்?
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, 'உலகத்தின் பிரச்னைகளும், இந்தியாவின் சிக்கல்களுக்கும் சோஷலிசம் ஒன்றுதான் தீர்வு. சோஷலிசம் பாதையில் பயணிப்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்; வேலையின்மையைப் போக்க முடியும்; மக்களின் சீரழிவைத் தடுக்க முடியும்’ என்று (ஜூலை 1948) மும்பையில் முழங்கினார். ஆனால், பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகளைப் பரம ஏழைகளாகவும் மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நீங்கள்தான் நரசிம்ம ராவ் ஆட்சியில் வரவேற்பு ராகம் வாசித்தீர்கள். வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம் முதலில் எழுச்சியுற்றது போன்று மாயத்தோற்றம் காட்டியது உண்மைதான். ஆனால், இன்றைய நிலை என்ன?
உங்கள் ஆட்சிச் சாதனைகளில் முக்கியமானது உணவுப் பாதுகாப்புச் சட்டம். நாட்டில் 80 கோடி மக்களின் பசியாற்றுவதற்கு இந்த அற்புதமான திட்டம் வழிவகுத்திருக்கிறது என்று பெருமிதம் பொங்கப் பேசியிருக்கிறீர்கள். 120 கோடி இந்திய மக்களில் 2 ரூபாய்க்கு கோதுமையும், 3 ரூபாய்க்கு அரிசியும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மலிவு விலையில் வழங்கினால்தான் 80 கோடி மக்கள் பசியாற முடியும் என்றால், உங்கள் புதிய பொருளாதாரம் எதைச் சாதித்தது? உங்கள் நம்பிக்கைக்குரிய 'வியத்தகு பொருளாதார விற்பன்னர்’ அலுவாலியா வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடுபவர்களின் எண்ணிக்கை உங்கள் புத்தாண்டு ஆட்சியில் 41 கோடியில் இருந்து 27 கோடியாகக் குறைந்துவிட்டது என்கிறார். அவருடைய அளவீட்டின்படி ஒவ்வொரு நாளும் நகரத்தில் உள்ளவர் 33 ரூபாயும், கிராமப்புறங்களில் வாழ்பவர் 27 ரூபாயும் செலவழிக்கும் சக்தியுள்ளவர் எனில், அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார். உங்களுக்கும் சிதம்பரத்துக்கும், அலுவாலியாவுக்கும் வறுமை என்றால் என்னவென்று தெரியுமா? பசியின் கொடுமை எப்படியிருக்கும் என்று புரியுமா?
அன்பிற்கினிய பிரதமரே... உங்கள் ஆட்சியில் நல்ல காரியங்களே நடக்கவில்லை என்று சாதிக்க முயல்வது என் நோக்கம் அன்று. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (அதில் ஊழல் ஊடுருவியிருந்தாலும்) தகவல் அறியும் உரிமைச் சட்டம்,  போன்ற உயர்கல்வி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவிகித ஒதுக்கீடு, கல்வி உரிமைச் சட்டம் போன்றவை உண்மையில் பாராட்டுக்கு உரியவை. ஆனால், நான்கு நற்செயல்களுக்காக நாலாயிரம் தீச்செயல்களை யாரால் சகிக்கக் கூடும்?
ஒரு பொம்மைப் பிரதமராக இருந்து உங்கள் பெருமையை இழந்துவிட்டீர்கள். சோனியாவின் குடும்பம் போற்றி மதிக்கும் சொத்தாக இருந்த நீங்கள் இன்று காங்கிரஸின் சுமையாகக் கருதப்படுவதால் விடைபெறும் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்கள். அதிகாரம் முழுவதும் சோனியா வீட்டில்; பழிபாவம் முழுவதும் பரிதாபத்துக்குரிய உங்கள் தோள்களில்,  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் அடுத்தவர் தயவில் அதிகார நாற்காலியில் நீண்ட நாட்கள் அமர முடியாது. அப்படியே அமர்ந்தாலும் சுயமரியாதையுடன் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் நினைத்தபடி ஆட்சி நிர்வாகத்தை நடத்திவிட முடியாது என்பதை இப்போதாவது நீங்கள் உணர்கின்றீர்களா?
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ் உங்கள் பக்கம் கை நீட்டுகிறார். அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா உங்கள் கரங்களில் கறை பூச முயல்கிறார். 'வாழ்ந்தபோது வாழ்த்துவதற்கு வரிசையில் நின்றவர்கள் வீழ்ந்தபோது விலகிச் செல்வது அரசியல் உலகில் மிகச் சாதாரண நடைமுறை. கவலைப்படாதீர்கள் பிரதமரே... அரசனாய் இருந்த சித்தார்த்தன் கானகம் சென்றால் அது துறவு. எதையும் துறக்காமல் எல்லாவற்றையும் அடைந்த நீங்கள், இன்று இழக்கக் கூடாத தனிமனித மரியாதையைத் துறந்துவிட்டுப் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதுதான் உங்கள் நன்றிக்கடனுக்கான நல்லடையாளம். 'போய்விடுங்கள்’ என்று சொல்லத்தான் ஆசை. ஆனாலும், மங்கல வழக்காகப் 'போய்வாருங்கள்’ என்று சொல்கிறேன்.
உங்கள் அறிவின் மீது வியப்பும்
பதவிப் பசியின் மீது
வருத்தமும் கொண்ட
தமிழருவி மணியன்

