Saturday, May 31, 2014
10 Undeniable Signs You’re a Chess Player
Friday, May 30, 2014
உலகமே எதிர்பார்க்கும் உலக கோப்பை
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவில் நடைபெறும் என சர்வதேசகால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்ததால் எவ்வித போட்டியுமின்றி போட்டியை நடத்தும் வாய்ப்பை 2007-ல் பிரேசில் பெற்றது.
சர்வதேச அளவில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2-வது முறையாக பிரேசில் நடத்துகிறது. இதற்கு முன்னர் 1950-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிரேசில், ஏறக்குறைய 64 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஆர்ஜென்டீனா 1978-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. இப்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க கண்டத்துக்கு கிடைத்திருக்கிறது. அக்கண்டத்தை சேர்ந்த முன்னணி அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே போன்றவை கோப்பையை வெல்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த அணிகளே வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது
12 மைதானங்கள்
போட்டியை நடத்தும் பிரேசில் மட்டும் உலகக் கோப்பைக்கு நேரடித்தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்ளிட்ட எஞ்சிய 31 அணிகளும் தகுதிச்சுற்றில் விளையாடி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் உள்ள 12 நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
போட்டியை நடத்த தகுதியுள்ள மைதானங்களாக 18 மைதானங்களின் பட்டியலை பிபாவிடம் கொடுத்தது பிரேசில். ஆனால் பிபாவோ, ஏதாவது ஒரு நகரத்தில் மட்டுமே இரு மைதானங்களில் போட்டியை நடத்தலாம். 8 முதல் 10 நகரங்களில்தான் போட்டியை நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.
பிரேசில் கால்பந்து ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டியை 12 நகரங்களில் நடத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரிக்கார்டோ டெக்ஸீரா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, 12 நகரங்களில் போட்டியை நடத்த பிபா ஒப்புக்கொண்டது.
அதன்படி பீலேம், கேம்போ கிரான்டி, புளோரியானோபோலிஸ், கோயானியா, ரியோ பிரான்கோ ஆகிய நகரங்கள் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தன. மெசியோ தானாகவே விலகிக்கொண்டது. பிரேசில் முழுவதும் போட்டியை நடத்தும் வகையில் அங்குள்ள 12 முக்கிய மாகாணங்களின் தலைநகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலிசா, பீலோ ஹரிஸாண்டே, சால்வடார், குயாபா, மானாஸ், நேட்டால், கியூரிட்டிபா, ரெசிபே, போர்ட்டோ அலெக்ரே ஆகியவற்றில் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மைதானத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி
மைதான பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.20 ஆயிரத்து 414 கோடி செலவிட்டுள்ளது பிரேசில். உலகக் கோப்பைக்காக 5 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள எஸ்டாடியோ நேசியானல் கேரின்சா மைதானம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கிறது. எஞ்சிய 6 மைதானங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான மரக்காணா
ரியோ டி ஜெனிரோவில் உள்ள தி எஸ்டாடியோ டூ மரக்காணா மைதானத்தில்தான் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. மிகப்பெரிய மைதானமான இதில் ஏற்கெனவே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 854 பேர் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
மொத்தம் 64 ஆட்டங்களைக் கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டி குரூப் சுற்றோடு ஆரம்பமாகிறது. 1930 முதல் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணிகளும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை சுமார் ரூ.3390 கோடியாகும். கடந்த உலகக் கோப்பை பரிசுத்தொகையைவிட இது 37 சதவீதம் அதிகமாகும்.
கோல் லைன் தொழில்நுட்பம்
இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு கருவியின் மூலம் பந்து கோல் எல்லையை முழுமையாகக் கடந்ததா, இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஜிஎல்டி என்றழைக்கப்படும் இந்த ‘கோல் லைன்’ தொழில்நுட்பம், பந்து கோல் எல்லையைக் கடந்ததும் நடுவரின் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்துக்கு தகவல் தெரிவித்துவிடும்.
2010 உலகக் கோப்பையில் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் இடையிலான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பார்டு அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனுக்குள் விழுந்தபோதும், நடுவரால் சரியாகக் கணிக்கமுடியாததால் அவர் கோல் கொடுக்கவில்லை. இதனால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த தொழில் நுட்பத்துக்கு 2012-ல் பிபா ஒப்புதல் வழங்கியது. அதே ஆண்டில் ஜப்பானில் நடைபெற்ற பிபா கிளப் உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. உலகக் கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது இந்த தொழில்நுட்பம். இதற்காக ‘கோல் கன்ட்ரோல் சிஸ்டம்’ (கோல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்) பிரேசிலில் போட்டி நடைபெறவுள்ள 12 மைதானங்களிலும் பொருத்தப்படவுள்ளது.
71.51 கோடி பேர் கண்டுகளிப்பு
2006-ல் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, பிரான்ஸை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியை மட்டும் 71.51 கோடி பேர் கண்டுகளித்தனர். அதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகமானோரால் கண்டுகளிக்கப்பட்ட போட்டி.
பிரேசிலிடம் 5 உலகக் கோப்பைகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை நடைபெறவில்லை.
பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதற்கடுத்தபடியாக இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும், ஆர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. சர்வதேச அளவில் 200-க்கும் அதிகமான நாடுகளில் கால்பந்து போட்டிகள் விளையாடப்பட்டாலும்கூட, உலகக் கோப்பையில் விளை யாடும் வாய்ப்பு 32 அணிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் 8 அணிகள் மட்டுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றுள்ளன
Thursday, May 29, 2014
'200 ரூபாய் ஆப்பிளைவிட, 40 ரூபாய் கொய்யா உயர்ந்தது!''
அரிசி, பருப்பு, காய்கறி, பழம்... என்று எதை எடுத்தாலும்.... விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும்; பளபளப்பாக இருக்க வேண்டும்; அதில்தான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்கிற நம்பிக்கை, இங்கே பலரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால், இதில் துளிகூட உண்மை இல்லை!
'என்ன விலை விற்றால் நமக்கென்ன?' என்று கவலையில்லாமல் வாங்கத் துணியும் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் சரி... பொருட்களின் விலைவாசி பரபரவென்று உயர்ந்துகொண்டே போவதைப் பார்த்து பதறுகிற நடுத்தர மற்றும் ஏழைகளாக இருந்தாலும் சரி... இந்த உண்மையைப் புரிந்துகொண்டால்... தேவையில்லாமல் பணம் வீணாவதைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று சொல்லி திரும்பிப் பார்க்க வைக்கும் சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை விரிவுரையாளர் குந்தலா ரவி, ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார்... உங்களின் பாக்கெட்டையும், உடலையும் பலமாக்க!
தானியத்தில் தேர்வு: தானிய வகைகளைப் பொறுத்தவரை, 70 ரூபாய், 100 ரூபாய் விலையில் கிடைக்கும் அரிசிதான் பிரதானம் என்பதில்லை. அவற்றிலிருக்கும் அதே சத்துக்கள்தான், ரேஷன் கடையில் இலவசமாக தரப்படும் அரிசியிலும் இருக்கின்றன. 20 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியிலும் இருக்கின்றன. அதேபோல அரிசிதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் மற்ற தானிய வகை உணவுப் பொருட்களையும் பயன்படுத்தலாம். அவற்றிலும் அதே சத்துக்கள்தான் உள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற மற்ற தானியங்களையும் உணவாகப் பழக்க வேண்டும்.
