சம்சார சாகரத்தில் மூழ்கி, ஆண்டு முழுதும் மூச்சுத் திணறும் சம்சாரிகள் மீது இரக்கம் கொண்ட கடவுள், அவர்களுக்கு அருளிய கருணைக் கொடைதான் கோடை விடுமுறை. தேர்வுகள் முடிந்து மனைவி, குழந்தைகளை ஊருக்கு ரயில் ஏற்றி அனுப்பி விட்ட அடுத்த நிமிடம், பல சம்சாரிகளின் ஆனந்தக் கூச்சல், ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...’ என்பதாகத்தான் இருக்கும். அன்று எனக்கும் இருந்தது.
மனைவி, குழந்தைகள் ஊருக்குப் போவதில் அப்படி என்ன ஒரு கொலைவெறி ஆனந்தம்? இருக்கு பாஸ் இருக்கு... உப்புமா, தக்காளிச் சட்னி, வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வாழ்க்கை அருளப்படும். தொலைக்காட்சி சீரியல், சுட்டி டி.வி. ஆகியவற்றை தண்டனை போல் உட்கார்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குப் பிடித்த ஆக்ஷன் படங்களைப் பார்க்கலாம்... பார்க்கலாம்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அனைத்துக்கும் மேலாக குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பிவிடும் காலை நேர டென்ஷன் போயிந்தே. இட்ஸ் கான். இனி ஒரு மாசத்துக்குக் காலையில் ஒன்பது மணி வரை ரிலாக்ஸாகத் தூங்கலாம். கேட்பார் இல்லை. வி... டு... த... லை... விடுதலை!
மனைவி, குழந்தைகளை ரயிலேற்றி விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, இரவில் தொலைக்காட்சியில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் ‘மூவிஸ் நவ்’வில் ஆக்ஷன் படம் பார்த்தேன். ஆஹா, பேரானந்தம். படம் முடிந்து பன்னிரண்டரை மணிக்கு விளக்கை அணைத்து, படுக்கும்போதுதான், ஒரு வெறுமை முதல் முறையாக உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.
அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் படுத்துக்கொண்டு ‘மொய் மொய்’ என்று கதையளக்கும் வாண்டுகளின் மழலைச் சொல் இல்லாமல், காதுகளில் ஒரு டன் பாரம். அந்த வெறுமையை வென்று, நித்ராதேவியை தழுவிடினும் நடுநடுவில் விழிப்பு வந்துகொண்டே இருந்தது. அருகில் படுத்திருக்கும் வாண்டுகளின் சலனங்கள் இல்லாமல், ‘மிஸ்... அந்தக் கணக்குக்கு எனக்கு ஆன்ஸர் தெரியும்...’ என்கிற பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சுக்கள் இல்லாமல், கை, கால் மேலே விழும் சிறுசிறு ஸ்பரிசங்கள் இல்லாமல், எதையோ இழந்துவிட்டதாக மனம் தனிமை உணரத் தொடங்கியது. அப்படியே எழுந்து உட்கார்ந்து, விடிய விடிய டி.வி.யை நோக்கமற்று வெறித்துக் கொண்டே இரவு கழிந்தது. காலையில் பெட் காபி இல்லை. எழுந்து சென்று, தெரு முக்குக் கடையில் சூடான கழுநீரைக் குடிக்கும்போது, மணமும் ஸ்ட்ராங்குமான மனைவி கைப்பக்குவ காபி நினைவுகள் நிழலாடிப் போனது.
குளித்து முடித்து, கிளம்பி அருகிலிருந்த ஓட்டலில் காலையில் இட்லி ஆர்டர் செய்தபோது, அரிசிப் புண்ணாக்கு இட்லி அவதாரம் எடுத்து டேபிளுக்கு வந்தது.
சட்னியாகத் தேங்காய்ப் புண்ணாக்கு (ஆப்பத்துக்காக தேங்காய்ப் பாலைப் பிழிந்து அதன் சக்கையைத்தான் சட்னிக்குப் பயன்படுத்துவார்கள் அங்கே. இதுவும் மனைவி சொன்னதே). ருசியில்லாத ஒரு ருசியை ருசித்து, ரத்த அழுத்தம் எகிற வைக்கும் பில்லுக்குப் பணம் கொடுத்து வெளியேறிய வேளையில், எதையோ இழந்ததன் பெருவலி மனசை அழுத்தியது.
அலுவலகம் வந்த பிறகு, பணிப் பளுவில் இழப்பின் பாரம் குறைந்து, மறைந்திருக்க... மதிய உணவு இடைவேளையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது இழப்பின் வலி. ஓட்டலின் காரமான சாம்பாரும், புளிப்பில்லாத ரசமும், துளியும் பிடிக்காத புடலங்காய் கூட்டும், தோலுக்கு ஒவ்வாத கத்தரிக்காய் பொறியலும், மோர் என்கிற பெயரில் ‘புளிச்ச தண்ணி’யும் மனசுக்குள் கொலைவெறி கிளம்பியது. முடிவு செய்தேன்... இன்று இரவு ‘நளாவதாரம்’ எடுத்து, நாமே சமைத்து விடவேண்டியதுதான்.