Saturday, May 10, 2014

Start a Small Bakery Business - Hcareers

Start a Small Bakery Business - Hcareers

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...

ம்சார சாகரத்தில் மூழ்கி, ஆண்டு முழுதும் மூச்சுத் திணறும் சம்சாரிகள் மீது இரக்கம் கொண்ட கடவுள், அவர்களுக்கு அருளிய கருணைக் கொடைதான் கோடை விடுமுறை. தேர்வுகள் முடிந்து மனைவி, குழந்தைகளை ஊருக்கு ரயில் ஏற்றி அனுப்பி விட்ட அடுத்த நிமிடம், பல சம்சாரிகளின் ஆனந்தக் கூச்சல், ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...’ என்பதாகத்தான் இருக்கும். அன்று எனக்கும் இருந்தது.

மனைவி, குழந்தைகள் ஊருக்குப் போவதில் அப்படி என்ன ஒரு கொலைவெறி ஆனந்தம்? இருக்கு பாஸ் இருக்கு... உப்புமா, தக்காளிச் சட்னி,  வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வாழ்க்கை அருளப்படும். தொலைக்காட்சி சீரியல், சுட்டி டி.வி. ஆகியவற்றை தண்டனை போல் உட்கார்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குப் பிடித்த ஆக்ஷன் படங்களைப் பார்க்கலாம்... பார்க்கலாம்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அனைத்துக்கும் மேலாக குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பிவிடும் காலை நேர டென்ஷன் போயிந்தே. இட்ஸ் கான். இனி ஒரு மாசத்துக்குக் காலையில் ஒன்பது மணி வரை ரிலாக்ஸாகத் தூங்கலாம். கேட்பார் இல்லை. வி... டு... த... லை... விடுதலை!

மனைவி, குழந்தைகளை ரயிலேற்றி விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, இரவில் தொலைக்காட்சியில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல்  ‘மூவிஸ் நவ்’வில் ஆக்ஷன் படம் பார்த்தேன். ஆஹா, பேரானந்தம். படம் முடிந்து பன்னிரண்டரை மணிக்கு  விளக்கை அணைத்து, படுக்கும்போதுதான், ஒரு வெறுமை முதல் முறையாக உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.

அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் படுத்துக்கொண்டு ‘மொய் மொய்’ என்று கதையளக்கும் வாண்டுகளின் மழலைச் சொல் இல்லாமல், காதுகளில் ஒரு டன் பாரம். அந்த வெறுமையை வென்று, நித்ராதேவியை தழுவிடினும் நடுநடுவில் விழிப்பு வந்துகொண்டே இருந்தது.  அருகில் படுத்திருக்கும் வாண்டுகளின் சலனங்கள் இல்லாமல், ‘மிஸ்... அந்தக் கணக்குக்கு எனக்கு ஆன்ஸர் தெரியும்...’ என்கிற பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சுக்கள் இல்லாமல், கை, கால் மேலே விழும் சிறுசிறு ஸ்பரிசங்கள் இல்லாமல், எதையோ இழந்துவிட்டதாக மனம் தனிமை உணரத் தொடங்கியது. அப்படியே எழுந்து உட்கார்ந்து, விடிய விடிய டி.வி.யை நோக்கமற்று வெறித்துக் கொண்டே இரவு கழிந்தது.  காலையில் பெட் காபி இல்லை.  எழுந்து சென்று, தெரு முக்குக் கடையில் சூடான கழுநீரைக் குடிக்கும்போது, மணமும் ஸ்ட்ராங்குமான மனைவி கைப்பக்குவ காபி நினைவுகள் நிழலாடிப் போனது.

குளித்து முடித்து, கிளம்பி அருகிலிருந்த ஓட்டலில் காலையில் இட்லி ஆர்டர் செய்தபோது, அரிசிப் புண்ணாக்கு இட்லி அவதாரம் எடுத்து டேபிளுக்கு வந்தது.
சட்னியாகத் தேங்காய்ப் புண்ணாக்கு (ஆப்பத்துக்காக தேங்காய்ப் பாலைப் பிழிந்து அதன் சக்கையைத்தான் சட்னிக்குப் பயன்படுத்துவார்கள் அங்கே. இதுவும் மனைவி சொன்னதே).  ருசியில்லாத ஒரு ருசியை ருசித்து, ரத்த அழுத்தம் எகிற வைக்கும் பில்லுக்குப் பணம் கொடுத்து வெளியேறிய வேளையில், எதையோ இழந்ததன் பெருவலி மனசை அழுத்தியது.

அலுவலகம் வந்த பிறகு, பணிப் பளுவில் இழப்பின் பாரம் குறைந்து, மறைந்திருக்க... மதிய உணவு இடைவேளையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது  இழப்பின் வலி. ஓட்டலின் காரமான சாம்பாரும், புளிப்பில்லாத ரசமும், துளியும் பிடிக்காத புடலங்காய் கூட்டும், தோலுக்கு ஒவ்வாத கத்தரிக்காய் பொறியலும், மோர் என்கிற பெயரில் ‘புளிச்ச தண்ணி’யும் மனசுக்குள் கொலைவெறி கிளம்பியது. முடிவு செய்தேன்... இன்று இரவு ‘நளாவதாரம்’ எடுத்து, நாமே  சமைத்து விடவேண்டியதுதான்.

இரவு... தயிர் கப் வாங்கிக் கொண்டு, ஊருக்குப் போன் செய்து, ‘குக்கரில் சாதம் வைப்பது எப்படி?’ என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஓர் ஆழாக்கு அரிசிக்கு ரெண்டு ஆழாக்கு தண்ணீர். ஐந்து விசில் வந்தவுடன் கியாஸை ஆஃப் செய்யணும். அட, சமைக்கிறது இம்புட்டு ஈஸியா? குக்கரில்
அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி, மூடி அடுப்பில் வைத்தப் பிறகு, அதன் மேல் முனையிலிருந்து புஸ், புஸ்... என்று நீராவி வர ஆரம்பித்ததும் பரபரப்பானேன்.

வெயிட்... வெயிட்... அட வெயிட் எங்கேப்பா? பாத்திரங்களையெல்லாம் தள்ளி, உருட்டி, புரட்டிப் பீறாய்ந்தும் அந்தக் ‘குட்டியூண்டு குண்டு’ எங்கு ஒளிந்துள்ளது என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் குக்கரை ஆஃப் செய்துவிட்டு, ஊருக்குப் போன் செய்தால், ‘அது, எப்பவும் டூல் பாக்ஸ்லதான் இருக்கும்க...’ என்று எதிர் முனையில் வெடிச்சிரிப்பு சிரித்தார் இல்லத்து ராணி.

