புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்லாமல் பி.எஸ்சி. படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் கிடையாது. தங்கும் இடம், உணவு இலவசம்.
நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது புனேயில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். படிப்புக் கட்டணம் எதுவும் இல்லை. அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 105 மாணவர்களும் 25 மாணவிகளும் சேர்க்கப்படுவர். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேசமயம், அந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ரேங்க் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். இந்திய பிரஜைகள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். இந்த ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது என்பது விதி. படிப்புக் காலத்திலும் மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தான் படிக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சேர்த்து சராசரியாக 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இந்த மூன்று பாடங்களில் ஒவ்வொன்றிலும் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். முதல் தடவையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 17 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 22 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகவோ 1997-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது.
பி.எஸ்சி. படித்த மாணவர்களும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலப் பாடப்பிரிவுகளை எடுத்து ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி. பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப்பிரிவுகளில் இரண்டுக்குக் குறையாத பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், பி.எஸ்சி. பட்டதாரி மாணவர்களுக்கு 24 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1991-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.
வருகிற மே மாதம் பி.எஸ்சி. இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். உடற் தகுதியும் முக்கியம். மனவளம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆன்øலைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.
இப்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் குறித்த விரிவான விவரங்களை விண்ணப்பத்துடன் வழங்கப்படும் கையேட்டிலும் இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் AIPMT நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். வருகிற மே 4-ஆம் தேதி நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை எழுதாமல் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. அத்துடன், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும். ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு எழுத்துத் தேர்வு (ToLER) மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வில் (ToLER) இங்கிலீஷ் லாங்க்வேஜ், காம்ப்ரிஹென்சன், லாஜிக் அண்ட் ரீசனிங் ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து 40 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தேர்வை எழுத 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த எழுத்துத் தேர்வுக்கும் AIPMT தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 250-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். கையிலிருந்து பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை. விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரலாம். படித்து முடித்த பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வர முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யிலோ சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.12 ஆயிரம் தரப்படுகிறது. கல்லூரிக்கு யூனிபார்மில் வருவதற்கு யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த உடைகளை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு 1,250 ரூபாயும் வழங்கப்படும். முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுதவிர, வாஷிங் அலவன்ஸ், ஸ்டேஷனரி அலவன்ஸ் ஆகியவையும் இன்சூரன்ஸ் வசதியும் உண்டு.
ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த பிறகு இந்திய ராணுவத்தில் மருத்துவராக நிரந்தரப் பணியில் சேரலாம் அல்லது குறுகிய காலப் பணியில் சேர விரும்புபவர்கள் ராணுவ மருத்துவ சேவைப் பிரிவில் 7 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். கல்லூரியில் சேரும்போது இதுகுறித்து உத்தரவாதம் அளித்து மாணவர்களும் பெற்றோர்களும் ரூ.25 லட்சத்துக்கான பாண்ட் எழுதித் தர வேண்டும். படிப்பை இடையிலேயே விட்டு விட்டாலோ அல்லது படிப்பை முடித்த பிறகு ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ மருத்துவ சேவைப் பிரிவில் பணி செய்ய மறுத்தாலோ என்ன செய்வது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை புனே ராணுவ மருத்துவக் கல்லூரி மேற்கொள்கிறது.
இங்கு எம்.பி.பி.எஸ். படித்து முடித்த உடன் அந்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் லெப்டினெண்ட் பதவியில் அமர்த்தப்படுவார்கள். இன்டர்ன்ஷிப் முடிந்ததும் கேப்டன் பதவியில் அமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் பணி அனுபவத்திற்குப் பிறகு மேஜராகலாம். 11 ஆண்டுகள் கேப்டனாக இருந்தால் லெப்டினென்ட் கர்னலாகப் பதவி உயர்வு பெறலாம். கேப்டனாக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு மருத்துவப் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் மூன்று ஆண்டுகள் வரை படிக்க, ‘ஸ்டடி லீவ்’ வழங்கப்படும். அந்தப் படிப்பு விடுமுறை காலத்தில் முழு ஊதியமும் வழங்கப்படும். மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு புனே ராணுவ மருத்துவக் கல்லூரி.
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17-5-2014
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி 20-5-2014
விவரங்களுக்கு: www.afmc.nic.in
No comments:
Post a Comment