பருவகால காய்கறிகள்: குறிப்பிட்ட காய்கறிகளையே வாங்காமல், அந்த வகையில் உள்ள வேறுரக காய்களையும் தேர்வு செய்யலாம். உதாரணமாக, பீன்ஸ் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்போது அதன் விலை ஏகத்துக்கும் இருந்தால், அதே ரகத்தைச் சேர்ந்த அவரைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை வாங்கலாம். குறிப்பிட்ட பருவத்தில் அதிக வரத்துள்ளவையாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வெங்காயத்தைப் பொறுத்தவரையில் அதிகமானோர் சின்ன வெங்காயத்தைதான் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சுவை மாறுபாடு மட்டுமே. கீரை வகைகளில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றின் விலை எப்போதுமே குறைவுதான். எல்லா வகை கீரைகளைப் போன்றே இதிலும் கால்சியம், அயர்ன் சத்துக்கள் பரவலாக இருக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் இவற்றையும் உணவில் நிறைய சேர்த்து, அதிக பயன் பெறலாம்.
நம்மூர் பழங்கள்: ஆஸ்திரேலிய ஆப்பிள், அமெரிக்க ஆரஞ்சு, நியூசிலாந்து திராட்சை போன்றவற்றில்தான் சத்துகள் நிறைந்திருக்கின்றன என்கிற நினைப்பு பலரிடமும் இங்கே நிறைந்திருக்கிறது. இவற்றைவிட, நம்ஊரில் விளையும் வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளிப் பழங்களிலேயே அதிக சத்துகள் நிரம்பியுள்ளன. கிலோ 200 ரூபாய் வரை விற்கும் ஆப்பிளைவிட, 40 ரூபாய்க்கும் விற்கும் கொய்யா சிறந்தது. குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் பெறலாம்.
பால் பொருட்கள்: பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, அனைத்துமே அதிக விலைதான். காரணம், மற்ற உணவுப் பொருட்களைவிட, இவற்றில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கைதான். ஆனால், எல்லாவற்றையும் போல பாலும் ஓர் உணவுப் பொருள் அவ்வளவுதான். பாலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய பால் கொடுக்க வேண்டுமே என்பார்கள் சிலர். தாய்ப்பாலைத்தான் மூன்று வயதுவரை கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, மாட்டுப்பால் என்பது முக்கியமாக கொடுக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளையே கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தினால் போதும். இதனால், பணம் மிச்சமாவதோடு, அதிக சத்தும் கிடைக்கும்'' என்று சொல்லும் குந்தலா ரவி, இந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் நேரடியாக விவரித்து சொல்லவும் காத்திருக்கிறார்... 'கலங்காதிரு மனமே' ஒலிச் சேவையில்!
மீன் வாங்கவும் மின்வணிகம்
வீட்டில் உட்கார்ந்தபடிக்கு மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதிலிருந்து மனசுக்குப் பிடித்த புத்தகம் வாங்குவது வரை செய்வதற்கு இணையத்தைவிட வசதி வேறு ஏது? ஈ-காமர்ஸ் என்ற மின்வர்த்தகம் இதுவே.
மின்வணிகத்தைப் பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம் - ‘வணிகரோடு வணிகர்’நடத்தும் வியாபாரம் (பிசினஸ் டு பிசினஸ் - B2B), ‘வியாபாரியோடு வாடிக்கையாளர்’வரவுசெலவு (பிசினஸ் டு கஸ்டமர் B2C), மற்றும் வரி செலுத்துதல் போன்ற ‘அரசுக்கும் மக்களுக்கும்’ இடையிலான பணப் போக்குவரத்து (கவர்ன்மெண்ட் டு சிடிசன் G2C) ஆகியவை இவை.
இணையத் துணிக் கடையில் இணைய சேலைகள்
இணையத்தில் துணி வாங்க, துணிக்கடைக்கான இணையதளம் முதலில் தேவை. இது சுயசேவைக் கடை. வாடிக்கையாளரே எளிதாகக் கடையின் விற்பனைப் பொருள்கள் எவை, என்ன விலை என்றெல்லாம் பார்க்க வசதி வேண்டும். தேவையான மேல்விவரத்தையும் இணையம் மூலமே பெறவும், பொருளைத் தெரிவுசெய்யவும் ஏற்பாடு செய்துதர வேண்டும். இணையம் மூலமே விலைக்கான தொகையைச் செலுத்த வேண்டும். வாங்கிய பொருள் வீட்டுக்கு வந்துசேர விலாசம் பதியவும், வாங்கிய பொருளில் பழுது இருந்தால் புகார்செய்து மாற்று கேட்கவும் வாடிக்கையாளருக்கு இயல வேண்டும்.
வலைப்பரப்பு நிறுவனங்கள்
இணையதளம் தொடங்க கடைக்காரர்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். தேவைப்பட்டபடி தளத்தை எழுப்பி, வலைப்பரப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் (web hosting service providers) இதற்கென்றே இருக்கிறார்கள். வர்த்தகம் நடக்கிற இடம் என்பதால் சகல பாதுகாப்போடும் வாடிக்கையாளர்கள் பொருள் வாங்க வசதி செய்துதருவது இவர்களே.
இணையத் துணிக் கடையில் தென்படும் வகைவகையான புடவை நிழற்படங்களில் ஒன்றை ‘மௌஸ்’ கொண்டு சொடுக்கியதும், திரையில் அதன் விலை விவரம் தென்படும். இதற்குப் பின்னணியில், கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் தகுந்த அடையாள எண் கொடுத்து விலைப் பட்டியல் தயாரிப்பது நடைபெற்றிருக்கும். விலை மாறும்போதோ அல்லது புதிய துணி வகைகள் விற்பனைக்கு வரும்போதோ விலைப்பட்டியல் திருத்தப்படும். பட்டியலைத் தயாரித்து மாற்றுவது கடைக்காரரின் வேலை. அதை நிர்வகித்து, பொருளுக்கு ஏற்ற விலையைக் காட்சிப்படுத்துவது இணையதள சேவை நிறுவனத்தின் பணி.
கடைவண்டி, இணைய கல்லா
நேரடி வியாபாரத்தில், வாடிக்கையாளர் சேலை, வேட்டி, சட்டை என்று பொருட்களைத் தேர்வுசெய்தபடி கடைக்குள் சுற்றிவரலாம். அப்போது அவர் தேர்வுசெய்து வைத்திருக்கும் பொருட்களைப் பத்திரமாக மற்றவர்களின் தேர்வுப் பொருட்களோடு கலக்காமல் ஒரு சிறிய தள்ளுவண்டியில் (ஷாப்பிங் கார்ட்) வைத்துத் தள்ளிக்கொண்டு போவது மேலைநாட்டு வாடிக்கை. இணையக் கடையில் மென்பொருளால் உருவாக்கப்பட்ட ‘கடைவண்டி’ நாம் தேர்ந்தெடுத்தவற்றையெல்லாம் பத்திரமாக வைக்கும். எதையாவது ‘அப்புறம் வாங்கலாம்’ என்று திரும்ப எடுத்து வைத்தாலும் அதை நினைவு வைத்துக்கொண்டு அடுத்த முறை இணையக் கடைக்குப் போனதும் ஞாபகப்படுத்தவும் கூடும்.