ஒரு வழியாக டூல் பாக்ஸிலிருந்து ‘குண்டனை’ எடுத்து, தூசு தட்டி மீண்டும் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, நீராவி வந்து, குண்டு போட்டு, ஐந்து விசிலுக்குப் பிறகு அணைத்து,  சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்தால், அரைவேக்காடாய் சாதம் பல்லிளித்தது. மீண்டும் ஊருக்குப் போன்.

‘எங்கிருந்து அரிசி எடுத்தீங்க?’

‘கீழே கேரிபேக்கிலிருந்து...’

‘அட... அது இட்லி அரிசிங்க...’ மேலே பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கிறதுதான் சாப்பாட்டு அரிசி...’

எடுத்த நளாவதாரம் சொதப்பலாகி விட, பல்பு வாங்கிய அவமானத்துடன், சமையல் முயற்சியைக் கைவிட்டு, மீண்டும் ஓட்டலுக்கே படையெடுப்பு. அங்கு வறட்டி போன்ற பரோட்டாவுக்கு, அவர்கள் கொடுக்கும் சிக்கன் சால்னாவை உண்ணும்போது, அறுக்கப்பட்டபோது, அந்த  சிக்கன் அலறியதை விட, மிக அவஸ்தையுடன் அலறின நாவின் சுவை மொட்டுக்கள்.  

இரவு படுக்கையில் சாயும்போது, ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா... அவ்வ்வ்’ என்று ஈன முனகலாய் முதல்நாள் உற்சாகம் வடிந்திருந்தது. ‘ஊருக்குப் போன் செய்து வரச் சொல்லலாமா?’ என்று ஒரு யோசனை தோன்றி, பிறகு, ‘குழந்தைகள் விடுமுறையைக் கழிக்கப் போயிருக்காங்க. அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்’ என்று அந்த எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கண்களை இறுக்கி மூடி தூங்க முயன்றேன்.

மறுநாள் காலை... அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தபோது, ஊரிலிருந்து போன். மகள்  பேசினாள்...

‘அப்பா... நாங்க இல்லாம நிம்மதியா இருக்கியா? எங்களுக்குத்தான் இங்க ரொம்பப் போரடிக்குது... என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்களோட பாட்டி ஊருக்குப் போயிட்டாங்க...  அடிக்கடி கரண்ட் போகுது... நைட்டு தூக்கம் வரமாட்டேங்குது.... நாங்க நாளைக்கு மெட்ராஸ்கே வந்துடலாம்னு இருக்கோம்...’ என்றாள்.

‘கரெண்ட் போறதாலே தூக்கம் வரலையாடா?’ என்றேன்.

‘இல்லேப்பா... உன் குறட்டைச் சத்தம் இல்லாம தூக்கம் வரமாட்டேங்குது...’

‘ஹா... ஹா... சமர்த்து.... கரெண்ட் இல்லைன்னாலும் அப்பாவுக்கு நல்லா பல்பு கொடுக்கிறே...’

‘நான் உன் மகளாச்சேப்பா...‘

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு - சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம்  செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias)  என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்  சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை  நேரில்பெற  விருப்பம்  தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்  அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர்  18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார்  அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm>  என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm>  என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in

கட்டணம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in  என்ற தளத்தைப் பார்க்கவும்.

ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?
தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.  

மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

ஜாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் துணை வட்டாட்சியருக்கும், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் கோட்டாட்சியருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி?
ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் பத்து ரூபாய்  நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை.

விண்ணப்பத்துடன் வருமானத்திற்கான ஆதாரம் குறித்து எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.  

