இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் மெரைன் என்ஜினீயரிங், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் மும்பையில் டிரெயினிங் ஷிப் -சாணக்கியா, லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்வான்ஸ்ட் மெரிடைம் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச், மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆகிய கல்வி நிறுவனங்களும் கொல்கத்தாவில் மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போர்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய கல்வி நிறுவனங்களும் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர், சென்னையில் உள்ள நேஷனல் மெரிடைம் அகாதெமி ஆகிய அமைப்புகள் தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக உள்ளன. கொச்சி, கண்ட்லா, காரைக்கால் ஆகிய நகரங்களில் புதிய வளாகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 36 கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பிடெக் (மெரைன் என்ஜினீயரிங்), பிடெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), பிஎஸ்சி (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்), பிஎஸ்சி (மேரிடைம் சயின்ஸ்), பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (இதைப்படித்து விட்டு பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்) ஆகிய இளநிலைப் படிப்புகளும் எம்பிஏ (போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்), எம்பிஏ (இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக் மேனேஜ்மெண்ட்), எம்டெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), எம்டெக் (டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங்) எல்எல்எம் (மேரிடைம் லாஸ்) ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதல் முறையாகத் தேர்வு எழுதுபவராக இருக்க வேண்டும். அதாவது மே 31-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் தேர்வை எழுதுபவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், மேரிடைம் சயின்ஸ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.20 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1,40,500.
நான்கு ஆண்டு பி.டெக் மெரைன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது.விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1.43 லட்சம்.
மூன்று ஆண்டு பிஎஸ்சி ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிலையத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.2.0 லட்சம். வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1.4 லட்சம்.
நான்கு ஆண்டு பிடெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.
எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
எல்எல்எம் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை சட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம். கல்வி வளாகத்தில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.60 ஆயிரம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
எம்டெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அல்லது அதற்கு நிகரான பொறியியல் பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.
எம்டெக் டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் 60 சவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.
இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதுவரை காகிதத்தில் விடையளிக்கும் முறையில் நடத்தப்பட்டு வந்த இந்த நுழைவுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். சென்னை, கோவை உள்பட 34 நகரங்களில் ஜூன் 14-ஆம் தேதி 2 மணி முதல் 5 மணி வரை இந்த ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மூன்று மையங்களின் வரிசையை மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இளநிலை பட்டப் படிப்புகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு ஆகியவை குறித்து பிளஸ் டூ நிலையில் கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும்.
எம்பிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, ஃபைனான்சியல் அக்கவுண்டிங், பொருளாதாரம், கடல்சார் விவகாரங்கள், கணிதம் ஆகியவை குறித்து இளநிலை பட்ட நிலையில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எம்டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, கணிதம், என்ஜினீயரிங் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எல்எல்எம் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, பொதுச் சட்டங்கள் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்படும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். ஜூலை 14-ஆம் தேதி வாக்கில் கவுன்சலிங் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம். வங்கிச் செலான் மூலம் செலுத்தலாம். இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பொது நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி
தேதி 20-05-2014
விவரங்களுக்கு: www.imu.edu.in
No comments:
Post a Comment