பொருள் வாங்கியதும் கல்லாவில் காசு கொடுத்துவிட்டு வெளியேற வேண்டியதுதான். ‘பணம் செலுத்த’ எனத் திரையில் சிறு சதுரமோ, வட்டமோ தென்படும். அங்கே சொடுக்கினால், பண்டம் வாங்கிய தொகைக்கு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகக் கடைக்கு இணையப் பணமாற்றம் செய்யலாம். அல்லது கடன் அட்டை எண்ணைப் பதியலாம். இந்த நடவடிக்கை பாதுகாப்பாக இருக்க, உங்கள் கடன் அட்டையை விசா அல்லது மாஸ்டர் கார்ட் போன்ற அட்டை வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். கூடவே, உங்கள் கைபேசி எண்ணும் பதிவாகியிருக்க வேண்டும்.
கடன் அட்டை வழங்கிய நிறுவனம், உங்கள் கைபேசிக்கு உடனே ஆறு அல்லது எட்டு இலக்கத் தற்காலிகக் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) அனுப்புவார்கள், ஒரு நிமிடத்துக்குள் அதை நீங்கள் கம்ப்யூட்டர் திரையில் சரியாகப் பதிய வேண்டும். ஒரே ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் அது. உங்கள் கடன் அட்டையை வைத்து வேறு யாராவது கள்ளத்தனம் செய்வது சிரமம். ‘ஒன் டைம் பாஸ்வேர்ட்’ உங்கள் கைபேசிக்குத்தானே வரும்!
இணையக் கடையிலிருந்து கைக்கு…
அட்டை வழங்கிய நிறுவனம் உங்கள் அட்டை அசலா, இந்தக் கடையில் பொருள் வாங்க உங்களுக்கு அனுமதிக்கப்பட கடன் தொகை மீதம் இருக்கிறதா என்றெல்லாம் பரிசோதித்து, எல்லாம் சரியாக இருந்தால், பொருளுக்கு விலையை அட்டை மூலம் செலுத்த அனுமதிக்கும், திரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தினத்தில் பொருள் கைக்கு வந்துசேரும்.
இந்த நடவடிக்கையில் முக்கியமான அம்சம், உங்களுக்குத் துணி விற்ற இணையக் கடைக்கு, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் பொருள் வாங்கிய அடுத்த நாளே பணம் வரவாகிவிடும். அதை வழங்குவது, உங்களுக்கு கடன் அட்டை கொடுத்த உங்கள் வங்கி. மாதம் பிறந்து, உங்கள் வங்கியில் பணம் செலுத்துவதன் மூலம் கடன் அட்டை நிலுவையைத் தீர்த்துவிடலாம்.
மின்வணிகப் பேட்டை
ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு போனால் ஸ்கூட்டர், கார் உதிரிப் பாகங்கள் தேர்ந்தெடுத்து வாங்க அவற்றை விற்கும் அநேக கடைகள் உண்டல்லவா? அதே போல் மின்வணிகத்தை வசதியாகச் செய்யவும் அமைப்புகள் உண்டு. இவை தலைவாசல்கள் எனப்படும். ஆங்கிலத்தில் போர்ட்டல். கணினித் திரை (மானிட்டர்) விற்கிற கடைகள், மெமரி போர்ட் விற்கும் கடைகள், விசைப்பலகை (கீ போர்ட்) விற்கிற கடைகள் இப்படி ‘கணிப்பொறி’ என்ற ஒரே வகையைச் சார்ந்த கடைகளெல்லாம் பங்குபெறும் கணினித் தலைவாசலில், மிக்சி, கிரைண்டரோ, தலைப்பாகட்டி பிரியாணியோ விற்கும் ஒரு கடையும் இருக்காது, இந்த மாதிரியான தலைவாசல் ‘செங்குத்துத் தலைவாசல்’ (வெர்டிக்கல் போர்ட்டல்) எனப்படும்.
தொலைக்காட்சிப் பெட்டி பழுதுபார்த்தல், கணினி பழுதுபார்த்தல், மின்னணு கேமரா பழுதுபார்த்தல், குளிர்சாதன இயந்திரத்தைப் பழுதுபார்த்தல் என்று இதுபோன்ற எந்த இயந்திரத்தையாவது பழுதுபார்க்கும் கடைகள் அடங்கிய தலைவாசல் ‘கிடைமட்டத் தலைவாசல்’ (ஹரிஸாண்ட்டல் போர்ட்டல்) எனப்படும்.
பார்த்துக்கொண்டே இருங்கள்... இன்னும் இரண்டே வருடத்தில் ‘சைவச் சாப்பாடு’ போர்ட்டலில், ஒரு ஹோட்டலின் இணையக் கடையில் இட்லி, அடுத்த கடையில் குழிப் பணியாரம், மூன்றாம் கடையில் நவதானிய தோசை என்று ஆர்டர் செய்து திருப்தியாகச் சாப்பிடலாம். விலையைப் பற்றி இப்போதே கவலை எதற்கு?
இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com
Saturday, May 24, 2014
தமிழ் சினிமாவில் புரட்சி?
என்னமோ ஏதோ என்று பயந்து விடாதீர்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்கே மாதங்களில் செஞ்சுரி போட்டு விட்டது. வதவதவென வாரா வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஆறு, எட்டு, பத்து என்கிற எண்ணிக்கைகளில் படங்கள் வெளியாவது புரட்சியா அல்லது வீழ்ச்சியா?
நூற்றி எட்டு
தமிழில் சராசரியாக வருடத்துக்கு எத்தனை திரைப்படங்கள் வெளிவரும்?
நேரடி தமிழ்ப் படங்கள் தவிர்த்து இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என்று மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களையும் சேர்த்து ஆண்டுக்கு நூற்றி முப்பதிலிருந்து நூற்றி ஐம்பது படங்கள் வரை வெளியிடப்படுகின்றன. இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி.
ஆனால் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலேயே இந்த எண்ணிக்கையை தமிழ் சினிமா கடக்கப் போகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் நான்கு மாதங்களில் மொத்தம் நூற்றி எட்டு புதிய படங்கள் அரங்குகளில் திரையிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் டப்பிங் படங்களைக் கழித்துவிட்டால் நேரடி தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையே எண்பதைத் தொடுகிறது.
இந்த அசாத்தியமான எண்ணிக்கை தமிழ் சினிமா தொழில்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகிறதா அல்லது வீக்கத்தின் வெளிப்பாடா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி.
இவ்வாண்டு வசூல் ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணுவதற்கு ஒரு கை மட்டுமே போதும். அதிலேயே கூட ஒன்றோ, இரண்டோ விரல்கள் மிச்சமிருக்கக் கூடும்.