குறிப்பு:
வருமானச் சான்றிதழ் தவிர ஜாதிச் சான்றிதழுக்கோ எவ்விதக் கட்டணமுமில்லை.

பள்ளி / கல்லூரி ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணப்பிக்காமல் முன்னரே விண்ணப்பித்து பெற்றுவைத்துக் கொள்வது நல்லது.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்தால் அலைச்சல் மிச்சம். காத்திருக்க வேண்டிய அவசியம் மட்டுமல்ல. நேரமும் வீணாவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் கூட தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ செய்யலாம். தளத்துக்குச் செல்ல http://tnvelaivaaippu.gov.in/Empower

பொதுவாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பதிவுக்காக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர். இதனால் காத்திருப்பு, காலதாமதம், நேரம், அலைச்சல் அனைத்துமே தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதி ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஜாதி விவரம், குடும்ப அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங்களை பதிவுசெய்து அப்போதே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

இதன்படி ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது காலதாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களிடம் முன்கூட்டியே விவரங்கள் பெற்று கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும்,  மதிப்பெண்  சான்றிதழ் எண் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் மே 2-ஆம் தேதிக்குள் சேகரிக்க வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அந்த எண்ணை மட்டும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதன்படி வெவ்வேறு நாட்களில் பதிவு செய்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

UGC NET கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு எழுத விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (ஜே.ஆர்.எஃப்) நிதி உதவி பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தகுதி: இந்த நெட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கலைப்பாடங்கள், மொழியியல், மானுடவியல், சமூகவியல் கணிப்பொறியியல்,  எலெக்ட்ரானிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களும், தேர்வு முடிவிற்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

வயது வரம்பு: ஜே.ஆர்.எஃப். எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதி தேர்வை எழுதும் பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓ.பி.சி. மாணவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பணியில் சேரவேண்டி நெட் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

தேர்வு முறை: மூன்று தாள்களைக் கொண்ட இத்தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இருக்கும்.

முதல் தாளில் பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், தர்க்கரீதியான கேள்விகள், ரீசனிங் எபிலிட்டி, டீச்சிங்  எபிலிட்டி குறித்து 60 கேள்விகள் இருக்கும். இதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால், முதல் 50 கேள்விகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இதற்கு மொத்தம் நூறு மதிப்பெண்கள். முதல் தாளில் உள்ள கேள்விகளுக்கு 75 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டும். இரண்டு மற்றும் மூன்றாம் தாளில் விண்ணப்பதாரர் தேர்வு செய்த பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதற்கு மொத்த மதிப்பெண்கள் 100. மூன்றாம் தாளில் 75 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்கள். இரண்டு மற்றும் மூன்றாம் தாள்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வின் முடிவில் ஒவ்வொரு பாட வாரியாகவும், பிரிவு வாரியாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள முதல் 15 சதவீதத்தினர், இத்தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஜே.ஆர்.எஃப். தகுதி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தனியே இணையதளத்தில் வெளியிடப்படும். .

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் புதுச்சேரியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும் தேர்வு மையங்களாகச் செயல்படும். இந்தப் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடும் கல்லூரிகளில் மாணவர்கள் நெட் தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.450. ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.225. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.110. வங்கிச்சேவைக் கட்டணம் தனி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தபின், கொடுக்கப்படும் வங்கிச் செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் (மற்றும் இதர சான்றிதழ்கள் தேவைப்படின் அவற்றையும்) இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் தேர்வு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5, 2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: மே 7, 2014

விண்ணப்பப் படிவம், ஹால் டிக்கெட், அட்டெனென்ஸ் ஸ்லிப் ஆகியவற்றை பிரிண்ட் அவுட் எடுக்க கடைசி தேதி: மே 10, 2014

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக தேர்வுமையங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: மே 15, 2014

தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29, 2014

விவரங்களுக்கு: www.ugcnetonline.in


நெட் தேர்வு இலவசப் பயிற்சி தேதி நீட்டிப்பு

நெட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.)  இலவசப் பயிற்சியை நடத்துகிறது. இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: 044-2539 9418, 2539 9518