இரவு... தயிர் கப் வாங்கிக் கொண்டு, ஊருக்குப் போன் செய்து, ‘குக்கரில் சாதம் வைப்பது எப்படி?’ என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஓர் ஆழாக்கு அரிசிக்கு ரெண்டு ஆழாக்கு தண்ணீர். ஐந்து விசில் வந்தவுடன் கியாஸை ஆஃப் செய்யணும். அட, சமைக்கிறது இம்புட்டு ஈஸியா? குக்கரில்
அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி, மூடி அடுப்பில் வைத்தப் பிறகு, அதன் மேல் முனையிலிருந்து புஸ், புஸ்... என்று நீராவி வர ஆரம்பித்ததும் பரபரப்பானேன்.
வெயிட்... வெயிட்... அட வெயிட் எங்கேப்பா? பாத்திரங்களையெல்லாம் தள்ளி, உருட்டி, புரட்டிப் பீறாய்ந்தும் அந்தக் ‘குட்டியூண்டு குண்டு’ எங்கு ஒளிந்துள்ளது என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் குக்கரை ஆஃப் செய்துவிட்டு, ஊருக்குப் போன் செய்தால், ‘அது, எப்பவும் டூல் பாக்ஸ்லதான் இருக்கும்க...’ என்று எதிர் முனையில் வெடிச்சிரிப்பு சிரித்தார் இல்லத்து ராணி.
ஒரு வழியாக டூல் பாக்ஸிலிருந்து ‘குண்டனை’ எடுத்து, தூசு தட்டி மீண்டும் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, நீராவி வந்து, குண்டு போட்டு, ஐந்து விசிலுக்குப் பிறகு அணைத்து, சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்தால், அரைவேக்காடாய் சாதம் பல்லிளித்தது. மீண்டும் ஊருக்குப் போன்.
‘எங்கிருந்து அரிசி எடுத்தீங்க?’
‘கீழே கேரிபேக்கிலிருந்து...’
‘அட... அது இட்லி அரிசிங்க...’ மேலே பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கிறதுதான் சாப்பாட்டு அரிசி...’
எடுத்த நளாவதாரம் சொதப்பலாகி விட, பல்பு வாங்கிய அவமானத்துடன், சமையல் முயற்சியைக் கைவிட்டு, மீண்டும் ஓட்டலுக்கே படையெடுப்பு. அங்கு வறட்டி போன்ற பரோட்டாவுக்கு, அவர்கள் கொடுக்கும் சிக்கன் சால்னாவை உண்ணும்போது, அறுக்கப்பட்டபோது, அந்த சிக்கன் அலறியதை விட, மிக அவஸ்தையுடன் அலறின நாவின் சுவை மொட்டுக்கள்.
இரவு படுக்கையில் சாயும்போது, ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா... அவ்வ்வ்’ என்று ஈன முனகலாய் முதல்நாள் உற்சாகம் வடிந்திருந்தது. ‘ஊருக்குப் போன் செய்து வரச் சொல்லலாமா?’ என்று ஒரு யோசனை தோன்றி, பிறகு, ‘குழந்தைகள் விடுமுறையைக் கழிக்கப் போயிருக்காங்க. அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்’ என்று அந்த எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கண்களை இறுக்கி மூடி தூங்க முயன்றேன்.
மறுநாள் காலை... அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தபோது, ஊரிலிருந்து போன். மகள் பேசினாள்...
‘அப்பா... நாங்க இல்லாம நிம்மதியா இருக்கியா? எங்களுக்குத்தான் இங்க ரொம்பப் போரடிக்குது... என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்களோட பாட்டி ஊருக்குப் போயிட்டாங்க... அடிக்கடி கரண்ட் போகுது... நைட்டு தூக்கம் வரமாட்டேங்குது.... நாங்க நாளைக்கு மெட்ராஸ்கே வந்துடலாம்னு இருக்கோம்...’ என்றாள்.
‘கரெண்ட் போறதாலே தூக்கம் வரலையாடா?’ என்றேன்.
‘இல்லேப்பா... உன் குறட்டைச் சத்தம் இல்லாம தூக்கம் வரமாட்டேங்குது...’
‘ஹா... ஹா... சமர்த்து.... கரெண்ட் இல்லைன்னாலும் அப்பாவுக்கு நல்லா பல்பு கொடுக்கிறே...’
‘நான் உன் மகளாச்சேப்பா...‘
No comments:
Post a Comment