தொழில்நுட்பத்தின் பங்கு
திரைப்படங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி பிரதானமான காரணமாக இருக்கிறது. முன்பு நெகட்டிவ் ஃபிலிம்களில் படம் பிடிப்பது படத்தின் பட்ஜெட்டில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. வெறும் நான்கு நிமிடங்கள் படம் பிடிக்கவே தோராயமாக ஃபிலிம் செலவு பதிமூன்றாயிரம் ரூபாய் ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிரகாசமான லைட்டிங் வசதி ஏற்படுத்த வேண்டும். லைட்டுகள் வாடகை. அவற்றை இயக்க ஜெனரேட்டர். இதற்கெல்லாம் மிகப்பெரிய யூனிட்டே வேலை பார்க்கும். அவர்களுக்கு உணவு, சம்பளம், பேட்டா என்று பட்ஜெட் எல்லா வகையிலும் எகிறும். ரெட், 5டி போன்ற டிஜிட்டல் கேமராக்கள் புழக்கத்துக்கு வந்தபிறகு இவ்வகையிலான பெரும் செலவு குறைந்துள்ளது. இப்போது ஒரே ஒரு கேமராமேனே கிட்டதட்ட ஒரு யூனிட்டுக்குச் சமம்.
படப்பிடிப்பில் செய்யப்படும் தவறுகளைக் கூட பிற்பாடு எடிட்டிங்கிலேயே சரிசெய்து கொள்ளலாம். மீண்டும் படம் பிடிக்க வேண்டிய நிலை இல்லை. லைட்டிங் குறைபாடுகளை சீர் செய்யலாம். வண்ணங்களை நினைத்த மாதிரி மேம்படுத்தலாம். ப்ளூமேட் முறையில் வெளிநாட்டுக்குப் போகாமலேயே உள்ளூரிலேயே காட்சிகளையும், பாடல்களையும் படம் பிடித்து, பின்னணியை மாற்றி வெளிநாட்டில் எடுத்த மாதிரி கூட அசலாக காட்ட முடியும். கிட்டதட்ட எல்லாமே சாத்தியம். தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை பெருமளவில் குறைத்துவிட்டது.
படப்பிடிப்புக்கான செலவு நிச்சயம் குறைந்திருக்கிறது. விரைவாகவும் படம் எடுக்க முடிகிறது. எனவே தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே நேரம் எங்கள் தொழிலின் தரமும் வெகுவாக குறைந்து வருவது கவலைப்படத்தக்க அம்சம். சினிமா தொழில்நுட்பம் தெரிந்த தகுதியான ஆட்களை வைத்துதான் வேலை பார்க்க வேண்டும். கேமராவை ஆபரேட் செய்தாலே படம் எடுத்துவிட முடியுமென்ற தொழில்நுட்ப சாத்தியத்தால் கத்துக்குட்டிகள் ஏராளமானோர் படம் பிடிக்க வந்துவிடுகிறார்கள். செல்போனில் வீடியோ எடுப்பது மாதிரி எடுத்துத் தொலைக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட எண்ணிக்கையில் மொக்கைப் படங்கள் வெளிவந்து படுதோல்வி அடைந்து, இன்டஸ்ட்ரிக்கே பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதனால் தொழில்நுட்பம் மீதே அவநம்பிக்கை வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது" என்று அச்சப்படுகிறார் கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங்.
திரையரங்குகளும் முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கின்றன. ஃபிலிம் புரொஜெக்டர்களை நீக்கிவிட்டு, டிஜிட்டல் புரொஜெக்டர்களைத்தான் கிட்டதட்ட எல்லா தியேட்டர்களுமே பயன்படுத்துகின்றன. சாட்டிலைட் மூலமாகவோ, ஹார்டு டிஸ்கில் சேமித்தோ திரையில் நமக்கு படம் காட்டுகிறார்கள். ஃபிலிம் புரொஜெக்டர்கள் காலத்தில் வெளியாகும் ஒவ்வொரு பிரிண்டுக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். படம் ஓடாத காலகட்டத்திலும் அந்த பிரிண்டுகள் அழிந்து விடாமல் சேமிக்க செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது அந்தச் செலவெல்லாம் மிகக் கணிசமாக குறைந்திருக்கிறது. டிஜிட்டல் முறையில் படத்தைத் திரையிடுவது உழைப்பு ரீதியில் சுலபமானதாகவும், செலவு ரீதியில் சிக்கனமானதாகவும் இருப்பதால் ஒரே திரையரங்கு வளாகத்தில் நிறைய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடிகிறது.
ஆனாலும் பெரிய நட்சத்திரங்கள் பங்குபெறும் படங்களின் பட்ஜெட் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிக்கனமாகவில்லை. வருடா வருடம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இனங்கண்டு சரிசெய்ய வேண்டியது சினிமா சங்கங்களின், தொழில் ஆர்வலர்களின் கடமை.
பாராட்டுவதா, பயப்படுவதா?
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவை மட்டுமே தொழிலாக எடுத்துக் கொண்டவர்கள்தான் இத்துறையில் புழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபமாக வேறு துறையில் ஈடுபடுபவர்களும் இத்துறையில் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பார்ட் டைம் தொழிலாக சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
லாபம் ஈட்டக் கூடிய, சம்பாதிப்பதற்குத் தகுதியான தொழிற்துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருப்பதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே இந்தப் போக்கை நாம் எடுத்துக் கொள்ளலாம். படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சில நாட்களுக்கு முன்பாக இதைக் குறிப்பிட்டு சினிமா விழா ஒன்றில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசினார்.
‘நிறைய தொழில் அதிபர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். டாக்டர், பைலட், சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்று பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களும் சினிமாவுக்குப் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தில் சினிமாவை கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது.
ஆனால், படங்கள் சரியாக ஓடாததால் கடந்த சில மாதங்களில் மட்டுமே சுமார் இருநூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இழப்பை தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. தியேட்டர் வசூல் படுமோசம். வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சினிமாக்களின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது.
கடந்த ஆண்டு மட்டுமே நூற்றி எண்பது புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்துப் பாராட்டுவதா அல்லது பயப்படுவதா என்றே எனக்குத் தெரியவில்லை’ என்று வேதனையோடு குறிப்பிட்டார் கேயார்.
சென்சார் சான்றிதழ் வாங்கியும் இன்னும் வெளியாகாத படங்களின் எண்ணிக்கை மட்டுமே நானூறை எட்டுகிறது. புற்றீசல் மாதிரி எண்ணிக்கையில் அதிகமாக படங்கள் வெளியாவதால் எந்தவொரு படத்துக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்க வகையில்லாமல் வசூல் பரவலாகி, அனைவருமே இழப்பை சந்திக்க நேர்கிறது. முன்பு வெள்ளிக்கிழமை இத்தனை படம்தான் வெளியாக வேண்டும், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்க வழியில்லாத தேதிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் படவெளியீடுகளை முறைப்படுத்த முனைந்தது. இப்போது யாருமே அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
நிலைமை கொஞ்சம் மோசம்தான்
நவீனத் தொழில்நுட்பம், சமீபமாக இத்துறைக்குக் கிடைத்துவரும் ஏராளமான மனிதவளம், தொழிலாக அங்கீகரித்து சினிமாவில் கொட்டப்படும் கோடிக் கணக்கான முதலீடு போன்ற அம்சங்கள்தான் திரைப்படங்களின் திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பிரதானமான காரணங்களாக இருக்கின்றன. இது ஆரோக்கியமான திசைக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் செல்லாமல், எதிர்த்திசையில் படுவேகமாக ஓடி அழித்துக் கொண்டிருக்கிறது என்கிற முரண்தான் வேதனையான விஷயம்.