மெரைன் என்ஜினீயரிங், நாட்டிக்கல் சயின்ஸ் பொது நுழைவுத் தேர்வு

இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் மெரைன் என்ஜினீயரிங், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் மும்பையில் டிரெயினிங் ஷிப் -சாணக்கியா, லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்வான்ஸ்ட் மெரிடைம் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச், மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆகிய கல்வி நிறுவனங்களும் கொல்கத்தாவில் மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போர்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய கல்வி நிறுவனங்களும் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர், சென்னையில் உள்ள நேஷனல் மெரிடைம் அகாதெமி ஆகிய அமைப்புகள் தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக உள்ளன. கொச்சி, கண்ட்லா, காரைக்கால் ஆகிய நகரங்களில் புதிய வளாகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 36 கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிடெக் (மெரைன் என்ஜினீயரிங்), பிடெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), பிஎஸ்சி (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்), பிஎஸ்சி (மேரிடைம் சயின்ஸ்), பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (இதைப்படித்து விட்டு பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்) ஆகிய இளநிலைப் படிப்புகளும் எம்பிஏ (போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்), எம்பிஏ (இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக் மேனேஜ்மெண்ட்), எம்டெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), எம்டெக் (டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங்) எல்எல்எம் (மேரிடைம் லாஸ்) ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதல் முறையாகத் தேர்வு எழுதுபவராக இருக்க வேண்டும். அதாவது மே 31-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் தேர்வை எழுதுபவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், மேரிடைம் சயின்ஸ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.20 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1,40,500.

நான்கு ஆண்டு பி.டெக் மெரைன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது.விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1.43 லட்சம்.

மூன்று ஆண்டு பிஎஸ்சி ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிலையத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு  கட்டணம் ரூ.2.0 லட்சம். வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1.4 லட்சம்.

நான்கு ஆண்டு பிடெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

எல்எல்எம் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை சட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம். கல்வி வளாகத்தில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.60 ஆயிரம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

எம்டெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அல்லது அதற்கு நிகரான பொறியியல் பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

எம்டெக் டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் 60 சவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதுவரை காகிதத்தில் விடையளிக்கும் முறையில் நடத்தப்பட்டு வந்த இந்த நுழைவுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். சென்னை, கோவை உள்பட 34 நகரங்களில் ஜூன் 14-ஆம் தேதி 2 மணி முதல் 5 மணி வரை இந்த ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மூன்று மையங்களின் வரிசையை மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலை பட்டப் படிப்புகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு ஆகியவை குறித்து பிளஸ் டூ நிலையில் கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும்.

எம்பிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, ஃபைனான்சியல் அக்கவுண்டிங், பொருளாதாரம், கடல்சார் விவகாரங்கள், கணிதம் ஆகியவை குறித்து இளநிலை பட்ட நிலையில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எம்டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, கணிதம், என்ஜினீயரிங் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எல்எல்எம் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, பொதுச் சட்டங்கள் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்படும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.  ஜூலை 14-ஆம் தேதி வாக்கில் கவுன்சலிங் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம். வங்கிச் செலான் மூலம் செலுத்தலாம். இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி

தேதி 20-05-2014

விவரங்களுக்கு: www.imu.edu.in

ராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ். படிக்கலாம்!




புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்லாமல் பி.எஸ்சி. படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் கிடையாது. தங்கும் இடம், உணவு இலவசம்.

நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது புனேயில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். படிப்புக் கட்டணம் எதுவும் இல்லை. அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில்  105 மாணவர்களும் 25 மாணவிகளும் சேர்க்கப்படுவர். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேசமயம், அந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச்  சேர்ந்த மாணவர்கள் ரேங்க் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். இந்திய பிரஜைகள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். இந்த ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது என்பது விதி. படிப்புக் காலத்திலும் மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தான் படிக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சேர்த்து சராசரியாக  60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இந்த மூன்று பாடங்களில் ஒவ்வொன்றிலும் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். முதல் தடவையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி  17 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 22 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகவோ  1997-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது.

