Tuesday, May 20, 2014

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை




நன்றாகப் படிக்கக்கூடிய,  பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு அமைப்புகள் கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றன. அதுபற்றிய விவரங்கள்...

ராஜஸ்தானி சங்கம்
சென்னையைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை வழங்குகிறது ராஜஸ்தானி சங்கம். கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள், பாலிடெக்னிக்கில் படிப்பவர்கள், சித்தா, பி.பார்மா, நர்சிங், ஐ.ஐ.டி., பொறியியல் போன்ற பல்வேறு படிப்புகளில் படிப்பவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். இறுதியாகப் படித்த ஆண்டில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கல்லூரியில் தாங்கள் செலுத்திய கட்டணத்துக்கான ரசீதையும், கல்லூரிகள் வழங்கிய அடையாள அட்டையின் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை ஜூலை மாதம் முதல் வாரத்தில் கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்:

தலைவர், என்.எஸ்.சி. போஸ் சாலை, எண். 128, கோல்டன் காம்ப்ளக்ஸ், 4-வது மாடி, சௌகார்பேட்டை, சென்னை - 600 079.

தொலைபேசி எண்கள்: 044-25360496, 044-25392438

சாஹு ஜெயின் அறக்கட்டளை
கலை, அறிவியல் பிரிவைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கு புதுதில்லியைச் சேர்ந்த சாஹு ஜெயின் டிரஸ்ட் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.  ஏற்கெனவே இந்த கல்வி உதவித்தொகை பெற்றுக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களின் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ப மாதத்துக்கு ரூ.150-ல் இருந்து ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

அத்துடன், பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், எம்.பி.ஏ. போன்ற பிரிவுகளில் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவர்கள் கடன் கல்வி உதவித்தொகை (லோன் ஸ்காலர்ஷிப்) பெற விண்ணப்பிக்கலாம். தங்களுடைய படிப்பை முடித்தவுடன் தவணை முறையில் இந்த உதவித்தொகையை திருப்பிச் செலுத்தவேண்டும். இதற்கு வட்டி ஏதும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தக் கல்வி உதவித்தொகைக பெற விரும்பும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட ரூ.10- தபால்தலை ஒட்டப்பட்ட அஞ்சல்  உறையை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு:  The Secretary, Sahujain Trust, 18, Institutional Area, Lothi Salai, Newdelhi - 110003.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 30.07.2014

விவரங்களுக்கு:  www.sahujaintrust.timesofindia.com


ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு
ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறது சென்னையைச் சேர்ந்த ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு. பிளஸ் டூ படிப்பை முடித்த, நன்கு படிக்கக்கூடிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களை அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் உதவியுடன் அடையாளம் கண்டு, அவர்களின் மேற்படிப்புக்கு உதவி வருகிறது இந்த அமைப்பு. இதுகுறித்த கட்டுரை ஏற்கெனவே புதிய தலைமுறை கல்வியில் (17.03.2014) வெளியிடப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளைப் படிப்பவர்களின் படிப்புக் காலம் முழுவதற்கும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. ஸ்காலர்ஷிப் பெற்ற மாணவர்களின் ஆளுமை மேம்படவும் அடிக்கடி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. படித்து முடித்தவுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், வேலைவாய்ப்புக்கு அவர்களைத் தகுதிவாய்ந்தவர்களாக மாற்றவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தொடர்புக்கு: 9551939551

ஆர்.டி. சேத்னா  ஸ்காலர்ஷிப்
அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ மேற்படிப்பு படிக்க இருக்கும் மாணவர்களுக்கு ஆர்.டி. சேத்னா லோன் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான படிப்பு படித்திருக்கவேண்டும். இறுதியாக எழுதிய தேர்வில் 50 சதவீதத்துக்கும் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ மேற்படிப்பை தொடர வேண்டும். அப்படி படிப்பதற்கு ஆகும் கட்டணம் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.

அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வெளிநாடுகளில் படிக்க இருப்பவர்கள் மே 31-ஆம் தேதிக்குள்ளும், உள்நாட்டில் படிக்க இருப்பவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.rdsethnascholarships.org/default.htm

No comments:

Post a Comment