வெள்ளிக்கிழமை காலையில் படம் வெளியிடப்படுகிறது. அன்று மாலையே வெற்றி பெற்று விட்டதாக அறிவித்து சக்ஸஸ் மீட் நடத்துகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எப்படி வெற்றியடைந்தோம் என்று படக்குழுவினர், பாரபட்சமின்றி எல்லா சேனல்களிலுமே பேட்டி கொடுக்கிறார்கள். திங்கள் காலை வரலாறு காணாத வெற்றியென்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். சினிமாக்காரர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று புரியவில்லை.
திரைப்படத் தயாரிப்புக்குச் செய்யப்படும் செலவுக்கு இணையாக விளம்பரங்களுக்கும் செலவு செய்கிறார்கள். சுமாரான அல்லது மோசமான படத்தை விளம்பரம் மூலமாக வெற்றியடையச் செய்ய முடியுமென்று நம்புகிறார்கள். விளம்பரக் கட்டுப்பாடு பற்றி முன்பு திரைத்துறையினர் பேசினார்கள். முழுப்பக்க விளம்பரங்கள் கூடாது போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்கள். ஆனால், டிவி சேனல்களுக்கு வழங்கப்படும் வீண் விளம்பரங்கள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை. விளம்பரங்களைக் குறைத்துவிட்டால் சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறைந்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சம்.
திருட்டு டிவிடி, ஆன்லைன் பைரஸி மூலமாக தமிழகத்தில் ஒரு தியேட்டருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருவாய் ஐம்பது சதவிகிதம் வரை சமீப காலமாகக் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில், ஒரு புதுப்படம் வெளிவந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பைரஸியால் வசூல் பாதிப்பு இல்லை என்கிற நிலைமையை அங்கிருக்கும் அரசாங்கங்களும், திரைப்படத்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இந்த வீடியோ பைரஸிக்கு எதிராக சமீபத்தில் எப்போதாவது திரைப்படச் சங்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறதா? ஒட்டுமொத்த சங்கங்களும் முதல்வரை சந்தித்து தங்கள் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சரிசெய்யச் சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார்களா? தொழிலின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்ட நிலையிலும் இன்னும் தமிழ்த் திரைத்துறையினர் ஏன் மெத்தனமாக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடையே இல்லை.
தீர்வு உண்டா?
‘தீர்க்கப்படாத பிரச்சினைகள் உலகத்திலேயே இல்லை. திரைப்பட வெளியீட்டு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவருவதின் மூலம், தமிழ் சினிமாவை லாபகரமான தொழிலாக மாற்றலாம்’ என்று சினிமா கார்ப்பரேட் நிறுவனமான டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸின் தென்னக தலைமை அதிகாரியான கோ.தனஞ்செயன் கூறுகிறார்.
டிஜிட்டல் புரட்சியால் படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பணம் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் இன்று தயாரிப்பாளர் ஆகிவிடலாம். எதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் முறைப்படுத்த முடியும்.
நம்முடைய மாநிலத்தில் திரையரங்குகள் குறைவு. அப்படிப்பட்ட நிலையில் பண்டிகை நாட்களில் மூன்று, மற்ற வாரங்களில் இரண்டு என்று பேசிவைத்துப் படங்களை வெளியிட்டால் எல்லாருமே லாபம் பார்க்க முடியும் அல்லது பெருமளவு நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.
பெரிய நடிகர் நடித்த படம், பெரிய நிறுவனம் தயாரித்த படமென்று எல்லா தியேட்டர்களையும் அவர்களே வசப்படுத்துவதை மாற்ற வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டுக்கு அதிகபட்சம் முந்நூறு தியேட்டர், நடுத்தரப் படங்களுக்கு இருநூறு தியேட்டர், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நூறு தியேட்டர் என்று ஒதுக்கீடு செய்யலாம். இம்மாதிரி கட்டுப்பாடுகள் கேரளத்தில் உண்டு என்பதால் அவர்களது திரைத்துறை கொஞ்சம் லாபகரமாகவே நடக்கிறது என்பது நமக்கு நல்ல முன்னுதாரணம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு சிறியளவிலான முந்நூறு முதல் நானூறு சீட்டுகள் கொண்ட திரையரங்கங்களாகப் பார்த்து இடம் ஒதுக்க முன்னுரிமை தரவேண்டும்" என்று தன்னுடைய யோசனையை தீர்வாக முன்வைக்கிறார் தனஞ்செயன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. திரையரங்குகளுக்கு கூட்டம் குறைவாகத்தான் வருமென்று தெரிந்தும்கூட கோடை விடுமுறையால் மக்கள் எப்படியும் தியேட்டருக்கு வருவார்கள் என்கிற கண்மூடித்தனமான சூதாட்ட நம்பிக்கையில் வரைமுறையின்றி இஷ்டத்துக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கெனவே ஓரளவுக்கு வசூல் பார்த்துக் கொண்டிருந்த படங்களின் வசூலையும் சேர்த்து இவர்களே காலி செய்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத காலங்களில்தான் புதுமுகங்களின் படங்களையும், சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட முடிகிறது. நாங்கள் என்ன செய்வது என்று நியாயமான கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஆனால் அதற்காக, தானே தற்கொலை செய்து கொள்வதா?
தனஞ்செயன் முன்வைக்கும் தீர்வினை அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் இன்னும் தியேட்டர் கிடைக்காமல் நானூறு படங்கள், சென்சார் சான்றிதழை காட்டிக்கொண்டு வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காட்டாற்று வெள்ளத்தில் காட்டு மரங்களோடு சந்தன மரங்களும் அடித்துச் செல்லும் ஆபத்தை இது குறைக்கும். மோசமான படங்களால், நல்ல படங்களும் வெற்றி வாய்ப்பை இழப்பதைத் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்பு நம்மிடமே இருக்கிறது.
ஒளி தெரிகிறதா?
சினிமா தொழிலின் அடுத்த வடிவம், எதிர்காலத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றிய விவாதம், அத்தொழிலோடு அவ்வளவாக நேரடித் தொடர்பில்லாத மாற்று சினிமா ஆர்வலர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சினிமாவை கலையாக முன்னெடுப்பதுதான் இவர்களது முதன்மைத் தெரிவு.
திரைப்படங்களின் உள்ளடக்க ரீதியாகத்தான் இவர்களது அக்கறை இருக்கிறது. ஆனால், வணிகமாகவும் பார்க்க வேண்டிய கட்டாயம் திரைத்துறைச் சங்கங்களுக்கு உண்டு.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து சினிமா விழா ஒன்றில் சினிமாவின் எதிர்காலம் குறித்து தன்னுடைய கருத்தைச் சொன்னார். ‘இந்த நூற்றாண்டின் இறுதியில் திரைத்துறையில் மாற்றம் வரும். அப்போது சினிமா திரையரங்குகளைத் தாண்டி நேரடியாக மக்களிடம் வரும். விநியோகஸ்தர்களின் தேவை தீர்ந்துவிடும்.
குறைந்த முதலீட்டில் நிறைய படங்கள் வரும். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் வீசி செல்லப்படுவதைப்போல, புதுப்பட டிவிடிக்கள் வீசப்படும். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். காலம் மாறும். கலை மேம்படும். கவிஞர் அல்லவா?’ அபாரமான கற்பனையில் இத்துறையின் எதிர்காலம் குறித்த சித்திரத்தை நம் மனதில் ஏற்றுகிறார்.