பி.எஸ்சி. படித்த மாணவர்களும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலப் பாடப்பிரிவுகளை எடுத்து ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி. பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப்பிரிவுகளில் இரண்டுக்குக் குறையாத பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், பி.எஸ்சி. பட்டதாரி மாணவர்களுக்கு 24 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1991-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.

வருகிற மே மாதம் பி.எஸ்சி. இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், பிளஸ் டூ தேர்வு  எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். உடற் தகுதியும் முக்கியம். மனவளம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆன்øலைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.

இப்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் குறித்த விரிவான விவரங்களை விண்ணப்பத்துடன் வழங்கப்படும் கையேட்டிலும் இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச்  சேர்ப்பதற்காக அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் AIPMT  நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். வருகிற மே 4-ஆம் தேதி நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை எழுதாமல் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. அத்துடன், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.  ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு  எழுத்துத் தேர்வு (ToLER) மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வில் (ToLER) இங்கிலீஷ் லாங்க்வேஜ், காம்ப்ரிஹென்சன், லாஜிக் அண்ட் ரீசனிங் ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து 40 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தேர்வை எழுத 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த எழுத்துத் தேர்வுக்கும் AIPMT தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 250-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். கையிலிருந்து பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை. விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரலாம். படித்து முடித்த பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வர முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யிலோ சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.12 ஆயிரம் தரப்படுகிறது. கல்லூரிக்கு யூனிபார்மில் வருவதற்கு யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில்  6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த உடைகளை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு 1,250 ரூபாயும் வழங்கப்படும். முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுதவிர, வாஷிங் அலவன்ஸ், ஸ்டேஷனரி அலவன்ஸ் ஆகியவையும் இன்சூரன்ஸ் வசதியும் உண்டு.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த பிறகு இந்திய ராணுவத்தில் மருத்துவராக நிரந்தரப் பணியில் சேரலாம் அல்லது குறுகிய காலப் பணியில் சேர விரும்புபவர்கள் ராணுவ மருத்துவ  சேவைப் பிரிவில் 7 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். கல்லூரியில் சேரும்போது இதுகுறித்து உத்தரவாதம் அளித்து மாணவர்களும் பெற்றோர்களும் ரூ.25 லட்சத்துக்கான பாண்ட் எழுதித் தர வேண்டும். படிப்பை இடையிலேயே விட்டு விட்டாலோ அல்லது படிப்பை முடித்த பிறகு ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ மருத்துவ சேவைப் பிரிவில் பணி செய்ய மறுத்தாலோ என்ன செய்வது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை புனே ராணுவ மருத்துவக் கல்லூரி மேற்கொள்கிறது.

இங்கு எம்.பி.பி.எஸ். படித்து முடித்த உடன் அந்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் லெப்டினெண்ட் பதவியில் அமர்த்தப்படுவார்கள். இன்டர்ன்ஷிப் முடிந்ததும் கேப்டன் பதவியில் அமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் பணி அனுபவத்திற்குப் பிறகு மேஜராகலாம். 11 ஆண்டுகள் கேப்டனாக இருந்தால் லெப்டினென்ட் கர்னலாகப் பதவி உயர்வு பெறலாம். கேப்டனாக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு மருத்துவப் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் மூன்று ஆண்டுகள் வரை படிக்க, ‘ஸ்டடி லீவ்’ வழங்கப்படும். அந்தப் படிப்பு விடுமுறை காலத்தில் முழு ஊதியமும் வழங்கப்படும். மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு புனே ராணுவ மருத்துவக் கல்லூரி.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17-5-2014
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி 20-5-2014
விவரங்களுக்கு: www.afmc.nic.in