உண்மையில் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைக் கணிப்பது என்பது யானையை தடவிப் பார்க்கும் பார்வையற்றோரின் நிலையாகவே அனைத்துத் தரப்புக்கும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வெளிச்சக் கீற்று தெரியாமலா போய்விடும்?
தாதாவின் லொள்ளு
பெரிய நடிகர்களின் படங்களுக்காக தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடுவதால், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு காலம் காலமாகவே தமிழ்த் திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. சமீப காலமாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்து மற்றவர்களின் படங்களின் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி முணுமுணுப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும் பெரிய ஆட்களை பகைத்துக்கொள்ள விருப்பமின்றி யாரும் நேரடியாக வாய் திறப்பதில்லை. மன்சூர் அலிகானின், ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படம் வெளியிடப்பட முடியாமல் முடங்கிக் கிடந்தபோது ஆவேசமாக ஒரு விளம்பரம் வெளியிட்டார். ‘எல்லா திரையையும் நீங்களே எடுத்துக்கிட்டா, என் படத்தை என்ன கழிவறையிலும், கேண்டீனிலுமா ஓட்டுவேன்’ என்கிற வாசகங்களோடு வெளிவந்த அந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார்ப்பரேட் சதி?
கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக படங்களை தயாரிப்பதோடு, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். தாங்கள் வெளியிடும் ஒரு திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டாலும், உடனடியாக தியேட்டரிலிருந்து அந்தப் படத்தைத் தூக்குவதில்லை. அவ்வாறு தூக்கினால் வேறு படம் வெளியாகி வெற்றி பெற்று தங்களது அடுத்த படவெளியீட்டுக்கு தியேட்டர் கிடைக்காதோ என்று அஞ்சி, நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தோல்விப் படத்தையே தொடர்ந்து ஓட்டுகிறார்கள். இதனாலேயே நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல், கிடைத்த தியேட்டரில் படத்தை வெளியிட்டு பலத்த நஷ்டத்துக்கு சிறு தயாரிப்பாளர்கள் ஆளாக வேண்டியிருக்கிறது.
பவர் ஸ்டார்களின் கூத்து
ஒருபக்கம் நிறைய படங்கள் வெளியாகி தொடர்ச்சியாக தோல்வி. இன்னொரு பக்கம் படங்கள் வெளியிட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று இரண்டு நேரெதிர் பிரச்சினைகளுக்கு நடுவே அவ்வப்போது பவர் ஸ்டார் மாதிரி திடீர் ஆட்கள் தோன்றி ஒட்டுமொத்தச் சூழலையும் பகடிக்கு உள்ளாக்குகிறார்கள். படு மோசமாக எடுக்கப்படும் பவர் ஸ்டார் வகைப் படங்கள் ஆளே இல்லாத தியேட்டர்களில் அனாயசமாக நூறு நாட்கள், இருநூறு நாட்கள் ஓட்டப்படுகின்றன. பணத்தை தண்ணீராக செலவழித்து ஒருநாள் கூட உருப்படியாக ஓட வக்கில்லாத தங்கள் படங்களுக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டி, வெற்றிவிழா கொண்டாடி சினிமா இண்டஸ்ட்ரியையே பகடிக்குள்ளாக்குகிறார்கள். முன்பு ஜே.கே.ரித்தீஷ், இப்போது பாஸ் என்று இந்த திடீர் சினிமாக்காரர்களால் கலகலத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.
பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை பெறுவது எப்படி?
பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த, ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்த, ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகளையும் அரசு குழந்தைகள் காப்பகங்களின் மூலம் தங்கிப் படிக்க வழி செய்கிறது. இவற்றுக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரை அணுகுவது? விவரங்கள் இங்கே:
i. சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத அல்லது தாயோ, தந்தையோ மட்டுமே உள்ள குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரால் பராமரிக்கப்பட முடியாத குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தும் தந்தை / தாய் கடும் மாற்றுத்திறனுடையோராக இருக்கும் குடும்பத்திலுள்ள குழந்தைகள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
வழங்கப்படும் உதவி:
உணவு, இருப்பிடம், கல்வி, சீருடை, இலவசப் பாடநூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், மருத்துவ வசதி, காலணிகள் மற்றும் படுக்கை வசதி அளித்தல்.
தகுதிகள்:
கல்வித் தகுதி இல்லை.
ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் 5 வயது முதல் 18 வயது வரை தங்கிப் பயில அனுமதிக்கப்படுவர்.
ஆண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரை தங்கிப் பயில அனுமதிக்கப்படுவர்.
பெற்றோர் இருவரும் இல்லாத பெண் குழந்தைகள் மேற்படிப்புக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுவர்.
எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டு தொடங்கும் முன்.
யாரை அணுகுவது?
கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் காப்பகங்கள்,மாவட்ட சமூக நல அலுவலர்கள்,விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்),மகளிர் ஊர்நல அலுவலர்.
ii. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறுவதற்கென இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை நிலை வைப்புத் தொகையின் 20-ஆம் ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.
திட்டம் i ஒரு பெண் குழந்தை மட்டும்
இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.22,200- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டம் ii இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்
இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.15,200- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தகுதிகள்:
திட்டம் 1-ன்கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 2ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
விண்ணப்பிக்கும்போது பெற்றோர் / அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
01.04.2005 முதல் ஒரு பெண் குழந்தையாக இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டு பெண் குழந்தைகள் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
பிறப்புச் சான்று (மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகம் / நகராட்சியர் அலுவலகம்)
பெற்றோரின் வயதுச் சான்று (பிறப்புச் சான்று /பள்ளிச் சான்று / அரசு மருத்துவரின் சான்று)
குடும்ப நல அறுவைச் சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை)
வருமானச் சான்று
ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) அல்லது ஊர் நல அலுவலர் / சென்னை மாவட்டம் மட்டும் வட்டாட்சியர் அலுவலகம்)
பிறப்பிடச் சான்று (விண்ணப்பிக்கும்போது பெற்றோர் / அவர்களது பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்துள்ளனர் எனக் குறிப்பிட்டு வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலர்:
மாவட்ட சமூக நல அலுவலர்கள்,விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்),மகளிர் ஊர் நல அலுவலர்.
குறிப்புகள்:
வைப்புத் தொகை ரசீது பெறப்பட்ட ஆறாம் ஆண்டு முதல் சூ1,800 பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு: மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். விண்ணப்பித்தும் உதவி கிடைக்கப் பெறாதவர்கள் இந்தியன் குரல் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும் 94443 05581
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனுடைய ஆண்கள் / பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு இத்திட்டத்தில் தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்:
கல்வித்தகுதி இல்லை.
20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் சூ24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
ஆதரவற்றோர் / கைவிடப்பட்டவர் / விதவை / மாற்றுத்திறனுடையோர் என்பதற்கான சான்றிதழ்.
குடும்ப வருமானச் சான்றிதழ்
வயதுச் சான்றிதழ்
விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.
Friday, May 23, 2014
மகாபாரதம் படிப்பது எப்படி
http://www.sramakrishnan.com/
மகாபாரதம் முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்,
இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன்
மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப்பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்
வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும், ஆனால் மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம், அதன் நுண்மையான அம்சங்கள், கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், ஊடாடும் பண்பாட்டு சிந்தனைகளை ஆழ்ந்து கற்க விரும்பினால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகாலம் தேவைப்படும்,
காரணம் ஒவ்வொரு பருவத்தையும் புரிந்து கொள்ள மேலும் அதிகமாக வாசிக்க வேண்டியது வரும்,
என் வரையில் மகாபாரதம் என்பது வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டிய புத்தகம், அதை ஒரு போதும் வாசித்து முடிக்க இயலாது, ஒரு சிகரத்தைப் போல அதை ஏறுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் முயற்சிக்க வேண்டும், அது தரும் வாசிப்பு அனுபவம் அலாதியான ஒன்று,
மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்டது,மொத்தமாக பதிமூன்று ஆயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பக்கம் வரக்கூடியது, இதற்கு காரணம் சில பதிப்புகளில் கிளைகதைகள் துண்டிக்கபட்டிருக்கின்றன, கிரேக்க காப்பியங்களை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம், மகாபாரத கதாபாத்திரங்களை அறிந்து கொள்வதற்காக பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள who is who in the Mahabharata- subash Mazumdar என்ற சிறிய நூலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
ஆரம்பநிலையில் மகாபாரதம் படிக்க விரும்புகின்ற பலரும் ராஜாஜியின் வியாசர் விருந்தினைத் தேடி வாசிக்கிறார்கள், இது மிகவும் சுருக்கப்பட்ட மகாபாரதம், பிளாஸ்டிக்கில் செய்த தாஜ்மகால் பொம்மை போன்றது, ஒரிஜினல் மகாபாரதம் முழுமையாகத் தமிழில் வெளியாகி உள்ளது, அதைக் கும்பகோணம் பதிப்பு என்பார்கள், இந்தப் பதிப்பு வாசிக்க சற்றே சிரமம் தரக்கூடியது, காரணம் அதன் மணிப்பிரவாள நடை,
இதை வாசிப்பதற்கு முன்னதாக மகாபாரதம் வாசிப்பதற்கென சில எளிய வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
மகாபாரத மூலப்பிரதியை வாசிப்பதற்கு அடிப்படையாக நான்கு முக்கிய வழிகளை கைக்கொள்ள வேண்டும்,
ஒன்று மகாபாரதம் சார்ந்த எளிய கதைசுருக்கங்களை, நாட்டார்கதைகளை வாசித்துவிடுவது,
இரண்டாவது மகாபாரதம் பற்றிய புனைகதைகள், நாவல்கள், மறுஉருவாக்கங்கள், நாடகங்களை வாசிப்பது,
மூன்றாவது மகாபாரதம் குறித்த ஆய்வுகள், விமர்சனக் கட்டுரைகள், தத்துவ உரைகள் போன்றவற்றை வாசிப்பது,
நான்காவது நிகழ்த்துகலைகளான நாடகம், கூத்து, சினிமா போன்றவற்றிலும், சடங்குகளிலும், ஒவியம் சிற்பம் போன்ற நுண்கலைகளிலும் மகாபாரதம் எப்படி இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வது, இந்த நான்கு வழிகளில் ஊடாடித் தான் மூலநூலை வாசிக்க முடியும்
ஒருவேளை நீங்கள் நேரடியாக மூலநூலை வாசிக்க ஆரம்பித்தால் கூட மேற்சொன்ன வழிகள் உங்களுக்குப் பின்னால் தேவைப்படக்கூடும்
மகாபாரதம் படிப்பதற்கு முன்பு சில அடிப்படை எண்ணங்களை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்
1) ஒரே மூச்சில் மகாபாரதம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்,
2) மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
3) மகாபாரதம் வாசிக்கையில் அது என்றோ நடந்த உண்மையா, அல்லது கற்பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையைச் சற்று தூர வைத்துவிட்டு புத்தகத்தை படித்துக் கொண்டு செல்ல வேண்டும்
4) மகாபாரதம் பண்டைய இந்தியாவில் நடைபெறும் கதை, ஆகவே அன்றுள்ள நிலவெளி, அதன் ஆறுகள், மலைகள், இனக்குழுக்களின் வரலாறு ஆகியவற்றின் எளிய அறிமுகம் அவசியம் தேவை
5) மகாபாரதம் ஒரு புனித நூல் என்ற எண்ணத்துடன் படிக்க அணுக வேண்டாம், அது ஒரு மாபெரும் காப்பியம், இந்தியாவின் மாபெரும் நினைவுத்திரட்டு, ஒரு சமூகம் தனது நினைவுகளை கதைவடிவமாக மாற்றி வைத்திருக்கிறது, ஆகவே நாம் பல்வேறு நினைவுகளின் ஊடே சஞ்சாரம் செய்கிறோம் என்பதே வாசிப்பதற்கான தூண்டுதல். பகவத்கீதையை எப்போதுமே தனியாக வாசிப்பதே சிறந்த ஒன்று
6) மகாபாரதம் படிப்பதை விடவும் வாசித்துக் கேட்பது முக்கியமானது, அதற்கு ஒரு ஆசான் தேவை, நான் அறிந்தவரை வில்லிபுத்தூரார் பாரதத்தை கரைத்துக்குடித்தவர் பேராசிரியர் ஞானசம்பந்தம், அவரை நாம் நகைச்சுவை பேச்சாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் சிறந்ததொரு மகாபாரத வல்லுனர், அவரைப் போல தேர்ந்த ஆசான் ஒருவர் வாசிப்பிற்கு துணை செய்ய அவசியம், அல்லது சமஸ்கிருதம் அறிந்த ஒரு அறிஞரின் துணை அவசியமானது
7) மகாபாரதம் படிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது நாம் முன்பு கேட்டு அறிந்துள்ள அறைகுறையான மகாபாரதக் கதைகள் மற்றும் சம்பவங்கள், அந்தக் கதை இல்லையே, இந்தக் கதாபாத்திரம் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி சதா மனதிற்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும், அதையும் ஒரங்கட்டிச் செல்லுங்கள்
8) மகாபாரதத்தை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டே போவது தான் சிறந்த வழி, அதற்கு முதலில் எளிமையாக ஒருமுறை அதன் கதையை வாசித்துவிடுங்கள், இது போன்ற எளிய அறிமுகத்திற்கு தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் / விகடன் பிரசுர வெளியீடு, அமர் சித்ரா கதா காமிக்ஸ், மற்றும் பெரிய எழுத்து மகாபாரதக் கதை உதவக்கூடும்,
9) அதன்பிறகு கே எம் முன்ஷி எழுதிய கிருஷ்ணா அவதார தொகுதிகள்
வாசிக்கலாம், இது எட்டு தொகுதிகள், பாரதிய வித்யாபவன் வெளியிட்டுள்ளது
Dr. K.M. Munshi – Krishnavatara I: The Magic Flute. Krishnavatara II: The Wrath of an EmperorKrishnavatara III: The Five Brothers,Krishnavatara IV: The Book of Bhima, Krishnavatara V: The Book of Satyabhama‘, Krishnavatara VI: The Book of Vedavyaasa The Master, Krishnavatara VII: The Book of Yudhishthira, Krishnavatara VIII: The Book of Kurukshetra (incomplete) இந்த தொகுதிகள் தமிழில் வெளியாகி உள்ளன
10) அதன் பிறகு உரையுடன் கூடிய வில்லிபுத்தூரார் பாரதம், மற்றும் நல்லாம்பிள்ளை பாரதம் இரண்டினையும் வாசிக்க வேண்டும், நல்லாப்பிள்ளை பாரதம் கி.பி. 1888இல் வெளியானது, , 2007ல் புதிய மறுபதிப்பு வந்துள்ளது, அரவான் களப்பலி வியாச பாரதத்தில் கிடையாது, ஆனால் நல்லாம்பிள்ளை மற்றும் வில்லிபாரத கதைகளில் உள்ளது, ஆகவே இது போன்ற தமிழகம் சார்ந்த கிளைக்கதைகளுக்காக இவை அவசியம் வாசிக்கப்பட வேண்டும், கூடுதலாக விருப்பமுள்ளவர்கள் பெரிய எழுத்து பவளக்கொடி, அல்லிஅரசாணி மாலை போன்ற நூல்களை வாசிக்கலாம்
11) மகாபாரதத்தை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகின்றவர்கள் Kisari Mohan Ganguli,பதிப்பை வாசிக்கலாம், இது பழமையான ஆஙகில மொழியாக்கம், ஆனால் மூலத்தோடு நெருக்கமாக உள்ளது, இந்த பதிப்பு முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது,Mahabharata with commentary of Nilakantha - Gopal Narayan and Co., Bombay என இன்னொரு பதிப்பும் ஆங்கிலத்தில் உள்ளது , எளிமையான வாசிப்பிற்கு R. K. Narayan சுருக்கமாக வெளியிட்டுள்ள The Mahabharata வாசிக்கலாம். Dr. P. Lal கவிதை நடையில் ஒரு மொழியாக்கம் செய்திருக்கிறார்.
12) எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி, எஸ் எல் பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பிகே பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா, சோ வின் மகாபாரதம், நா, பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல். ஜெயமோகன் எழுதிய, பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel, பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும் பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி எஸ் ராமையாவின் தேரோட்டி மகன், எம் வி வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உப பாண்டவம் போன்றவற்றைப் படிக்கலாம்
13) கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being Good. Gender and Narrative in the Mahabharata,Brodbeck & B. Black (ed.): Routledge. Reflections and Variations on the Mahabharata, -T.R.S.Sharma, Sahitya Akademi. Great Golden Sacrifice of The Mahabharata- Maggi Lidchi Grassi . Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel. The Questionable Historicity of the Mahabharata, by SSN Murthy. யட்சப் பிரசனம், விதுரநீதி, போன்றவற்றை படிக்கலாம்
14) இதுபோலவே பீட்டர் புரூக்கின் மகாபாரதம் நான்குமணி நேரம் ஒடக்கூடிய திரைப்படம், இதற்குத் திரைக்கதை எழுதியவர் ஜீன் கிளாடே கேரியர், இது மகாபாரதம் பற்றிய நமது மரபான எண்ணங்களை மாற்றி அமைக்க கூடியது
15) பதினெட்டு நாள் தெருக்கூத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தால் மக்கள் மனதில் மகாபாரதம் எப்படி உள்ளது என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும், நான் தெருக்கூத்து குழுவோடு ஒன்றரை மாதம் உடன் தங்கி அலைந்திருக்கிறேன்,
16) இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்
17) இதன் பிறகு மகாபாரத மூலநூலை வாசிக்க முயல வேண்டும், அதற்கு சிறந்த புத்தகம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு, இது நேரடியாக சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது, இதை கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் மறு பதிப்புரிமை பெற்று வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.
பெரும்பான்மையான மகாபாரத பர்வங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் ஸ்ரீநிவாஸாசாரியார் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்
அன்று மகாபாரதப் பதிப்புகள் முன்வெளியீட்டு திட்டத்தில் விற்கபட்டிருக்கின்றன, ஆகவே இன்றும் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதி பழைய புத்தக கடைகளில் மகாபாரத பதிப்புகள் பழைய புத்தகமாக கிடைக்கின்றன, நானும் கோணங்கியும் அப்படி தேடித்தேடி முழுமையான மகாபாரதத் தொகுதிகளை சேகரித்து வைத்திருக்கிறோம்
கும்பகோணம் மகாபாரதப் பதிப்பு இன்று விற்பனைக்கு கிடைக்கின்றது
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.Venkataramanan
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
மொத்த விலை ரூ4500,
**
மனிதர்கள் தனக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை பல்வேறு நிலைகளில் விளக்குவதே ராமாயணம், விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம், இரண்டும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன
••
இதிகாசங்கள் பெருங்கடலைப் போன்றவை, அதன் வெளித்தோற்றம் ஒரு விதமாகவும் உள்கட்டுமானம் விரிந்து கொண்டே போவதாகவும் இருக்கும், இதிகாசங்களை புரிந்து கொள்ள கற்பனை மிக அவசியமானது,
••
ஒரு கதாபாத்திரம் கூட தேவையின்றி இடம் பெற்றிருக்காது, ஆகவே இதில் இடம் பெற்றுள்ள சிறுகதாபாத்திரங்கள் கூட தனித்து ஒளிரக்கூடியவர்களே
••
மகாபாரதம் எனும் கதைக்கு முதுகெலும்பாக இருப்பவர் பீஷ்மர், அவர் தான் கதையின் மையவிசை, அவர் ஒருவருக்குத் தான் சமமான எதிர்கதாபாத்திரம் கிடையாது,
••
நிறைய இடைச்செருகல்கள் கொண்டது மகாபாரதம் என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதில் புதிது புதிதாக கிளைக்கதைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன,
•••
மகாபாரதம் வாசிக்க விரும்புகிறவர் ஒருமுறை கங்கையை முழுமையாக பார்த்து கடந்து வர வேண்டும், அப்போது தான் மகாபாரத நிலவியலை உள்வாங்கிக் கொள்ள முடியும்
••
திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கையிலே வைத்திருக்க வேண்டிய புத்தகம் மகாபாரதம் என்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர், காரணம் அத்தனை திரைக்கதை உத்திகள், முடிச்சுகள் உள்ளன, எம்டி வாசுதேவன் நாயர் வைஷாலி என மகாபாரத கிளைக்கதை ஒன்றினைத் திரைக்கதையாக எழுதியிருக்கிறார், சிறந்த படமது, கர்ணன், மாயாபஜார், வீர அபிமன்யூ, ஆகிய மூன்றும் மகாபாரதம் தொடர்புடைய தமிழ் படங்கள், மூன்றிலும் மிகை அதிகம்
••
ஷேக்ஸ்பியருக்கு புதிய பதிப்புகள் வருவது போல யாராவது முழுமையான ம்காபாரதத்தை புதிய மொழியில் அழகிய பதிப்பாக கொண்டுவந்தால் நிச்சயம் அது பெரிய வரவேற்பைப் பெறும், என் விருப்பம் இந்தப் பணியை எழுத்தாளர் பிரபஞ்சன் மேற்கொள்ள வேண்டும் என்பது. அதற்கு யாராவது முழுமையாக நிதிஉதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்
••
Subscribe to:
Posts (Atom)